Published:Updated:

விடாது தொடரும் ‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்! - மாடல்கள் மரணம் முதல் போக்சோ வழக்கு வரை...

‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்
பிரீமியம் ஸ்டோரி
‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்

இளம்பெண்களுக்கு வலைவீசினாரா அஞ்சலி ரீமாதேவ்?

விடாது தொடரும் ‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்! - மாடல்கள் மரணம் முதல் போக்சோ வழக்கு வரை...

இளம்பெண்களுக்கு வலைவீசினாரா அஞ்சலி ரீமாதேவ்?

Published:Updated:
‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்
பிரீமியம் ஸ்டோரி
‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்

கேரளாவின் சினிமா நகரமான கொச்சியில் ‘நம்பர் 18’ ஹோட்டலின் நள்ளிரவு பார்ட்டியில் கலந்துகொண்ட பிறகு வெளியேறிய மாடல் அழகிகளான ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் ஆகியோர் கார் விபத்தில் இறந்த வழக்கை போலீஸார் விசாரித்துவருகிறார்கள். இந்த வழக்கின் மர்ம முடிச்சுகளே அவிழாத நிலையில், அதே ஹோட்டலில்வைத்து, தனக்கும் தன் 17 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்டவர்கள்மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் 38 வயதான தாய்.

2019-ல் மிஸ் கேரளாவாகத் தேர்வான ஆன்சி கம்பீரும், 2-ம் இடத்தைப் பிடித்த அஞ்சனா ஷாஜனும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கொச்சி போர்ட் சிட்டியிலுள்ள ‘நம்பர் 18’ ஹோட்டலில் நடந்த நள்ளிரவு பார்ட்டிக்குச் சென்றார்கள். அங்கு சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து நள்ளிரவில் தங்கள் நண்பர்கள் முஹம்மது ஆசிக், அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் காரில் வேகமாக கிளம்பிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஆன்சி கம்பீரும், அஞ்சனா ஷாஜனும் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். முஹம்மது ஆஷிக் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். கார் ஓட்டிய அப்துல் ரஹ்மான் மட்டும் உயிர்பிழைத்தார்.

விடாது தொடரும் ‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்! - மாடல்கள் மரணம் முதல் போக்சோ வழக்கு வரை...

ஷைஜூ தங்கச்சன் என்பவர் மாடல்களின் காரை, தனது ஆடி காரால் துரத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது; ‘நம்பர் 18’ ஹோட்டல் உரிமையாளர் ரோய் வயலாட் இதன் பின்னணியில் இருக்கிறார் என்கிற விஷயங்களெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன. இந்த வழக்கில் ஷைஜூ தங்கச்சன், ரோய் வயலாட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நடிகர், அரசியல் பிரமுகர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கெல்லாம் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

மேற்கண்ட வழக்கின் சூடே இன்னும் தணியவில்லை... இந்த நிலையில்தான், ‘நம்பர் 18’ ஹோட்டலில்வைத்து தன்னையும், தன் மகளையும் ரோய் வயலாட் பாலியல் தொல்லை செய்ததாக கோழிக்கோட்டைச் சேர்ந்த 38 வயதான தாய், கொச்சி போர்ட் சிட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதில் ரோய் வயலாட், ஷைஜூ தங்கச்சன், அவரின் தோழி அஞ்சலி ரீமாதேவ் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் தலைமறைவாகிவிட்டார்கள்.

விடாது தொடரும் ‘நம்பர் 18’ ஹோட்டல் மர்மம்! - மாடல்கள் மரணம் முதல் போக்சோ வழக்கு வரை...

பாலியல் புகார் அளித்த தாய் கூறுகையில், ‘‘ஷைஜூ தங்கச்சனின் தோழி அஞ்சலி ரீமாதேவ் என்பவர், கோழிக்கோட்டில் எங்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து என் மகளை கொச்சிக்கு அழைத்துச் சென்றவர், அவரது அலுவலகத்திலேயே வேலைக்கு அமர்த்திக்கொண்டார். 2021, அக்டோபர் 20-ம் தேதி ‘பிசினஸ் கெட் டுகெதர்’ நிகழ்ச்சி என்று கூறி ‘நம்பர் 18’ ஹோட்டலுக்கு ஷைஜூ தங்கச்சனும், அஞ்சலியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு நள்ளிரவு பார்ட்டி நடந்தபோது ரோய் வயலாட் உள்ளிட்ட சிலர் எங்களை போதைப்பொருள் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்தார்கள். அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கிருந்து தப்பி, ரிசப்ஷனில் இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டோம். அந்த ஹோட்டலில் நள்ளிரவு பார்ட்டியில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது பற்றியும், இளம்பெண்களை எப்படியெல்லாம் வலையில் வீழ்த்துகிறார்கள் என்பது பற்றியும் எங்களிடமிருந்த ஆதாரங்களை போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களுக்கு மிரட்டல்கள் வந்ததால், புகார் அளிக்க தாமதமாகிவிட்டது’’ என்றார்.

இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் அஞ்சலி ரீமாதேவ், ஃபேஸ்புக்கில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுப் பேசியிருக்கிறார். அதில் அவர், ‘‘தன் மகளைப் பல இடங்களுக்கு அழைத்து வரும்போது 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது அவருக்குத் தெரியவில்லையா? ஷைஜூவும் நானும் பர்சனலாக செல்லும் டூரில் 18 வயது பூர்த்தியாகாத மகளையும், வேறு சில பெண்களையும் அழைத்துக்கொண்டு அந்த அம்மா வந்தார். என் அலுவலகத்திலுள்ள அஃபீஷியல் டாக்குமென்ட்டுகளையும், பர்சனல் மீட்டிங் ஆகியவற்றையும் ரெக்கார்டிங் செய்துள்ளார்கள். ரோய் வயலாட்டை எனக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். மற்றபடி ரோய் வயலாட்டுடன் எனக்குத் தனிப்பட்ட எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஷைஜூ தங்கச்சன், ரோய் வயலாட்
ஷைஜூ தங்கச்சன், ரோய் வயலாட்

மாடல்கள் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போலீஸாரே இந்த வழக்கையும் விசாரித்துவருகிறார்கள். அஞ்சலி ரீமாதேவ் குற்றம் செய்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தின் உள்விவரங்கள் அறிந்த சிலர் நம்மிடம், ‘‘போதை மாஃபியாக்கள் அஞ்சலி ரீமாதேவ் போன்ற பெண்கள் மூலமாக அழகான இளம்பெண்களைத் தங்கள் நட்பு வட்டத்துக்குள் கொண்டுவந்து, முதலில் இலவசமாக போதைப்பொருள்களைக் கொடுக்கிறார்கள். அவர்கள் போதைக்கு அடிமையானதும் போதைப்பொருள்களுக்கு பணம் கேட்பார்கள். போதை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்படும்போது, இவர்கள் சொல்லும் எதையும் செய்யும் மனநிலைக்கு அந்தப் பெண்கள் சென்றுவிடுகிறார்கள். இப்படித்தான் அவர்கள் வி.ஐ.பி-களுக்கு சப்ளை செய்யப்படுகிறார்கள்’’ என்றார்கள்.

இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தால், பலரது முகமூடி கிழியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism