Election bannerElection banner
Published:Updated:

அபரிமிதமான ஆக்ஸிஜன் உற்பத்தி - `கேரளா மாடல்’ சாதித்தது எப்படி? – ஓர் அலசல்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிகிற துயர நிலையை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், ஆக்ஸிஜனை அபரிமிதமாக உற்பத்தி செய்து கேரளா சாதனை படைத்துவருகிறது. இது எப்படி சாத்தியமானது?

‘சுனாமியைப் போல கொரோனா தாக்கிக்கொண்டிருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றம் மிகுந்த கவலையுடன் கூறியிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பல உயிர்கள் பலியாகக்கூடிய ஆபத்தான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது டெல்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெஹ்ரா, ``டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை. இல்லையென்றால், 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சுகாதார அமைப்பே உருக்குலைந்துவிடும். பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகளின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” என்று கூறியிருக்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக்ஸிஜன் பெறக் காத்திருக்கும் மக்கள்
ஆக்ஸிஜன் பெறக் காத்திருக்கும் மக்கள்

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கும் சூழலில், ஆக்ஸிஜன் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. `ஆக்ஸிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்களை மறிக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்’ என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தளவுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது.

இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலை வட மாநிலங்கள் எதிர்கொண்டுவரும் நேரத்தில், கேரளாவில் அபரிமிதமான அளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிற ஆச்சர்யமான செய்தி வெளியாகியிருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரையில், அந்த மாநிலம் நீண்ட காலமாகவே மருத்துவக் கட்டமைப்பிலும் சுகாதாரத்திலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை நிப்பா வைரஸ் தாக்கியபோதும், அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானபோதும், அவற்றை பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது முன்னணி அரசு எதிர்கொண்ட விதம் குறித்து உலக அளவில் பேசப்பட்டது. குறிப்பாக, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கேரள அரசு எடுத்த நடவடிக்கைகளை `கேரளா மாடல்’ என்று எல்லோரும் குறிப்பிட்டனர்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
ஆக்ஸிஜன் சிலிண்டர்

ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், கொரோனா என்கிற பெயர் இந்தியாவில் பலரும் அறிந்திராத ஒரு சூழலில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய ஆலோசனைகள் கேரளாவில் தொடங்கிவிட்டன. அதாவது, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் வூஹானில் கொரோனா என்றொரு புதிய வைரஸ் பரவுகிறது என்ற செய்தி இணையத்தில் கண்டிருக்கிறார் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். அவர் ஓர் அறிவியல் ஆசிரியரும்கூட. வூஹானில் கேரளாவைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு கொரோனா வைரஸ் பரவுவதால், அந்த மாணவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவருகிறார்கள். அவர்கள் மூலமாக கேரளாவுக்கு கொரோனா வர வாய்ப்பு இருக்கிறது என்று ஷைலஜா டீச்சர் கணித்திருக்கிறார்.

உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே வூஹானிலிருந்து மாணவர்கள் வர ஆரம்பித்தனர். உடனடியாக அவர்களை தனிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மேற்கொண்டது. இப்படியாக கொரோனா விவகாரத்தில் ஒவ்வொன்றையும் முன்கூட்டியே ஆலோசித்து தேவையான திட்டமிடல்களுடன் கொரோனாவை கேரளா எதிர்கொண்டது. ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும், கேரளாவில் உயிரிழப்புகள் என்பது மிக மிகக் குறைவு.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
ஆக்ஸிஜன் சிலிண்டர்

இதைப்போலவேதான், ஆக்ஸிஜன் உற்பத்தியிலும் முன்கூட்டிய திட்டமிடலும் செயல்பாடும் இருந்ததால் இன்றைக்கு ஆக்ஸிஜனை உபரியாக உற்பத்தி செய்யும் ஒரே மாநிலமாக கேரளா திகழ்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 99.39 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கேரளா உற்பத்தி செய்தது. அடுத்த சில மாதங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டிய உணர்ந்த பினராயி விஜயன் அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியது. கேரளாவின் தற்போதைய ஆக்ஸிஜன் தேவை 74.25 மெட்ரிக் டன். ஆனால், 219 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தினமும் கேரளா தற்போது உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனை ஒரே ஆண்டில் இரண்டு மடங்குக்கு மேல் கேரளா அதிகரித்திருக்கிறது. அது மட்டுமல்ல, உ.பி., டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல், சாலைகளிலும் நடைபாதைகளிலும் ஆம்புலன்ஸ்களிலும் ரிக்ஷாக்களிலும் நோயாளிகள் பரிதாபமாகக் காத்துக்கிடக்கும் சூழலில், கேரளாவின் அரசு மருத்தவமனைகளில் 50 சதவிகித படுக்கைகள் காலியாக இருக்கின்றன. பினராயி விஜயன் அரசின் திட்டமிடலும் செயல்பாடும் மக்கள் மீதான அக்கறையும் வியக்க வைக்கிறது.

தரமான மருத்துவம், தரமான மருத்துவக் கட்டமைப்பு, சிறப்பான சுகாதாரம் ஆகியவற்றில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளாவும் விளங்கிவருகின்றன. இவற்றுக்கு மிகப்பெரிய வரலாற்று பின்னணியும் உண்டு. கேரளாவின் வியக்க வைக்கும் மருத்துவக் கட்டமைப்புகள் உருவான பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கரிடம் பேசினோம்.

விஜயசங்கர்
விஜயசங்கர்

``கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு கல்விக்கும் மருத்துவத்துக்கும் மிகுந்த முக்கியத்தும் கொடுக்கும் மாநிலங்கள். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் என பல துறைகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை ‘திராவிட மாடல்’ என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். நீதிக்கட்சி மற்றும் இங்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே ஏற்பட்டிருந்த ஒற்றுமை ஆகியவை தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்தப் பின்னணியிலிருந்து அதிகாரத்துக்கு வந்தவர்களிடம், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உறுதிப்பாடு இருந்தது. சமூகநீதி என்கிற அடிப்படையில் அவர்கள் செயல்பட ஆரம்பித்தனர். அது, தமிழகத்தை இந்தளவுக்கு முன்னேற்றியிருக்கிறது.

அதேபோல, கேரளாவில் 1957-ல் இ.எம்.எஸ் தலைமையில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு, மீண்டும் 1967-ல் இ.எம்.எஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியாளர்கள் சோசலிசப் பார்வையிலிருந்து திட்டங்களை செயல்படுத்தினர். நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர். கல்வி மற்றும் பொதுமருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றை வலுப்படுத்தினர். பஞ்சாயத்து அமைப்புகளை உறுதிப்படுத்தினர். இவற்றில் இடது முன்னணி அரசுகள் தொடர்ச்சியாக கவனம் செலுத்திவந்துள்ளன.

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

பொதுமருத்துவம், கல்வி போன்றவை இடதுசாரிகளின் திட்டத்தில் எப்போதுமே இருந்துவருகின்றன. இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திருவாங்கூர் சமஸ்தான காலத்திலேயே மருத்துவக் கட்டமைப்பு கேரளாவில் உருவாகிவிட்டது. அதை இடதுசாரி அரசுகள் பலப்படுத்தின. கேரள மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம். அந்த வகையில், மக்களிடமிருந்து வந்த அழுத்தமும் கேரளாவின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு முன்பாக, தனக்கு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி, கேரளாவின் மருத்துவக் கட்டமைப்புகளை பினராயி விஜயன் அரசு மேலும் வலுப்படுத்திக்கொண்டது. தன் தேவையையும் தாண்டி அதிகளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனையும் கேரளா நிறுவியிக்கிறது” என்றார் விஜயசங்கர்.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; மிரளவைக்கும் விலை ஏற்றம் - உரிய நேரத்தில் மக்களுக்குக் கிடைக்குமா?

இது குறித்து கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.ஏ.ஷாஜியிடம் பேசினோம்.

``திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம் காலத்தில் கேரளாவில் மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை நன்றாகவும் இருந்தன. கேரளாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்கும் முக்கியமானது. அவர்கள் பல மருத்துவமனைகளை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து இடது சாரி இயக்கங்களின் பங்களிப்பு முக்கியமானது. இ.எம்.எஸ் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், ரஷ்யாவைப் போல இங்கும் மருத்துவ வசதிகளை உருவாக்கினர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அது, ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி. மேலும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, கோட்டயம் மருத்துவக் கல்லூரி உள்பட பல அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

கே.ஏ.ஷாஜி
கே.ஏ.ஷாஜி

மருத்துவம் மற்றும் சுகாதாரத்தின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, நிறைய முதலீடுகளை அரசு செய்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவுக்கு படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகள் என்றால் சுத்தமாக இருக்காது என்று நினைத்துவிட முடியாது. கேரளாவின் அரசு மருத்துவமனைகளின் வார்டுகள் அவ்வளவு கிளீனாக இருக்கும்” என்று வியக்க வைக்கும் தகவல்களைத் தருகிறார் கே.ஏ.ஷாஜி.

மக்களை நேசிக்கிற, அறிவியல் ரீதியாக சிந்தித்தால் மட்டுமே எந்தவொரு அரசாங்கத்தாலும் இத்தகைய சாதனைகளை செய்ய முடியும் என்பது நிதர்சனம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு