Published:Updated:

அபராதம், அடி உதை, ஊர் விலக்கம்! - கட்டப்பஞ்சாயத்தில் பலியாகும் பழங்குடி மக்கள்

மலைவாழ் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
மலைவாழ் மக்கள்

எம்பொண்ணு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அசலூர்காரப் பையன் ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சு.

அபராதம், அடி உதை, ஊர் விலக்கம்! - கட்டப்பஞ்சாயத்தில் பலியாகும் பழங்குடி மக்கள்

எம்பொண்ணு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அசலூர்காரப் பையன் ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சு.

Published:Updated:
மலைவாழ் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
மலைவாழ் மக்கள்

‘சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்’ என்று நாம் பெருமை கொள்ளும் நேரத்தில், ‘லட்சங்களில் அபராதம், அடி உதை, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல் என கட்டப்பஞ்சாயத்துக் கொடுமைகளிலிருந்து இன்னமும் எங்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை’ என்ற கதறல் கேட்கிறது, பெரம்பலூர் மலைவாழ் மக்களிடமிருந்து!

பெரம்பலூர் மாவட்டம், பச்சைமலை அடிவாரத்திலுள்ள கொட்டாரக் குன்று, சின்ன முட்லு, மலையாளப்பட்டி, பூமிதானம், கோரையாறு உள்ளிட்ட சிற்றூர்களில் மலைவாழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதிகளில், ‘கிராமக் கட்டுப்பாடு’ என்கிற பெயரில், அப்பாவி மலைவாழ் மக்களை அடிமைகளாக்கிக் கொடுமை செய்துவருவதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன.

மலைவாழ் மக்கள்
மலைவாழ் மக்கள்

இது குறித்துப் பேசுகிற பச்சைமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த ஊர் மக்கள் ‘‘இங்குள்ள மலைவாழ் கிராமம்தோறும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ‘மூப்பன், கவுண்டன், கங்காணி’ பட்டத்தைக் கொண்ட குறிப்பிட்ட குடும்பத்தினர் தான் ஊர்த் தலைவர்களாக இருந்துவருகிறார்கள். இங்கே இவர்கள் வைத்ததுதான் சட்டம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு காரணங்களைக் கூறி, 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 நபர்களை ஒரே நேரத்தில் ஊரைவிட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். கொட்டாரக் குன்று கிராமத்தில், மூப்பனின் பேச்சை எதிர்த்து காவல் நிலையம் சென்ற சிலரை, ஊர்க் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி, மரத்தில் கட்டிவைத்து விடிய விடிய அடித்தார்கள். இவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், இந்த விவகாரங்களில் போலீஸார் தலையிட மாட்டார்கள்’’ என்று சொல்லித் திகிலூட்டினார்கள்.

மலையாளப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி நம்மிடம், “நாங்க ஏழு குடும்பம் ஒரே இடத்துல வசிக்கிறோம். போன மாசம் ரோடு போடுறதுக்காக எங்க ஏரியாவுல இடத்தை அளந்தாங்க சாமி. அப்போ அங்கே வந்த மூப்பனான அண்ணாதுரை, ‘ஒவ்வொருத்தரும் ஒங்களுக்கு பாத்தியப்பட்ட 10 அடி இடத்தை ஊருக்கு எழுதிவெய்யுங்க’ன்னு மிரட்டும் தொனியில சொன்னாருங்க. ஊருக்கு எழுதிவெய்யின்னு மூப்பன் வெளியே சொன்னாலும்கூட, அவர் கைகாட்டுற ஆளுக்குத்தான் நாம எடத்த எழுதிவைக்கணும். அதனால, ‘இது எங்க பட்டா இடம். நான் ஏன் எழுதிக் கொடுக்கணும்’னு நான் கேட்டது ஒரு குத்தமா சாமி... அன்னைக்கே ஊர் கூட்டம் கூட்டி, எங்க ஏழு குடும்பத்துக்கும் தலா 15,000 ரூபா தண்டம் போட்டுட்டாருங்க. பணத்தைக் கட்டலைன்னா, வீட்டு வாசலில் 8 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டிருவோம்னு சொன்னாங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி தோண்டுன பள்ளத்துல ஒருத்தரு விழுந்து செத்துப் போயிருக்காரு. அதை நினைச்சு பயந்துக்கிட்டு சிறுகச் சிறுகச் சேர்த்துவெச்ச ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்தேன். மிச்சக் காசைக் கொடுக்கிற வரைக்கும் என்னையும், மத்த ஆறு குடும்பங்களையும் ஊர் விலக்கம் பண்ணிட்டாங்க. அன்னாடம் கூலிக்குப் போற நாங்க அவ்வளவு காசுக்கு எங்கே போவோம் சாமி?” எனக் கலங்கினார்.

வெங்கட ப்ரியா
வெங்கட ப்ரியா

அதே ஊரைச் சேர்ந்த தனக்கொடி என்பவர், “எம்பொண்ணு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அசலூர்காரப் பையன் ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சு. உடனே, ‘எங்களைக் கேட்காம எப்படி மாற்றுச் சமூகத்துல கல்யாணம் பண்ணுனீங்க...’னு சொல்லி ரெண்டரை லட்ச ரூபா அபராதம் போட்டுட்டாங்க. உடனே பணத்தைக் கட்ட முடியாததால, எங்க குடும்பத்தையும் ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க. வேற வழியில்லாம சொத்துபத்தையெல்லாம் வித்து அந்தப் பணத்தைக் கட்டுனதுக்கு அப்புறம்தான் ஊருக்குள்ளயே சேர்த்தாங்க. இப்போ, மறுபடியும் என்னோட ‘பட்டா இடத்த 10 அடி ஊருக்கு எழுதிக் கொடு... இல்லேன்னா பணம் கொடு’னு மூப்பன், கவுண்டன், கங்காணி கேட்டாங்க. நிலத்தைக் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். பணம் கட்ட முடியலை. இப்போ மறுபடியும் ஊரைவிட்டு எங்களை விலக்கிவெச்சுட்டாங்க” என்றார் கண்ணீரை முந்தானையால் துடைத்தபடியே.

மூப்பனைக் கேட்காமல் பங்காளிகளுக்குள் நடந்த பாகப்பிரிவினைக்காக முதியவர் கண்ணுசாமி ஊர் விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவரின் பிரச்னையோ வேறு மாதிரி இருந்தது. “15 வருஷத்துக்கு முன்னாடி எம்பொண்ணு வேற சாதிப் பையனைக் கட்டிக்கிச்சுன்னு எம் பொண்ணு குடும்பத்தை ஊர் விலக்கம் பண்ணிட்டாங்க. இப்போ, என்னோட இன்னொரு பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சேன். அதுக்கு பத்திரிகை அடிச்சு ஊரெல்லாம் சொன்ன பின்னாடி, ‘ஏற்கெனவே கல்யாணம் பண்ணுன பொண்ணுக்காக 5 லட்சம் ரூபா அபராதம் கட்டுனாத்தான் இந்தப் பொண்ணு கல்யாணத்தை நடத்தவிடுவோம்’னு சொல்லி, என்னையும் ஊரைவிட்டு விலக்கிட்டாங்க. கடைசியில, கல்யாண விருந்துக்கு ஆசை ஆசையா சமைச்ச அத்தனை சோத்தையும் பன்னிகளுக் குத்தான் போட்டேன் சாமி” எனக் கதறினார் ரவிச்சந்திரன்.

துரைசாமி,  தனக்கொடி, ரவிச்சந்திரன், முருகன்
துரைசாமி, தனக்கொடி, ரவிச்சந்திரன், முருகன்

இதையடுத்து மூப்பன் அண்ணாதுரையிடம் புகார்களுக்கு விளக்கம் கேட்டோம். அவர் தரப்பில் விளக்கமளிக்க ஊர் கவுண்டனான முருகன் என்பவரை நம்மிடம் அனுப்பிவைத்தார். “இது காலங்காலமா வர்ற மரபுங்க. எங்களோட மூதாதையர்கள் செஞ்சதைத்தான் இப்போ நாங்க செய்றோம். மத்தபடி நாங்க யாரையும் ஊரைவிட்டு விலக்கிவெக்கிற தெல்லாம் கிடையாதுங்க. சும்மா சொல்றாங்க” என்றார் மழுப்பலாக.

காவல்துறை மீதான புகார்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட எஸ்.பி மணியிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே இந்தப் பிரச்னைகள் சம்பந்தமாக இரண்டு வழக்குகள் போட்டிருக்கிறோம். அதில், ஒரு வழக்கில் ஊர்த் தலைவர்கள் பெயில் வாங்கி விட்டார்கள். மற்றொரு வழக்கில், சம்பந்தப் பட்டவர்களைக் கைதுசெய்யச் சொல்லி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கட ப்ரியாவிடம் பிரச்னையைக் கொண்டுசென்றோம். ‘‘சுதந்திரமாக வாழவேண்டிய நாட்டில் சமுதாயத் தலைவர் என்கிற போர்வையில், ரௌடியிசம் செய்வதை என்னால் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

நாம் இருபத்தியோராம் நூற்றாண்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? வெட்கக் கேடு!