அரசியல்
அலசல்
Published:Updated:

தமிழக வனப்பகுதிகளை அபகரிக்கிறதா கேரளா? - ‘டிஜிட்டல் ரீ சர்வே’ வில்லங்கம்!

‘டிஜிட்டல் ரீ சர்வே’ வில்லங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘டிஜிட்டல் ரீ சர்வே’ வில்லங்கம்!

கம்பம் மெட்டுக்கு மேலேயிருந்த கேரள ஆக்கிரமிப்பு வனப்பகுதிகள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மீட்கப்பட்டன. ஆனால், சட்டச் சிக்கலால்தான் அந்தப் பணியை முழுமையாக நிறைவுசெய்ய முடியவில்லை.

பட்டு வேட்டி கனவில் இருக்கும்போது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்ட கதையாக, குமரி மாவட்டப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டதைக் கொண்டாடும் தருணத்தில், தமிழக எல்லையோர வனப்பகுதிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இரு மாநிலங்களும் இணைந்து செய்யவேண்டிய ‘டிஜிட்டல் ரீ சர்வே’ பணியை, கேரள அரசு தன்னிச்சையாகத் தொடங்கியிருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள் இந்தப் பிரச்னையை உற்றுநோக்குபவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய ஆதரவாளரும், தமிழக நதிநீர்ப் பிரச்னைகளுக்காகச் சட்டப் போராட்டம் நடத்தியவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “நீலகிரி மாவட்டம், முதுமலையில் தொடங்கி குமரி மாவட்டம் கொல்லங்கோடு வரை தமிழ்நாட்டுக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையேயான மொத்த எல்லை 830 கி.மீட்டர். இதில் 203 கி.மீ எல்லையை மட்டுமே இரு மாநிலங்களும் இணைந்து வரையறுத்திருக்கின்றன. மீதமுள்ள 627 கி.மீ எல்லை இன்னும் அறுதியிடப்படவில்லை. இதற்கு கேரள அரசின் ஒத்துழைப்பின்மைதான் காரணம். இப்படி வரையறை செய்யப்படாத இடங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகள் என்பதால், ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பின் மூலம் தமிழ்நாட்டு நிலப்பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கிறது கேரளா.

தமிழக வனப்பகுதிகளை அபகரிக்கிறதா கேரளா? - ‘டிஜிட்டல் ரீ சர்வே’ வில்லங்கம்!

உதாரணமாக, தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவிலுள்ள கண்ணகிக் கோட்டம், தென்காசி மாவட்டம் செண்பகவல்லி அணை, செங்கோட்டை தாலுகா அடவிநயினார் அணை போன்றவையும்கூட கேரளாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்நாட்டு வனப்பகுதிகள்தான். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் களியக்காவிளை தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமத்துக்கு ரேஷன் கார்டு வழங்கியதுடன், அங்கே நிலவரியும் வசூலிக்க முயன்றது கேரளா. நான் அதைச் சுட்டிக்காட்டியதும், அன்றைய முதல்வர் கலைஞர் அதைத் தடுத்து நிறுத்தினார். இதேபோல பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி தாலுகாவில் 22 மலைக் கிராமங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது கேரளா. இப்போது கேரளா தன்னிச்சையாகத் தொடங்கியிருக்கும் சர்வேயை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால், மீண்டும் இது போன்ற அவலங்களை எல்லையோரத் தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, மத்தியில் ஆண்ட காங்கிரஸால் 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கேரளாவிடம் இழந்தது தமிழ்நாடு. இப்போதுகூட நாம் முறையாக அளவீடு செய்தால், 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீட்க முடியும். கடந்த 2017 ஜூலையில் அப்போதைய தேவிகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ தலைமையில் கூட்டுக்குழு அமைத்து எல்லையை அளவிடும் பணி கம்பம் மெட்டுக்கு மேலிருந்து தொடங்கியது. அப்போது 14 எல்லைக் கற்கள் தமிழக வனத்துறையால் ஊன்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி மீட்கப்பட்டது. ஆனால், கேரளத்தின் எதிர்ப்பால் அந்த எல்லை அளவீட்டுப் பணியை அ.தி.மு.க அரசு கைவிட்டுவிட்டது.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

மேலும், கேரளாவிலிருக்கும் 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில், ‘குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட்’ சிஸ்டத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. கூடுதலாக, `நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மண்டலங்கள் தனியாக வரைபடங்களின் மூலம் வகைப்படுத்தப்படும்’ என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அண்டை மாநிலத்தோடு எல்லையை அளவீடு செய்வதில் மட்டும் கேரள அரசு உடன்படவில்லை. `சர்வே ஆஃப் இந்தியாவின் மேற்பார்வையில்தான் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்படுகிறது’ என கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறுவதில் உண்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை.

கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே பணியை தமிழக அரசு தடுத்து, தமிழக - கேரள எல்லையைக் கூட்டாக அளவீடு செய்யத் தவறினால் தமிழகத்துக்குச் சொந்தமான 1,000 சதுர கிலோமீட்டர் நிலம் நிரந்தரமாகப் பறிபோய்விடும். அதில் 72 சதவிகிதம் வனம்... மீதமுள்ளவை பட்டா நிலங்கள். ‘இணக்கமாகச் செல்கிறோம்’ என்ற பெயரில் தமிழக அரசு நம் நில உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. முதலில் இந்த டிஜிட்டல் ரீ சர்வே குறித்து கேரள அரசிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்க வேண்டும். அதற்கு அவர்கள் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழக-கேரள எல்லை அளவீடு நடக்கும்போது மத்திய பார்வையாளரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் உடனிருக்க வேண்டும். இதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதை உடனே செய்யாவிட்டால், மாபெரும் வரலாற்றுப் பிழையாகிவிடும்” என்றார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இது பற்றி முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “கம்பம் மெட்டுக்கு மேலேயிருந்த கேரள ஆக்கிரமிப்பு வனப்பகுதிகள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மீட்கப்பட்டன. ஆனால், சட்டச் சிக்கலால்தான் அந்தப் பணியை முழுமையாக நிறைவுசெய்ய முடியவில்லை. எல்லை அளவீடு என்பது வழக்கமாக மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைதான். ஆனால், கேரள அரசு தன்னிச்சையாக நில அளவை மேற்கொள்வது உள்நோக்கம்கொண்டது, கண்டிக்கத்தக்கது. கேரள அரசின் இந்தத் தன்னிச்சையான சர்வேயால் முல்லைப்பெரியாறு அணை மீதான உரிமை மொத்தமாகப் பறிபோய்விடும். எனவே, வனப்பகுதி, எல்லைப் பகுதி உள்ளிட்டவற்றை இரு மாநில வரைபடங்களை வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில்தான் சர்வே செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

இன்றைய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைத் தொடர்புகொள்ள முயன்றும், வாட்ஸ்அப் மூலம் விளக்கம் கேட்டும் அவரிடமிருந்து பதிலில்லை. எனவே, வனத்துறை அமைச்சர் ராமசந்திரனிடம் இது பற்றிக் கேட்டோம். “எல்லைப் பிரச்னை என்பதால் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இரு மாநில முதல்வர்களும் ஓரணியில் இருப்பதுடன், தனிப்பட்ட நட்பையும் பேணுகிறார்கள். இந்த உறவைப் பயன்படுத்தி, பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியது தமிழ்நாட்டு முதல்வரின் கடமை!