Published:Updated:

கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம்... பினராயி விஜயன் குடும்பத்துக்கும் தொடர்பு?

ஸ்வப்னா சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா சுரேஷ்

- ஸ்வப்னா பின்னணியில் பா.ஜ.க?

கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம்... பினராயி விஜயன் குடும்பத்துக்கும் தொடர்பு?

- ஸ்வப்னா பின்னணியில் பா.ஜ.க?

Published:Updated:
ஸ்வப்னா சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா சுரேஷ்

‘‘கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கும் தூதரகத் தங்கக் கடத்தலில் தொடர்பு இருக்கிறது’’ எனச் செய்தியாளர் சந்திப்பில் குண்டு வீசியிருக்கிறார் ஸ்வப்னா சுரேஷ். இதைத் தொடர்ந்து ‘முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் போராட்டங்களைத் தீவிரமாக்கிவருகின்றன!

திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரகத்துக்கு 2020, ஜூன் 30-ம் தேதி வந்த பார்சலில் தங்கம் இருப்பதாகச் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர், மத்திய அரசின் அனுமதியோடு ஜூலை 5-ம் தேதி பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சலை வாங்க விமான நிலையம் வந்த தூதரக பி.ஆர்.ஓ என அறியப்பட்ட ஸரித் கைதுசெய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷும், அவரின் நெருங்கிய நண்பரான கேரள முதல்வரின் செயலாளர் சிவசங்கரும் கைதாகினர். சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ என மத்திய அரசு ஏஜென்சிகள் பல கட்டங்களாக விசாரணை நடத்தின. பின்னர் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோருக்கு வரிசையாக ஜாமீன் கிடைத்தது.

கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம்... பினராயி விஜயன் குடும்பத்துக்கும் தொடர்பு?

சுமார் 16 மாதங்கள் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், கடந்த ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். ஆறு மாதங்களுக்கும் மேலாக அமைதியாக இருந்தவர் கடந்த 7-ம் தேதி சி.ஆர்.பி 164-ன்படி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், “முதல்வர் பினராயி விஜயனின் க்ளிஃப் ஹவுஸுக்குத் தூதரகத்திலிருந்து பெரிய பாத்திரங்களில் பிரியாணி அவ்வப்போது அனுப்பிவைக்கப்பட்டன. அதில் பிரியாணி மட்டுமல்ல... வேறு உலோகப் பொருள்களும் இருந்தன” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இதெல்லாம் ஏற்கெனவே மத்திய அரசு ஏஜென்சிகளிடம் ஸ்வப்னா கூறியதுதான். அதில் உண்மை இல்லை என்பது மக்களுக்குத் தெரியும். ஸ்வப்னா மீண்டும் அதைச் சொல்வதன் பின்னால் அரசியல் சதித்திட்டம் இருக்கிறது” என்றார்.

யு.ஏ.இ தூதரகப் பணியில் இருந்த சமயத்தில், ஸ்வப்னா சுரேஷ் பலரையும் நம்பி சில உதவிகளைச் செய்தாராம். ஆனால், வழக்கு என வந்த பிறகு, அவர் மிகவும் நம்பியிருந்த சிவசங்கரே ஸ்வப்னாவைக் கைகழுவிவிட்டாராம். சிவசங்கர் எழுதிய ‘அஸ்வத்தாமா வெறும் ஆனயாணு’ என்ற சுயசரிதைப் புத்தகத்தில் ஸ்வப்னாமீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அப்போது தனக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், சிவசங்கரைச் சிறு விமர்சனம் செய்ததுடன் ஒதுங்கிக்கொண்டாராம் ஸ்வப்னா. ஆனால், `இப்போது ஸ்வப்னாவுக்குப் பக்கபலமாகச் சிலர் இருப்பதால், தைரியமாக உண்மையைச் சொல்கிறார்’ என்கின்றனர் விவரம் தெரிந்த சிலர்.

கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம்... பினராயி விஜயன் குடும்பத்துக்கும் தொடர்பு?

அதேசமயம் கேரள ஜன பக்‌ஷம் கட்சி நிறுவனரான பி.சி.ஜார்ஜ் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஸ்வப்னா சுரேஷைச் சந்தித்துப் பேசியதாக பி.சி.ஜார்ஜ் கூறியிருந்தார். தைக்காடு ஹெஸ்ட் ஹவுஸில் வைத்து ஸ்வப்னா - பி.சி.ஜார்ஜ் சந்திப்பு நடந்திருக்கிறது. அந்தச் சந்திப்புக்கு ஸ்வப்னா சுரேஷ் தற்போது வேலை செய்துவரும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் நிறுவனர் அஜி கிருஷ்ணா பாலமாக இருந்திருக்கிறார். அஜி கிருஷ்ணா பா.ஜ.க ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. 2021 ஏப்ரலில் இந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.சி.ஜார்ஜ் ‘லவ் ஜிகாத்’ பற்றி பேசியது சர்ச்சையாகியிருந்தது. எனவே, பி.சி.ஜார்ஜை வைத்து ஸ்வப்னா மூலம் அரசைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நடப்பதாக சி.பி.எம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஷாஜ் கிரண்
ஷாஜ் கிரண்

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்வப்னா சுரேஷ் மீதும் பி.சி.ஜார்ஜ் மீதும் ‘கலவரத்தை ஏற்படுத்தி, அரசைச் சீர்குலைக்கக் கூட்டுச்சதி செய்ததாக’ வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஸரித்தின் மொபைல் போனை ஃபாரன்சிக் பரிசோதனை நடத்தி ஸ்வப்னாவின் பின்னணியில், பா.ஜ.க இருப்பதை நிரூபிக்கும் படலத்தில் இறங்கியிருக்கிறது கேரள அரசு. ஆனாலும் அசராத ஸ்வப்னா, “முதல்வர் என் நண்பரான ஷாஜ் கிரண் மூலம் மிரட்டுகிறார். இதைத்தான் எனக்கு மிரட்டல் இருக்கிறது எனச் சொன்னேன்” எனக் கூறி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

“சரிதா நாயர் வாக்குமூலம் அளித்ததை வைத்து, அன்றைய காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோட்டையைச் சுற்றிப் போராடிய பினராயி விஜயன், இப்போது ஓடி ஒளிவது ஏன்... ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்.

கேரளாவில் மீண்டும் மையம் கொண்டிருக்கும் ஸ்வப்னா புயல் இப்போதைக்கு ஓயாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism