Published:Updated:

கரூர்: பல வருடப் போராட்டம்... வந்தது 108 ஆம்புலன்ஸ்! - சாதித்த கடவூர் இளைஞர்கள்

புதிய 108 ஆம்புலன்ஸ்
புதிய 108 ஆம்புலன்ஸ் ( நா.ராஜமுருகன் )

பத்தாவது படித்துவந்த ஒரு சிறுமி, உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, பற்றவைத்து தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க. அவங்களைக் காப்பாத்த, 108 ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணினோம். ஆனா, 2 மணி நேரம் கழிச்சு 108 ஆம்புலன்ஸ் ஆர அமர வந்துச்சு...

பல வருடங்களாக தங்கள் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் இல்லை என்று தொடர் போராட்டம் நடத்திவந்த இளைஞர்களின் முயற்சியைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு புதிதாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு வழங்கியிருப்பதால், பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராடிய இளைஞர்கள்
ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராடிய இளைஞர்கள்
நா.ராஜமுருகன்
கரூர்: `அமராவதி ஆற்றில் கழிவு கலக்கப்படுகிறதா?' - பரபரக்கவைத்த அதிகாரிகளின் ஆய்வு

கரூர் மாவட்டத்தின், தென்திசையின் கடைக்கோடி எல்லையாக இருக்கிறது கடவூர். தனி தாலுகாவான கடவூரைச் சுற்றி, 32 குக்கிராமங்கள் உள்ளன. இங்கே சுமார் 16,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. வெளிப்பகுதியில் இருந்து இந்த கடவூருக்கு மலைகளைத் தாண்டி வந்துபோக மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இதனால், இந்தப் பகுதியே தனித்தீவாக இருக்கிறது. இங்கே ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவந்தாலும், 108 ஆம்புலன்ஸ் சேவை கடவூரில் இல்லாமல்தான் இருந்தது. இந்தப் பகுதிக்கு, 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள குஜிலியம்பாறை, 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மணப்பாறை, 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அய்யலூர், 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மயிலம்பட்டி என்று ஏதோ ஒரு பகுதியில் இருந்துதான் வர வேண்டும் என்கிற நிலைமை.

108 வாகன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் இளைஞர்கள்
108 வாகன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

இதில், மயிலம்பட்டி மட்டுமே கரூர் மாவட்டத்தில் உள்ளது. மற்ற பகுதிகளெல்லாம் திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருப்பதால், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் கடவூருக்கு வருவது குதிரைக் கொம்பாக இருப்பதாக மக்கள் புலம்பிவந்தார்கள். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்று 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தால், இரண்டு மணி நேரம் கடந்து வந்து மக்களை நொந்துபோக செய்திருக்கிறது ஆம்புலன்ஸ். இதனால், அந்தப் பகுதி இளைஞர்கள் தொடர் போராட்டம், புகார் மனுக்கள் அனுப்புதல் என்று விடாமல் முயன்றார்கள். அதன் விளைவாக, கடவூர் பகுதிக்கு புதிதாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு ஒதுக்க, மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள்.

இளைஞர்களை ஒன்று திரட்டி இதற்காகத் தொடர் முயற்சிகள் மேற்கொண்ட கடவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம்.

``கடவூர் தனி தாலுகா. ஆனால், இங்கே எந்த அடிப்படை வசதியும் கிடையாது. அதைவிடக் கொடுமையான விஷயம் என்னன்னா, இங்கு யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்று நாங்க அரக்கபறக்க போன் பண்ணினா, ஆடி அசைஞ்சு திருவாரூர் தேர்போல மெதுவாத்தான் 108 ஆம்புலன்ஸ் வரும். எங்க பகுதி மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க. `ஏன் லேட்டா வந்தீங்க?'னு கேட்டா, `உங்க பகுதிக்கு வர்றதே பெருசு'னு எகத்தாளமா பதில் சொல்வாங்க.

பாலசுப்ரமணி
பாலசுப்ரமணி
நா.ராஜமுருகன்

'எங்க பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வேணும்'னு மக்கள் பல வருஷமா கோரிக்கைவெச்சுக்கிட்டு வந்தாங்க. ஒண்ணும் நடக்கலை. அதனால இளைஞர்கள் நாங்க தொடர்ந்து மூணு வருஷமா கிராம சபைக் கூட்டத்தில் இது பற்றி கோரிக்கைவெச்சுக்கிட்டு வந்தோம். அதேபோல், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஆரம்பிச்சோம்.

100 மனுக்களுக்கு மேல கொடுத்தோம். அதோடு, சி.எம் செல், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், அம்மா அழைப்பு மையத்தில் தொடர் புகார்னு பல வகையிலும் போராடிப் பார்த்தோம். கடந்த ஏப்ரல் மாதம், பத்தாவது படித்து வந்த ஒரு சிறுமி, உடம்பில் மண்ணெண்ணெயை ஊத்திக்கிட்டு, பத்தவெச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவங்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாத்த, 108 ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். ஆனா, உடனே வாகனம் வரலை. அந்தச் சிறுமி இறந்துட்டாங்க. ஆனா, ரெண்டு மணி நேரம் கழிச்சு 108 ஆம்புலன்ஸ் ஆர அமர வந்துச்சு.

ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராடிய இளைஞர்கள்
ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராடிய இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கோபமான இளைஞர்களும், மக்களும் அந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறிச்சு, போராட்டம் பண்ணினோம். சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறையும் வந்து எங்களை சமாதானம் பண்ணினாங்க. ஆனா, நாங்க விடாம போராடினோம். `108 ஆம்புலன்ஸ் வாகனம் கடவூருக்கு வர ஏற்பாடு பண்றோம்'னு உறுதி தந்தாங்க. அதனால், போராட்டத்தைக் கைவிட்டோம். எங்க போராட்டத்தின் விளைவாக, இப்போ புதிதாக ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை கடவூர் பகுதிக்கு ஒதுக்கி, எங்களின் பல வருட பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவெச்சிருக்காங்க. இனி, எங்களுக்கு பிரச்னையில்லை" என்றார் மகிழ்ச்சியாக!.

அடுத்த கட்டுரைக்கு