Published:Updated:

“சாணி வித்து சாப்பிட்டோம்... இப்போ அதுக்கும் வழியில்ல!” - கண்ணீரில் கீதாரிகள்

மாட்டு கிடை
பிரீமியம் ஸ்டோரி
News
மாட்டு கிடை

கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையும், அதனால் தொடரும் ஊரடங்கும் தமிழகத்தில் பெரும்பாலான மக்களை வறுமையில் தள்ளியிருக்கிறது.

‘‘காலங்காலமா ஊர் ஊரா போய் கிடை போட்டு, அதுல கிடைக்குற வருமானத்துல கஞ்சி குடிச்சிட்டிருந்தோம். இந்த ரெண்டு வருஷமா அதுக்கும் வழி இல்லாமப் போச்சு. ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திச்சுட்டு வர்ற நாங்க, கொரோனா ஊரடங்கால ரொம்பவே அவஸ்தைப்படுறோம். வயித்துப்பாட்டுக்குக்கூட வழியில்லாம போச்சு’’ - கிடை ஆடு, மாடு மேய்க்கும் கீதாரிகளின் வேதனைக்குரல் இது!

கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையும், அதனால் தொடரும் ஊரடங்கும் தமிழகத்தில் பெரும்பாலான மக்களை வறுமையில் தள்ளியிருக்கிறது. இந்தச் சூழலில் கிடை ஆடு மற்றும் மாடு வளர்க்கும் கீதாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் அதைவிடக் கொடுமை. வருடத்தில் பெரும்பாலான நாள்கள் ஊர் ஊராகச் செல்வதிலேயே கழிவதால், ஊராட்சி நிர்வாகங்கள் கூட இவர்களைக் கண்டுகொள்வதில்லை.

டெல்டா மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய தென் மாவட்டங்களிலும் கிடை மாட்டு கீதாரிகள், வரத்தாட்டு கீதாரிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஒரு கீதாரியின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட மேய்ப்பர்கள் இருப்பார்கள். வழிப்போக்கர்களைப்போல இவர்கள் கடந்து செல்லும் கிராமங்களில் விவசாயிகளைச் சந்தித்து, ‘நிலங்களில் தொழு அமைக்கலாமா?’ என்று கேட்பார்கள். அங்கு சில நாள்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு, கிடை போட ஒரு ஆடு அல்லது மாட்டுக்கு 3 அல்லது 5 ரூபாய் கூலி பெறுவார்கள். யாரும் அழைக்கவில்லை யென்றால், காடுகளின் அருகில் கிடை போடுவார்கள்.

“சாணி வித்து சாப்பிட்டோம்... இப்போ அதுக்கும் வழியில்ல!” - கண்ணீரில் கீதாரிகள்

கிடை தொழிலில் இயல்பாகவே இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். கால்நடைகளை ஊர் ஊராக ஓட்டிச் செல்லும்போது திருடர்களிடமிருந்து பாதுகாப்பது பெரும் சவால். அதைவிட சவால், போலீஸாருக்கு பதில் சொல்வது. மலைப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால், வனத்துறையினரைச் சமாளிக்க வேண்டும். கண்மாய், குளங்களில் கால்நடைகளைத் தண்ணீர் குடிக்கவைத்தால், குத்தகைக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையில்தான் கீதாரிகள் தங்களது மேய்ச்சல் தொழிலைச் செய்துவருகிறார்கள். இந்தப் பிரச்னைகளெல்லாம் போதாதென்று, கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டிலிருந்து கீதாரிகள் பலரும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தொடர் நஷ்டத்தால் கடனில் சிக்கிய சிலர், இந்தத் தொழிலே வேண்டாமென்று ஒதுங்கிவிட்டார்கள்.

இப்படியான கீதாரிகளில் ஒருவர்தான் மதுரை மைக்குடி முருகன். ‘‘திருப்பரங்குன்றம் பகுதியில மாடு மேய்ச்சுக்கிட்டுருக்கோம். கொரோனா காலத்துல அங்கருந்து மாட்டைப் பத்திட்டு வெளியேற முடியலை. மாட்டுக்கான தீவனம், மருந்துகளை வாங்க முடியலை. வருமானமும் போச்சு... சாணி வித்து சாப்பிட்டோம், இப்ப அதுக்கும் வழியில்லை. எங்க பார்த்தாலும் போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு. ஊர்ப் பக்கமும் போக முடியலை. கஞ்சி காய்ச்சறதுக்காகச் சேர்த்து வெச்சுருக்குற அரிசியும் தீர்ந்துட்டு வருது. நாங்க ஒரு வேளை கஞ்சி குடிச்சுட்டு, புள்ளை குட்டிங்களுக்கு அரை வயிறு கஞ்சி கொடுக்குறோம். எங்க ஜீவனத்துக்கு அரசாங்கம்தான் ஏதாச்சும் ஏற்பாடு செய்யணும்’’ என்றார் கண்ணீர் மல்க.

கிடை ஆடு வளர்க்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குறள் குருந்தலிங்கம், ‘‘ஊரடங்கால ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு ஆடுகளை ஓட்டிட்டுப்போக முடியலை. இ பாஸ்னு என்னென்னமோ சொல்றாங்க. அதுக்கெல்லாம் நாங்க எங்க போறது? எங்க பட்டினியைக்கூட பொறுத்துக்குவோம். கிடை போட முடியாததால, வாயில்லா சீவனுங்களும் வயித்துக்கு இல்லாம சீக்குப்பட்டு செத்துப்போறதைத்தாங்க தாங்கிக்க முடியலை... போக்குவரத்து இல்லாததால ஆட்டுப்புழுக்கையை விக்கக்கூட முடியலை’’ என்றார் வருத்தத்துடன்.

மதுரையைச் சேர்ந்த ‘தொழுவம்’ அமைப்பு நாட்டு ஆடு, மாடு இனங்களைப் பாதுகாக்கவும், கீதாரிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு கொரோனா ஊரடங்குச் சூழலில் கீதாரிகள் சந்தித்துவரும் பிரச்னைகள் பற்றி இணையவழி கருத்தரங்கை நடத்தியது. அதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், நபார்டு அதிகாரிகள் கலந்துகொண்டு கீதாரிகள் சந்தித்துவரும் பிரச்னைகளை அறிந்துகொண்டார்கள்.

‘தொழுவம்’ அமைப்பின் நிர்வாகி பேராசிரியர் பெரி.கபிலனிடம் பேசினோம். ‘‘கீதாரிகள் ஊர் ஊராகச் சென்று கால்நடை வளர்ப்பதால், பொது சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் வேறு வேலைவாய்ப்புகள் பற்றியும் இவர்களுக்குத் தெரிவதில்லை. நாடோடிகள்போல ஊர் ஊராகச் செல்வதால், பேரிடர் காலங்களில் அரசு தருகிற நிவாரண உதவிகள்கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் இடி, மின்னலில் பலியான 1,400 விவசாயிகளில் கீதாரிகள்தான் அதிகம். வெட்டவெளியில் கிடை அமைத்து வாழும் இவர்கள், திடீரென்று ஏற்படும் மழை, இடி மின்னல்களிலிருந்து தங்களையும் கால்நடைகளையும் காப்பாற்ற முடியாமல் பலியாகிறார்கள். நாம் யோசிக்காத இன்னொரு விஷயம்... தமிழகத்தில் பல பகுதிகளில் கீதாரிகள் ஆடு வளர்ப்பைக் கைவிட்டு வருவதால்தான், ஆட்டிறைச்சியின் விலை அதிகமாகியிருக்கிறது.

குருந்தலிங்கம், கபிலன்
குருந்தலிங்கம், கபிலன்

ஏற்கெனவே கீதாரிகளை ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்திவரும் நாங்கள் ஆடு, மாடுகள் மூலம் கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி, சந்தைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம். அந்தவகையில்தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் கீதாரிகள் சந்தித்துவரும் பிரச்னைகளை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த இணையவழிக் கூட்டத்தை நடத்தினோம்’’ என்றார்.

கீதாரிகளின் துயரங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்திருக்கிறது. உடனடியாக கீதாரிகளின் பிரச்னையை ஆலோசித்து, தக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் உறுதியாக.