Published:Updated:

“39 வருஷமாச்சு!” - “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா... சாவு வந்திருக்காது!”

இடுக்கி
பிரீமியம் ஸ்டோரி
இடுக்கி

தம்பி... டீ இன்னும் வரல!

“39 வருஷமாச்சு!” - “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா... சாவு வந்திருக்காது!”

தம்பி... டீ இன்னும் வரல!

Published:Updated:
இடுக்கி
பிரீமியம் ஸ்டோரி
இடுக்கி
சாரை சாரையாக மலையேறிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்தபோது, இருபது வருடங்கள் பின்தங்கிவிட்டோமோ என்று தோன்றியது. “இல்லை, 39 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்!’’ என்று அதிர்ச்சியூட்டு கிறார்கள் அந்த மக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களில் கூலி வேலை செய்ய, தேனி மாவட்டத்திலிருந்து மக்கள் நடந்து செல்லும் காட்சிதான் அது. கடுமையான ஏற்றமும் இறக்கமுமான மலைத்தடத்தில், பல கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்தால்தான் அந்த மக்கள் தங்கள் வயிற்றை நிரப்ப முடியும். இந்தப் பயணங்களில் ஆபத்தில் சிக்கி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நிறைய பேர். கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கில் பேருந்து இல்லாததால், இடுக்கியின் பேத்தொட்டியிலிருந்து கீழிறங்கிய ஒன்பது ஏலத்தோட்ட தொழிலாளர்கள் காட்டுத்தீயில் சிக்கினார்கள். அவர்களில் மூவர் உயிரிழக்க, ஆறு பேருக்குக் கடுமையான தீக்காயம். அப்போது, ‘‘சாக்கலூத்துமெட்டு சாலை மட்டும் இருந்திருந்தா... இந்தச் சாவு வந்திருக்காது” என்றார்கள் பலரும். அதென்ன சாக்கலூத்துமெட்டு சாலை? வெறும் 4 கிலோமீட்டருக்கான சாலைத் திட்டம் அது. அதை மட்டும் அமைத்துவிட்டால், பல ஆபத்துகளிலிருந்து விடுபடுவார்கள் மக்கள். ஆனால், `இதோ... அதோ...’ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

“39 வருஷமாச்சு!” - “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா... சாவு வந்திருக்காது!”

தேனியிலிருந்து இடுக்கி மாவட்டத்துக்குச் செல்ல குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு எனப் பிரதான சாலைகள் இருந்தாலும், விரைந்து சென்றடைய சில மலைப்பாதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தேவாரத்தையும், இடுக்கியின் உடும்பன்சோலையையும் இணைக்கும் சாக்கலூத்துமெட்டு மலைப்பாதை. இதில் 4 கிலோமீட்டர் சாலை அமைக்க, 39 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டுவருகிறது வனத்துறை. இதனாலேயே, போடிமெட்டு வழியாகப் பலர் 60 கிலோமீட்டர் பஸ் பயணத்தில் சுற்றிச் செல்ல... பஸ் கட்டணத்துக்கும் வழியில்லாத பலர் மலைப்பாதைகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள்.

‘‘இந்தப் பகுதி, யானைகள் வழித்தடம் என்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக யானைகள் இந்தப் பகுதியில் வலசை வருவதில்லை. இங்கேயே பழகிப்போன ஒற்றை யானை மட்டுமே நடமாடிவருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் புலிகள் காப்பகங்களிலும், யானைகளின் வலசைப் பாதைகளிலும் சாலைகளும் ரிசார்ட்டுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத வனத்துறை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் 4 கிலோமீட்டர் சாலைக்குத் தடைபோடுவது மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்” என்கிறார் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

அன்வர் பாலசிங்கம் - முருகன்
அன்வர் பாலசிங்கம் - முருகன்

தேவாரம் சுற்றுப்புற விவசாயிகள் சங்கச் செயலாளர் முருகனோ, ‘‘ஒவ்வொரு தேர்தல்லயும் இந்த ரோட்டைப் போட்டுத் தர்றோம்னு இங்க போட்டியிடுற வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுக்குறாங்க. ஆனா, ஜெயிச்ச பிறகு கண்டுக்கிறது இல்லை. விதிமுறைகளுக்கு முரணான திட்டம்னா வாக்குறுதி எப்படிக் கொடுப்பாங்க?” என்று கேட்கிறார்.

கடந்த 1981, மே 25-ம் தேதி, சாக்கலூத்துமெட்டு சாலைப் பணிக்காக, அப்போதைய தமிழக நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் குழந்தைவேலு அடிக்கல் நாட்டினார். 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. சாலையோ வந்தபாடில்லை. ஆனால், தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி மட்டும் தொடர்கிறது.

“39 வருஷமாச்சு!” - “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா... சாவு வந்திருக்காது!”

மாவட்ட வன அலுவலர் கெளதமோ, ‘‘அடர் வனமான அந்தப் பகுதியில் வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-ன்படிதான் சாலை அமைக்க வேண்டும். அதற்கு டெல்லியில்தான் அனுமதி பெற வேண்டும்’’ என்றார்.

தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் தரப்பில் கேட்டபோது, ‘‘சாக்கலூத்துமெட்டு அடிவாரம் வரை நேரடி ஆய்வு செய்து, சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் ரவீந்திரநாத். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்’’ என்றார்கள்.

கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கால்கடுக்கப் பயணிக்கிறார்கள் மக்கள். தனி விமானத்தில் செல்பவர், தனக்கு ஓட்டுப் போட்டவர்களுக் காகவும் கொஞ்சம் வேலை பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism