Published:Updated:

கீழடிக்கு இன்னொரு பெருமை!

டேனியல் விஜயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டேனியல் விஜயராஜ்

ஏதோ வெளிநாட்டு வேலைக்குப் போனோம்; நல்ல சம்பளம் வாங்குகிறோம் என்று சராசரியான நபராக நான் திருப்தியடைந்துவிடவில்லை.

கீழடிக்கு இன்னொரு பெருமை!

ஏதோ வெளிநாட்டு வேலைக்குப் போனோம்; நல்ல சம்பளம் வாங்குகிறோம் என்று சராசரியான நபராக நான் திருப்தியடைந்துவிடவில்லை.

Published:Updated:
டேனியல் விஜயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டேனியல் விஜயராஜ்

ஆச்சரியப்படுத்திய தொல்லியல் அடையாளங்களால் `தமிழரின் தாய்மடி’ என உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது கீழடி. அப்படிப்பட்ட பெருமைக்குரிய கீழடிக்கு, கூடுதலாக மற்றொரு பெருமையைத் தேடித்தந்துள்ளார் டேனியல் விஜயராஜ்!

கீழடியில் பிறந்து வளர்ந்த டேனியல் ஜெயராஜுக்கு, நர்சிங் சேவைக்கு வழங்கப்படும் உயரிய விருதான நைட்டிங்கேல் விருதை வழங்கி கௌரவித்துள்ளது இங்கிலாந்து அரசு. இந்த விருதைப் பெறும் முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் இந்த மதுரைக்காரர். சமீபத்தில் மதுரை வந்திருந்த டேனியல் விஜயராஜுக்கு ஊர்மக்கள் சார்பில் கீழடி அரசுப்பள்ளியிலும் அவர் பயின்ற மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, பசுமலை நர்சிங் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரிகளிலும் பாராட்டு விழா நடத்தினார்கள்.

கீழடிக்கு இன்னொரு பெருமை!

“சின்ன வயதிலிருந்தே பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக இருந்தது. அதை இலக்காக வைத்துப் படிக்க ஆரம்பித்தேன். நர்ஸ் பணிதான் அதற்கு சரியானதாக அமைந்தது. என் தந்தை சாமுவேல் விஜயராஜ், மதுரை மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அம்மா சரோஜினிபாய், கீழடியிலுள்ள அரசுப்பள்ளியில் பணிபுரிந்தார். கீழடிக்குப் பக்கத்தில் சிலைமானில்தான் எங்கள் வீடு இருந்தது. லண்டன் சவுத் டீஸ் மருத்துவமனையில் வேலையுள்ளதை அறிந்து 2001-ல் அங்கு சென்றேன். 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் மனைவி சாராளும் நர்ஸ் என்பதால், அவரும் லண்டனில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஒரே பெண். மோனிகா அங்குள்ள கல்லூரியில் படித்துவருகிறார்.

ஏதோ வெளிநாட்டு வேலைக்குப் போனோம்; நல்ல சம்பளம் வாங்குகிறோம் என்று சராசரியான நபராக நான் திருப்தியடைந்துவிடவில்லை. மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளை என் உறவினர்களாக நினைத்து சேவை செய்தேன். மருத்துவ சேவையைக் கடந்த பல உதவிகளைச் செய்தேன். பணி நேரம் போக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் என்னால் முடிந்த சமூகப் பணிகளைச் செய்துவருகிறேன். நான் ஒரு கிட்டாரிஸ்ட். அங்குள்ள இசைக்குழுவில் இணைந்து மேடைகளில் வாசித்துவருகிறேன்.

கீழடிக்கு இன்னொரு பெருமை!

கொரோனா காலத்தில் மருத்துவப்பணி என்பது ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு பணியாற்றினேன். நீரிழிவு போன்ற தீவிரமான நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அவர்களுக்கு அதிக கவனம் எடுத்து சிகிச்சை அளித்தேன். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால், எனக்கும், என்னால் என் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்து மறுபடியும் பணியாற்றினேன்.

மருத்துவப் பணியாளர்களின் சேவை எப்படி இருக்கிறது என்று, அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளிடம் கருத்து கேட்கும் வழக்கம் அங்கு நடைமுறையில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் என் பெயரைப் பல நோயாளிகள் அனுப்பிவைப்பார்கள். அந்த அடிப்படையில் கொரோனாவில் குணமடைந்த நோயாளிகள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, கடந்த ஆண்டு மருத்துவமனைக்குத் தெரிவித்தார்கள். மருத்துவமனை நிர்வாகம் அதை அரசுக்கு அனுப்பிவைத்தது. நோயாளிகள் அனுப்பும் கருத்துகள் மூலம் நைட்டிங்கேல் விருதுக்கு கடந்த ஆண்டு என்னைத் தேர்வு செய்தார்கள். இங்கிலாந்து போன்ற பெரிய நாட்டில் பாகுபாடு பார்க்காமல் என்னைத் தேர்வு செய்து விருது அளித்திருப்பதை ஒரு தமிழனாக நினைத்துப் பெருமைப்படுகிறேன். கொரோனா காலத்தில் விருது அறிவிக்கப்பட்டதால், அரங்க விழாவாக நடத்தாமல் இணைய வழியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று விருது வழங்கினார்கள்.

கீழடிக்கு இன்னொரு பெருமை!
கீழடிக்கு இன்னொரு பெருமை!

நல்ல வேலையில் சேர்வதற்கோ, நம் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைப்பதற்கோ பிரபலமான பெரிய பள்ளிகளில் படிக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப்போல் அரசுப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் ஆரம்பக் கல்வியைப் படித்தாலும் கிடைக்கும். அதேபோல் சாமானிய பிள்ளைகளையும் படிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி போன்ற கல்விக்கூடங்களை நான் மறக்க மாட்டேன். தற்போது அப்பள்ளி, கல்லூரிகளில் பாராட்டியதும், விருது கிடைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாராட்டியதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்நிறைவுடன்.