Published:Updated:

ரத்தக்காடாகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு!

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
காஷ்மீர்

இந்து பண்டிட்டுகள்... முஸ்லிம்கள்... வெளிமாநிலத்தவர்... காவல்துறையினர்... பாரபட்சமின்றி படுகொலை நிகழ்த்தும் தீவிரவாதிகள்...

ரத்தக்காடாகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு!

இந்து பண்டிட்டுகள்... முஸ்லிம்கள்... வெளிமாநிலத்தவர்... காவல்துறையினர்... பாரபட்சமின்றி படுகொலை நிகழ்த்தும் தீவிரவாதிகள்...

Published:Updated:
காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
காஷ்மீர்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் தீவிரவாதம் என்பதே குறைந்துபோய்விட்டது என மத்திய அரசு கூறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் 8 பேர் ஒரே வாரத்தில் தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் பதற்றநிலை, மத்திய அரசின் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

தொடர் கொலைகள்!

கடந்த மே 25-ம் தேதி நள்ளிரவில், காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் வசித்துவந்த இஸ்லாமியத் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட், அவரது வீட்டுக்கு வெளியேவைத்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேநாள், பாரமுல்லாவிலுள்ள மதுபானக்கடையில் பணியாற்றிவந்த ரஞ்சித் என்பவர், தீவிரவாதிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த மே 31-ம் தேதி, குல்காம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றிவந்த பண்டிட் ஆசிரியை ரஜ்னி பாலாவைச் சுற்றிவளைத்துச் சுட்டுக் கொன்றனர்.

ரத்தக்காடாகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு!

தொடர்ந்து, கடந்த ஜூன் 1-ம் தேதி தீவிரவாதிகளால் சுடப்பட்ட பரூக் அகமது ஷேக் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஜூன் 2-ம் தேதி, குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளராகப் பணியாற்றிவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார், வங்கியில்வைத்தே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதேநாளில், அண்டை மாவட்டமான சோபியானில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதில் மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். அன்றிரவே புட்காம் மாவட்டத்திலுள்ள ஒரு செங்கல் சூளைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தில்குஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஞ்சாப்பைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளர் ராஜன் படுகாயமடைந்தார்.

இப்படியாக, கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை மூன்று காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பத்துக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``காஷ்மீரின் வரைபட மாற்றத்தில் ஈடுபடும் எவருக்கும் இது போன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்” என எச்சரித்திருக்கின்றனர். “காஷ்மீர் 370-வது சட்டப் பிரிவு நீக்கம், இரு யூனியன் பிரதேசங்களாக மாநிலப் பிரிப்பு, பண்டிட்டுகள் மீள்குடியமர்வு, வெளிமாநிலத்தவர்கள் குடியேற்றம், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், இது போன்ற தொடர் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறார்கள்” என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

“அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்!”

தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாதுகாப்புப் படையும், காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்திவருகின்றன. தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதாக, காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவங்களைக் கண்டித்துப் பலரும் மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவரும் நிலையில், பா.ஜ.க தனது எட்டு ஆண்டுக்கால ஆட்சியைக் கொண்டாடுவதில் தீவிரம்காட்டிவருகிறது” என விமர்சித்திருக்கிறார். ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும்,

எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, இதை மோடி அரசின் தோல்வியாகக் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, ``காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும், காஷ்மீர் இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோருவதற்குத் தேவை வந்திருக்கிறது. சமீபகாலமாகவே, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதால் அமித் ஷாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

ரத்தக்காடாகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு!

மற்றொருபுறம் `அரசாங்கம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனக் கோரி, இந்து பண்டிட்டுகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ``நாங்கள் வாழும் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வீடுகளைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம்” எனக் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், ஜூன் 3-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதில், `காஷ்மீர் பண்டிட்டுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாமே தவிர, அவர்களை காஷ்மீரைவிட்டு வெளியேற்றப்போவதில்லை’ என்று முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், அரசுக் கட்டுப்பாடுகளையும் மீறி காஷ்மீரின் மேட்டன் நகர், ஷேக்போரா, பாராமுல்லா, குப்வாரா பகுதிகளில் வசித்துவந்த பண்டிட் குடும்பங்களில் 80 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளைக் காலிசெய்து, இரவோடு இரவாக ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், ``காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீருக்கு வெளியே பணியாற்ற முடியாது என்ற நிபந்தனையை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

காஷ்மீர் மக்களுக்கு உடனடித் தேவை... பாதுகாப்பான சூழலும், தாக்குதல்களற்ற அமைதியான வாழ்வும். அதை உறுதிப்படுத்தவேண்டியது அதன்மீது அதிகாரம் செலுத்தும் மத்திய அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism