Published:Updated:

காட்டுமாடு சமைத்து விருந்து... இளம்பெண்களுக்கு போதைப்பொருள் சப்ளை...

ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்

கேரள மாடல்கள் மரணத்தில் வெளியாகும் பகீர் தகவல்கள்...

காட்டுமாடு சமைத்து விருந்து... இளம்பெண்களுக்கு போதைப்பொருள் சப்ளை...

கேரள மாடல்கள் மரணத்தில் வெளியாகும் பகீர் தகவல்கள்...

Published:Updated:
ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்

கேரள மாடல்கள் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் ஆகியோர் கார் விபத்தில் மரணமடைந்த வழக்கு விசாரணை, ஒரு மாதத்துக்கும் மேலாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், அவர்கள் சென்ற காரைத் துரத்திச் சென்ற ஷைஜூ தங்கச்சன் ஒரு போதை மாஃபியா பேர்வழி என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் பார்ட்டிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் ஷைஜூ, காட்டுமாட்டை வேட்டையாடி விருந்துவைத்த விவகாரமும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது!

கொச்சியிலுள்ள ‘நம்பர் 18’ ஹோட்டலில் நடந்த நள்ளிரவு பார்ட்டியில் கலந்துகொண்டு திரும்பியபோது, கடந்த நவம்பர் 1-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட கார் விபத்தில், திருவனந்தபுரம் ஆற்றிங்கல்லைச் சேர்ந்த 2019-ன் மிஸ் கேரளா ஆன்சி கம்பீரும், திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா ஷாஜனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மாடல்களுடன் காரில் பயணித்த அவர்களின் நண்பர் முஹம்மது ஆஷிக் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் நவம்பர் 7-ம் தேதி மரணமடைந்தார். காரை ஓட்டிச் சென்ற அப்துல் ரஹ்மான் மட்டுமே உயிர் தப்பினார்.

ஷைஜூ தங்கச்சன்
ஷைஜூ தங்கச்சன்

மது போதையில் கார் ஓட்டியதாக அப்துல் ரஹ்மான்மீது வழக்கு பாய்ந்தது. அவரோ, ‘எங்களைத் துரத்திவந்த ஆடி காரால்தான் விபத்து ஏற்பட்டது’ என்றார். ஆடி காரை ஓட்டிவந்த ஷைஜூ தங்கச்சனிடம் விசாரித்தபோது, ‘மது போதையில் கார் ஓட்ட வேண்டாம் என்று எச்சரிக்கவே அந்த காரின் பின்னால் சென்றேன்’ என்று மழுப்பினார். அதை நம்பிய போலீஸார், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு ஷைஜூவை விடுவித்துவிட்டார்கள். போலீஸாரின் கவனம் முழுவதும் ‘நம்பர் 18’ ஹோட்டலின் பார்ட்டி நடந்த ஹாலிலிருந்து காணாமல்போன சிசிடிவி காட்சிகள் பதிவான டி.வி.ஆரைத் தேடுவதிலேயே இருந்தது. அதற்காக, ஹோட்டல் உரிமையாளர் ரோய் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரம் பற்றி கடந்த 24.11.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘பின்தொடர்ந்த ஆடி கார்... மாயமான சிசிடிவி காட்சிகள்... மாடல் அழகிகள் விபத்தில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான், அந்த நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற 30 பேரிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இரவு பார்ட்டிக்கு போதைப்பொருள் சப்ளை செய்வதுதான் ஷைஜூ தங்கச்சனின் வேலை என்ற ‘க்ளூ’ கிடைக்கவே... மீண்டும் ஷைஜூவை வளைத்தது போலீஸ். அவரைக் கைதுசெய்து நவம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவரது மொபைல்போனிலிருந்து முக்கிய ஆதாரங்கள் சிக்கின. தொடர்ந்து, மேலும் மூன்று நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்ததை அடுத்து, டிசம்பர் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது.

ஆன்சி கம்பீர்
ஆன்சி கம்பீர்

ஷைஜூவிடம் விசாரணை நடத்திய போலீஸ் ஒருவரிடம் பேசினோம்... ‘‘வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்யும் ஷைஜூ தங்கச்சன் 20 லட்சம் ரூபாய்க்கு செகண்ட் ஹேண்ட் ஆடி கார் வாங்கியிருக்கிறார். தினமும் ஒவ்வொரு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகிறார். அவருக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகத்துக்கு விடை தேடினோம். அவரது மொபைலை ஆய்வு செய்தபோது இன்ஸ்டாகிராம் சாட்டில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. கொச்சி, மூணாறு, மாராரிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்களின் இரவு பார்ட்டிகளுக்கு அவர் போதைப்பொருள் சப்ளை செய்திருக்கிறார். இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் அவரது இன்பாக்ஸில் நிரம்பிக்கிடக்கின்றன. மூணாறில் நடந்த இரவு பார்ட்டியில் காட்டுமாட்டை வேட்டையாடிச் சமைத்ததாக, பெண் தோழி ஒருவரிடம் ஜூலை 26-ம் தேதி இன்ஸ்டாகிராமில் சாட் செய்திருக்கிறார். இது பற்றி வனத்துறை தனியாக விசாரணை நடத்திவருகிறது.

அஞ்சனா ஷாஜன்
அஞ்சனா ஷாஜன்

ஷைஜூவின் போனில் பல இளம்பெண்களின் புகைப்படங்கள் உள்ளன. இரவு பார்ட்டிக்கு போதைப்பொருள் சப்ளை செய்வதுடன், பார்ட்டியில் கலந்துகொள்ளும் இளம்பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஷைஜூவின் தொழிலாக இருக்கிறது. அந்தப் புகைப்படங்களில் இருக்கும் பெண்களிடமும் ரகசியமாக விசாரித்துவருகிறோம். அப்படித்தான் தனது வழக்கமான பாணியில் போதைப்பொருள் கொடுத்து இந்த இரண்டு மாடல்களையும் வளைக்க முயன்றிருக்கிறார். அவர்கள் உடன்படாததால் ஹோட்டலில் வைத்தே தகராறு செய்திருக்கிறார். இதனால் ஹோட்டலிலிருந்து வெளியேறிய மாடல்கள் காரில் சென்றபோது, அப்போதும் விடாமல் துரத்திச் சென்று, குண்டனூரில் ரோட்டின் குறுக்கே தனது ஆடி காரை நிறுத்தி வழிமறித்துள்ளார். அப்போதுதான் மாடல்கள் சென்ற கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. மாடல்கள் இருவரும் மரணமடைந்ததற்கு ஷைஜூ முக்கியக் காரணம். ஷைஜூவுக்குப் போதைப்பொருள்கள் எங்கிருந்து வருகின்றன, அவரிடம் சிக்கும் பெண்களின் நிலை என்ன, மாடல்களை யாருக்காக வளைக்க முயன்றார், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றார்கள்.

காட்டுமாடு சமைத்து விருந்து... இளம்பெண்களுக்கு போதைப்பொருள் சப்ளை...

ஷைஜூவிடம் முழுமையாக விசாரணை நடத்துவதுடன், ‘நம்பர் 18’ ஹோட்டலில் சிசிடிவி காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் காணாமல் போன விவகாரமும் தோண்டியெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த இரண்டு மாடல்களின் மரணம் மட்டுமல்லாமல், மேலும் பல பெண்களின் துயரங்களும் வெளிப்பட வாய்ப்பு உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism