Published:Updated:

நாசா ராக்கெட்டில் பறக்கவிருக்கும் கரூர் மாணவர்களின் நானோ சாட்டிலைட்... என்ன ஸ்பெஷல்?

அருண், அட்னான், கேசவன்
அருண், அட்னான், கேசவன் ( படம்: விகடன் / நா.ராஜமுருகன் )

அடுத்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அனுப்பவிருக்கும் எஸ்.ஆர்-7 ராக்கெட் மூலம், இம்மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்தச் சிறிய ரக சாட்டிலைட்டும் விண்வெளிக்குப் பறக்க இருக்கிறது.

கரூர் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து வடிவமைத்துள்ள சிறிய வடிவிலான சாட்டிலைட் ஒன்று, அடுத்த ஆண்டு நாசா விண்வெளிக்கு அனுப்பவிருக்கும் ராக்கெட்டில் சேர்ந்து பயணிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்ஸி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அட்னான், அருண், மற்றும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ இரண்டாம் ஆண்டு படிக்கும் தென்னிலையைச் சேர்ந்த கேசவன் ஆகியோர் இணைந்து, சிறிய அளவிலான இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அனுப்பவிருக்கும் எஸ்.ஆர்-7 ராக்கெட் மூலம், இம்மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்தச் சிறிய ரக சாட்டிலைட்டும் விண்வெளிக்குப் பறக்க இருக்கிறது. இதுகுறித்து மாணவர்கள் கேசவன், அட்னான் மற்றும் அருண் ஆகியோரிடம் பேசினோம்.

கேசவன், அட்னான் அருண்
கேசவன், அட்னான் அருண்
படம்: நா.ராஜமுருகன்

``சிறுவயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் எங்கள் மூன்று பேருக்கும் ஆர்வம் அதிகம். நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேர்னிங் அமைப்பு இணைந்து, க்யூப் இன் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சிப் போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில், 80 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் போட்டியில் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால், இறுதிப் போட்டிக்குத் தேர்வாகவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தோம்.

அதன்படி, இரும்பைவிட100 மடங்கு வலிமையான கிராபோன் பாலிமர் என்ற மெட்டீரியலில், 64 கிராம் எடை மற்றும் 3 செ.மீ சுற்றளவில் உள்ள இந்த சாட்டிலைட்டை வடிவமைத்தோம். உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோள்களில் ஒன்றான இதற்கு, `இண்டியன் சாட்' எனப் பெயரிட்டோம். தகவல் தொழில்நுட்பத்தில், 13 வகையான தகவல்களை சென்சார் மூலம் கண்டறியும் தன்மை கொண்டது இது. ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றியும் இந்த சாட்டிலைட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சிறிய சாட்டிலைட்
சிறிய சாட்டிலைட்
படம்: நா.ராஜமுருகன்

சோலார் சக்தியில் இயங்கக்கூடிய இந்த சாட்டிலைட், 3.3 வோல்ட் திறனில் இயங்கும். அதற்குரிய மின் சக்தியை, செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களிலிருந்து பெற முடியும். எங்களுக்கு இதற்குப் பயற்சி வழங்கிய ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா நிறுவனம் மற்றும் அரசுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர்களுக்கு நன்றி. நாசாவின் ஐ டூ லேர்னிங் அமைப்பு மூலம், க்யூப் இன் ஸ்பேஸ் போட்டித் தேர்வில் இந்த சாட்டிலைட் கருவி தேர்வு பெற்றுள்ளது.

உலகம் முழுக்க 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான இளம் போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். அதில், எங்கள் வடிவமைப்புதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தகவல் அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் வடிவமைத்த இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளிக்கு அனுப்பப்பட்டால், உலகிலேயே மிகச் சிறிய எடை கொண்ட சாட்டிலைட் கருவி இது என்ற சிறப்பைப் பெறும்.

சிறிய சாட்டிலைட்
சிறிய சாட்டிலைட்
படம்: நா.ராஜமுருகன்

கிராமத்தில் உள்ள மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்று இதன்மூலம் நிரூபித்துள்ளோம். இந்தச் செயற்கைக்கோள் அடுத்த வருடம் ஜூன் மாதம், நாசாவின் சவுண்ட் ராக்கெட் 7 மூலம், துணை சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இதன் மூலம், எங்களின் மிகப்பெரிய கனவு நிறைவேறியுள்ளது. அறிவியல் துறையில் இன்னும் பல சாதனைகளைச் செய்ய, இது எங்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்" என்றார்கள் கோரஸாக!

இந்த சாட்டிலைட் வடிவமைப்புக்காக, கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் சிவா கல்வி அறக்கட்டளை இரண்டும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்துள்ளன.

வாழ்த்துகள் கைஸ்!

அடுத்த கட்டுரைக்கு