Published:Updated:

கீழ் பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

கான்கிரீட் வாய்க்கால்
பிரீமியம் ஸ்டோரி
கான்கிரீட் வாய்க்கால்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டு, நபார்டு வங்கி உதவியுடன் 709 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

கீழ் பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டு, நபார்டு வங்கி உதவியுடன் 709 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

Published:Updated:
கான்கிரீட் வாய்க்கால்
பிரீமியம் ஸ்டோரி
கான்கிரீட் வாய்க்கால்

`கீழ் பவானி வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைப்பதா, கூடாதா?’ என்ற நீண்டகாலப் பிரச்னைக்கு தி.மு.க அரசிலாவது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ‘‘தி.மு.க-வும் இந்தப் பிரச்னையில் அரசியல்தான் செய்கிறது” என்று அதிர்ச்சி காட்டுகிறார்கள் பாசன விவசாயிகள்!

கோவை மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2.7 லட்சம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், 40,000 ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. ஆனாலும்கூட மிகவும் பழைமை வாய்ந்த இந்த வாய்க்காலிலுள்ள கசிவுகள் காரணமாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை என்ற புகார் நீண்டகாலமாக உள்ளது. இதையடுத்து 2009-ம் ஆண்டு பாசன வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற அப்போதைய தி.மு.க அரசு பிள்ளையார்சுழி போட்டது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டினார். ஆனால், ‘கான்கிரீட் தளம் அமைத்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோகும்’ என்று ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, திட்டம் கைவிடப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டு, நபார்டு வங்கி உதவியுடன் 709 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றைய சூழலில், தி.மு.க அரசும் கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் பணிக்காக ஆங்காங்கே பூமி பூஜை போட்டு திட்டப் பணிகளில் வேகம்காட்டத் தொடங்கியிருக்கிறது.

கீழ் பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

இந்த நிலையில், தி.மு.க-விலேயே சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ‘இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என்று தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். “ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட அரிய அணை மற்றும் வாய்க்கால் இது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, ‘இதை சிமென்ட்டில் கட்டலாமே...’ என்று கேட்டுள்ளனர். அதற்கு காமராஜர், ‘இது மழை மறைவு பிரதேசம்; குடிநீர்த் தட்டுப்பாடும் இருக்கிறது. எனவே கான்கிரீட் வேண்டாம்... மண்ணால் கட்டினால் கிணறு, குட்டை, போர்வெல் எல்லாம் ஊறிக்கொள்ளும்’ என்று சொல்லியிருக்கிறார். இது அரசால் கட்டப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட விவசாயிகள்தான் அதற்கான முழுப் பணத்தையும் வரியாகச் செலுத்தியுள்ளனர். எனவே விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியாது.

2009-ம் ஆண்டு தவறான வழிகாட்டுதலால், ‘வாய்க்காலில் கான்கிரீட் போடுகிறோம்’ என்று சொல்லி ஓட்டுக் கேட்டு இங்கு எங்கள் கட்சி தோல்வியடைந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது நபார்டு மூலம் மீண்டும் இதைச் செயல்படுத்த முயன்றனர். ஐந்து சதவிகித விவசாயிகள்கூட இதை ஆதரிக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போதே, ‘விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இதைச் செயல்படுத்த மாட்டோம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார். நானும் கடைமடைப் பகுதியில்தான் இருக்கிறேன். கடைக்கோடி கிராமமான மங்கலப்பட்டியைச் சேர்ந்த மக்களும்கூட ‘கான்கிரீட் வேண்டாம்’ என்றுதான் போராடிக்கொண்டிருக்கின்றனர்” என்கிறார் சிவசேனாபதி.

இதற்கிடையே, தி.மு.க-விலேயே மற்றொரு தரப்பினர் கான்கிரீட் திட்டத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிவருவதோடு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அழுத்தங்களையும் பொதுப்பணித்துறையின் வாயிலாகச் செய்துவருகின்றனர். “நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திட்டத்தைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அமைச்சர் சாமிநாதனும் அதற்கு ஆதரவு. ஆனால், அமைச்சர் முத்துசாமி, கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் திட்டத்தை எதிர்க்கிறார்கள். தி.மு.க-வின் 11 ஒன்றியச் செயலாளர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிராக துரைமுருகனிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சீனியர் அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் எதிர்த்து பேசவும் முடியாமல், வாக்களித்த மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி” என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

கீழ் பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

‘‘கான்கிரீட் திட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு தரப்பிலும் அரசியல்வாதிகள் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் திட்டத்தை ஆதரிக்கவே செய்கிறார்கள். தி.மு.க-வில்தான் அமைச்சர்கள், சீனியர்களிடையேகூட ஒருமித்த கருத்து இல்லை. மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டியவர்களே இரண்டு அணியாக நின்று குழப்ப அரசியல் செய்தால் பிரச்னைக்கு எப்படித் தீர்வு கிடைக்கும்” என்கின்றனர் மக்கள்.

இதையடுத்து, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன் ஆகியோரின் கருத்துகளைக் கேட்க தொடர்புகொண்டோம். அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் கூறுகையில், “கீழ் பவானி வாய்க்கால் மூன்று மாவட்டங்களில் வருகிறது. துறைரீதியாக அமைச்சர் துரைமுருகனின் கன்ட்ரோலில் வருகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில், அமைச்சர் முத்துசாமி மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார். சாமிநாதனுடன் அவர் எந்த ஆலோசனையும் நடத்துவதில்லை. கார்த்திகேய சிவசேனாபதிக்கும், சாமிநாதனுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சேனாபதியும், முத்துசாமியுடன் இணைந்து கான்கிரீட் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்றனர்.

கார்த்திகேய சிவசேனாபதி, முத்துசாமி, துரைமுருகன், சாமிநாதன்
கார்த்திகேய சிவசேனாபதி, முத்துசாமி, துரைமுருகன், சாமிநாதன்

அமைச்சர் முத்துசாமியிடம் இது குறித்துப் பேசியபோது, “கான்கிரீட் திட்டத்தைச் செயல்படுத்தலாமா, கூடாதா என்று ஈரோடு மாவட்டத்தில் நானும், திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் சாமிநாதனும் மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும். மற்றபடி இதில் வேறு எந்த அரசியலும் கிடையாது. நாங்கள் நடுநிலையுடன்தான் செயல்படுகிறோம். அதேசமயம் இதே குழப்ப நிலை தொடர்ந்தால், நான் இந்தப் பிரச்னையிலிருந்து விலகிக்கொள்ளவும் தயங்க மாட்டேன்” என்றார் உறுதியாக.

கமிஷன் வாங்காத அரசியல்வாதிகள், ‘இது நல்ல திட்டம்...’ என்று சொன்னால் யாரும் எதிர்க்கப்போவதில்லையே?!