Published:Updated:

தங்கக் கடத்தல் வழக்கில் பலியாடு யார்? - வலுக்கும் ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர் மோதல்

ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்

மீடியாக்கள் முன்பு இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்த ஸ்வப்னா சுரேஷ், இதைப் படித்ததும் கொதித்துவிட்டார்.

தங்கக் கடத்தல் வழக்கில் பலியாடு யார்? - வலுக்கும் ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர் மோதல்

மீடியாக்கள் முன்பு இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்த ஸ்வப்னா சுரேஷ், இதைப் படித்ததும் கொதித்துவிட்டார்.

Published:Updated:
ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதாக 2020-ல் வெடித்த விவகாரத்தில் கேரள தலைமைச் செயலகத்தில் ஐடி துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிவசங்கர் 98 நாள்களும், ஸ்வப்னா சுரேஷ் ஒன்றே கால் ஆண்டுகளும் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ‘அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆன’ என்ற தலைப்பில் பிப்ரவரி 5-ம் தேதி சிவசங்கரன் வெளியிட்ட சுயசரிதைப் புத்தகம், கேரள அரசியலில் மீண்டும் அனலைப் பற்றவைத்திருக்கிறது!

மகாபாரத யுத்த களத்தில், ‘குரு துரோணாச்சார்யாரை வீழ்த்த வேண்டுமானால், அவரது மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று கிருஷ்ணர் சொல்வார். ‘அவரின் மகன் அஸ்வத்தாமா இறந்ததாகப் பொய் சொன்னால் துரோணர் மனம் கலங்குவார். அப்போது அவரை அர்ஜுனன் அம்பெய்து வீழ்த்திவிட வேண்டும்’ என்று திட்டம் வகுப்பார்கள். அஸ்வத்தாமா என்ற யானையை பீமன் கொன்றுவிட்டு, அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக துரோணாச்சார்யாரிடம் சொல்வார்கள். யானை இறந்ததை, தன் மகன்தான் இறந்துவிட்டான் என்று மனம் கலங்கி, சரியாகப் போர் புரியாத துரோணரை அம்பெய்து வதைத்துவிடுவார் அர்ஜுனன். அதுபோல, ‘யாரையோ வீழ்த்த, உண்மையான அஸ்வத்தாமாவுக்கு பதிலாக யானையைப் போன்று, தான் பலியாக்கப்பட்டுவிட்டேன்’ என்று சூசகமாகச் சொல்லவே, இந்தத் தலைப்பை தனது சுயசரிதை புத்தகத்துக்கு சிவசங்கர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் கேரள அரசியல் விமர்சகர்கள்.

அந்தப் புத்தகத்தில் சிவசங்கர், ‘‘2020, ஜூன் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த யு.ஏ.இ தூதரக பார்சலை விடுவிக்க உதவ வேண்டும் என ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் ஸ்வப்னா சுரேஷ் எனக்கு போன் செய்தார். அதன் பிறகு தன் கணவர் ஜெயசங்கருடன் ஜூலை 4-ம் தேதி என் பிளாட்டுக்கு வந்த ஸ்வப்னா, ‘அந்த பார்சலில் கார் ஸ்டீரியோக்கள்தான் இருக்கின்றன; அதை விடுவிக்க உதவ வேண்டும்’ என்று கேட்டார். ஆனால், ‘சுங்கத்துறை விஷயத்தில் நான் தலையிட முடியாது’ என்று கூறிவிட்டேன். அந்த வழக்குக்கும் எனக்குமான தொடர்பு இவ்வளவுதான். என் பிறந்தநாளுக்கு ஸ்வப்னா சுரேஷ் பரிசாகத் தந்த ஐபோன்தான் இந்த வழக்கில் எனக்குப் பிரச்னையானது. ஏழைகளுக்கு வீடுகட்டிக்கொடுக்கும் லைஃப் புராஜக்ட் ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு வழங்குவதற்காக ஸ்வப்னாவுக்கு சில ஐபோன்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு ஐபோனை எனக்குத் தந்தார். ஸ்வப்னாவின் கல்வித்தகுதியைப் பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் வேலைக்குச் சேர்த்ததுதான் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கான காரணம். ஸ்வப்னா இப்படி சதி செய்வார் என நான் நினைக்கவில்லை. என்னை பலியாடு ஆக்கிவிட்டார்கள்’’ என்று புத்தகத்தில் எழுதியிருக்கிறார் சிவசங்கர்.

தங்கக் கடத்தல் வழக்கில் பலியாடு யார்? - வலுக்கும் ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர் மோதல்

மீடியாக்கள் முன்பு இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்த ஸ்வப்னா சுரேஷ், இதைப் படித்ததும் கொதித்துவிட்டார். இதையடுத்து அவர், தனக்கும் சிவசங்கருக்குமான தொடர்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். மீடியாக்களிடம் அவர், ‘‘யு.ஏ.இ தூதரக அதிகாரிகள் கூறியதால்தான் சிவசங்கரை அழைத்தேன். சிவசங்கர் போனில் என்னிடம் என்ன சொன்னாரோ, அதை நான் தூதரிடமும் துணைத் தூதரிடமும் கூறினேன். தூதரக அதிகாரிகள் சொன்னபடி நான் செய்தேன். வழக்கு விசாரணை கோர்ட்டில் இருப்பதால் கூடுதலாக அது பற்றி பேச முடியாது.

எனது பிளாட்டுக்கு சிவசங்கர் தொடர்ச்சியாக வந்திருக்கிறார்... என் வீட்டில் அவர் மது அருந்தியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் சிக்குவதற்கு முன்பாக, கடைசி மூன்றாண்டுகளாக என் வீட்டில்தான் பிறந்தநாள் கொண்டாடினார். நான் அவரது பிறந்தநாள் பரிசாக ஐபோன் கொடுத்ததாகச் சொல்வது தவறு. அவரது பிறந்தநாள் ஜனவரி 24-ம் தேதி. நான் அவருக்கு ஐபோன் கொடுத்தது டிசம்பர் 1-ம் தேதி. ஐபோன் மட்டுமல்ல, பல கிஃப்டுகளை நான் அவருக்குக் கொடுத்திருக்கிறேன். எல்லா விஷயங்களிலும் ஒரு வரியை மட்டும் எழுதிவிட்டு, மற்றவற்றை மறைத்துவிட்டார். சிவசங்கர் வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு துபாயில் செட்டிலாகத் திட்டமிட்டிருந்தார். நான் அவருக்கு உண்மையாக இருந்தேன். விசாரணை ஏஜென்சிகளிடம் ஆறு மாதங்கள் நான் எதுவும் சொல்லவில்லை. சிவசங்கருக்கும் எனக்குமான வாட்ஸ்அப் ஆதாரங்களை அவர்கள் காட்டிய பிறகுதான், சில விஷயங்களைச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ரேஸ் குதிரைபோல சிவசங்கர் கூறிய வழியில் பயணித்தேன். கடைசியில் நான்தான் பலியாடு ஆனேன். ஆனால், புத்தகத்தில் அவர் பலியாடு ஆனதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்றார் கொந்தளிப்புடன். இது குறித்து சிவசங்கரிடம் கேட்டால், ‘‘வழக்கு நடப்பதால் இது பற்றிப் பேச முடியாது. தேவையென்றால் வாசகர்களுக்காக மற்றொரு புத்தகம் வெளியிடுவேன்’’ என்றார்.

‘‘சிவசங்கரின் சுயசரிதை மூலம் லைஃப் மிஷன் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது’’ என்று காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டன. அவ்வளவு சீக்கிரம் இந்த விவகாரம் ஓயாதுபோலிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism