Published:Updated:

`அந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம்!' - இலவச ஆம்புலன்ஸ் சேவையில் கேரள பேக்கரி ஓனர்

அன்வரின் பேக்கரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Ambulance
Ambulance

கேரளா போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான அரசுப்பேருந்து கடந்த நில நாள்களுக்கு முன்பு அடூர் பகுதியில் அதிவேகமாகச் சென்றது. பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென மயங்கியதையடுத்து, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பேருந்து பயணித்த வழித்தடத்தில் இருந்து மாற்றி மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.

பண்டிகைக் காலம் என்பதால் சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பேருந்தை விரைவாக இயக்க முடியவில்லை. அடூர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அங்குள்ள பேக்கரி அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பேருந்து நின்றது.

kerala bus
kerala bus

இதனால், அதீத பதற்றத்தில் நடத்துநர் இருந்துள்ளார். இதனைக் கவனித்த பேக்கரி நடத்தும் அன்வர், அவரிடம் விசாரித்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் உடல்நலம் குன்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அன்வர் உதவியுள்ளார். தனது நண்பர்கள் சிலரின் உதவியின் மூலம் காயன்குளம் அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

பத்தினம்திட்டா மாவட்டம் ஆடூர் பகுதியைச் சேர்ந்த அன்வர் அப்பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். அன்வர் மற்றும் அவரின் உறவினர் நிஸாம் இருவரும் சேர்ந்து இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்வரின் பேக்கரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்தக்காட்சி பேக்கரியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்தக் காட்சிகளை பார்த்தபோது மூன்று பேரும் சாலை விபத்தில் சிக்கி 15 நிமிடங்கள் உதவியின்றி தவித்தனர். இந்தச் சம்பவம் அன்வரின் மனதைப் பாதித்துள்ளது.

இதற்கு அடுத்த நாளே நண்பர்கள் சிலரிடம் உதவிபெற்று ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கியுள்ளனர். இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள அன்வர், “மனிதாபிமான அடிப்படையில் தான் இந்த உதவியை செய்து வருகிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. விபத்தில் சிக்குகிறவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்போம். சமூகத்துக்கான சேவையாக மட்டுமே இதைச் செய்கிறோம்” எனப் பேசியுள்ளார்.