Published:Updated:

`சுவாசக்குழாயில் சேறு.. காயம்?!'- கேரள சிறுமி இறப்பில் பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?

சிறுமி
சிறுமி

கேரளாவில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயதுச் சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த தேவானந்தா என்ற 6 வயது சிறுமி வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) காணாமல் போயுள்ளார். அன்று காலை 10.15 மணியளவில் சிறுமி காணாமல் போனதாகக் காவல்நிலையத்தில் அவரின் தாய் தன்யா புகார் அளித்தார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

சிறுமி
சிறுமி

தன்யா துணி துவைக்கச் சென்றபோது தேவானந்தாவும் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். தன்யாவின் 3 மாதக் குழந்தை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தது. தம்பியைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்குமாறு தன் மகளை அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, தேவானந்தா வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மகள் வீட்டுக்குள் சென்றதை தன்யா கவனித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தன்யா வீடு திரும்பியபோது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்துள்ளது. மகளைக் காணவில்லை. இதையடுத்து, காவல்துறையில் புகார் தெரிவித்தார். மகள் காணாமல் போன விவகாரத்தில் யார் மீது சந்தேகம் இல்லை என போலீஸில் தன்யா தெரிவித்துள்ளார்.

`உயர் அதிகாரிகள் முதல் பொது மக்கள் வரை தேடிய 6 வயதுச் சிறுமி!'- கேரளாவை உலுக்கிய மரணம்

காவல்துறையினர் சிறுமியை ஒருபக்கம் தேடும் பணியை மேற்கொள்ள மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தேடினர். இதன்காரணமாக சிறுமி தேடும் பணி தீவிரமானது. சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற கேரள மக்களுக்கு இன்றைய விடியல் மோசமானதாக இருந்தது.

சிறுமி
சிறுமி

அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தன்யாவின் வீட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால் அறிக்கையை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் சொந்த ஊரான கொல்லத்துக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.

Representation Image
Representation Image

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுவாசக்குழாயில் சேறும் மண்ணும் இருந்துள்ளது. தடயவியல் சோதனையிலும் அவரது உடலில் காயங்கள் எதும் இருந்ததாகக் கூறப்படவில்லை. எனவே, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை அதை உறுதிசெய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு