அரசியல்
Published:Updated:

குழந்தையோட அழுகை காதுல கேட்டுட்டே இருக்கு! - கேரளத்தை உலுக்கிய தாயின் பாசப்போராட்டம்...

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

பால்மணம் மாறாத பிஞ்சை, பிறந்த மூன்றாம் நாளே தாயிடமிருந்து பிரித்திருக்கிறார் அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரன்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு தாய் தன் குழந்தையைத் தேடி ஓராண்டுக்கும் மேலாக நடத்தும் பாசப்போராட்டம் கேரள மக்களைக் கண்கலங்க வைத்துள்ளது. அந்தப் பெண் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றதால், சி.பி.எம் பிரமுகரான அந்தப் பெண்ணின் தந்தை, பிறந்து மூன்றே நாளான சிசுவை ஆந்திர மாநிலத்தில் யாருக்கோ தத்துக் கொடுத்துவிட்டார். கேரள சட்டசபை வரை எதிரொலித்த இந்தப் பிரச்னைக்கு இதுவரை முடிவு கிடைக்கவில்லை!

திருவனந்தபுரம் பேரூர்கடை சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினர் ஜெயச்சந்திரனின் மகள் அனுபமா. இவரும் அஜித் என்பவரும் காதலித்திருக்கிறார்கள். அஜித்துக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அது தெரிந்தே அனுபமா அவரைக் காதலித்து, நெருக்கமாக இருந்திருக்கிறார். ஏற்கெனவே நடந்த திருமணத்தில் விவகாரத்து பெற்றுவிட்டு, அனுபமாவை கரம்பிடிப்பதாகச் சொல்லியிருக்கிறார் அஜித்.

குழந்தையோட அழுகை காதுல கேட்டுட்டே இருக்கு! - கேரளத்தை உலுக்கிய தாயின் பாசப்போராட்டம்...

இதற்கிடையே கர்ப்பமடைந்த அனுபமா 2020, அக்டோபர் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பால்மணம் மாறாத பிஞ்சை, பிறந்த மூன்றாம் நாளே தாயிடமிருந்து பிரித்திருக்கிறார் அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரன். “அக்காவுக்குத் திருமணம் முடிந்த பிறகு குழந்தையைத் தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்து எடுத்துச் சென்றவர், மகளுக்குத் தெரியாமல் ஆந்திராவில் ஒரு தம்பதியருக்குத் தத்துக் கொடுத்துவிட்டார். ஆனால், இதை அறியாமல், தன் குழந்தை சீக்கிரமே கிடைத்துவிடும் என்று அக்காவின் திருமணத்துக்காகக் காத்திருந்தார் அனுபமா. அக்காவின் திருமணமும் நடந்தது. அதன் பிறகும் குழந்தை வரவில்லை.

இது பற்றிக் கேட்டபோது பெற்றோர் மழுப்பவே... சந்தேகமடைந்தவர், பேரூர்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யாத போலீஸார், ஜெயச்சந்திரனிடம் விசாரித்திருக்கிறார்கள். அவரோ, ஒரு பேப்பரைக் காட்டி “அனுபமாவின் கையெழுத்தைப் பெற்று, அவரது சம்மதத்தின் பேரில்தான் குழந்தையை தத்துக் கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அனுபமா, “சொத்துத் தொடர்பாக என்று சொல்லித்தான் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இப்படி மோசடி செய்வார்கள் என்று தெரியாது” என்று கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு போலீஸாரும் இந்தப் புகாரைக் கண்டுகொள்ளவில்லை.

குழந்தையோட அழுகை காதுல கேட்டுட்டே இருக்கு! - கேரளத்தை உலுக்கிய தாயின் பாசப்போராட்டம்...

தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட சி.பி.எம் செயலாளர் ஆனாவூர் நாகப்பன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் முறையிட்டார் அனுபமா. எதுவும் நடக்கவில்லை. இதையடுத்தே மீடியாக்களின் உதவியை நாடினார். ‘பிரசவித்த மூன்றாவது நாளில், பிரசவ மயக்கத்திலிருந்த குழந்தையின் தாயை ஏமாற்றி, குழந்தையை சட்டவிரோதமாகத் தத்துக் கொடுத்து விட்டார்கள்’ என்று மீடியாக்கள் விஷயத்தை அம்பலப்படுத்தவே... அதன் பிறகே பரபரப்பானது கேரளம்.

குழந்தையின் முதல் பிறந்த நாளான அக்டோபர் 19-ம் தேதி பேரூர்கடை போலீஸ் அனுபமாவின் புகாரில் வழக்கு பதிவு செய்தது. கேரள சட்டசபையில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்த விவகாரத்தைக் கிளப்பினார். இதையடுத்தே விழித்துக்கொண்ட அரசு, ‘அனுபமாவின் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, தடையும் வாங்கியது. ஜெயச்சந்திரன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறது சி.பி.எம் மேலிடம்.

“குழந்தை வீறிட்டு அழுற குரல் இன்னமும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு...” என்று கண்கலங்கியபடி நம்மிடம் பேசினார் அனுபமா... “எங்க காதலுக்கு வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்ச நிலையில, நான் கர்ப்பம் அடைஞ்சதை அவங்களால ஏத்துக்க முடியலை. எப்படியாவது என் கருவைக் கலைச்சிடணும்னு அவங்க பண்ணாத முயற்சி இல்லை. ஆனா, என் குழந்தை எனக்கு வேணும்னு நான் பிடிவாதமா இருந்துட்டேன். அப்ப லாக்டெளன் போட்டதால என்னால வீட்டைவிட்டு வெளியேறவும் முடியலை. பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு போனப்பதான் என் அப்பாவுக்குத் தெரியாம அஜித்துக்கு போன் செஞ்சேன். என்னையும் குழந்தையையும் அழைச்சுக்கிட்டுப் போக அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயச்சந்திரன்
ஜெயச்சந்திரன்

ஆனா, என்கிட்ட ‘குடும்ப கெளரவம் போயிடும்... அக்காவோட கல்யாணத்தை சீக்கிரமே நடத்திட்டு, குழந்தையை கொடுத்துடுறேன். அதுவரைக்கும் வெளியில பாதுகாப்பா வளர்க்க ஏற்பாடு செய்யறேன்’னு எங்கப்பா கண்கலங்கக் கேட்டார். அதை நம்பி சம்மதிச்சேன். குழந்தை பொறந்த மூணாவது நாளே தாய்ப்பால் குடிச்சிட்டு இருந்த என் குழந்தையை வலுக்கட்டாயமா எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. ஆனா, என் அப்பாவே இப்படி சதி செய்வாருன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. அஜித்தோட விவாகரத்து கடந்த ஜனவரி மாசமே முடிஞ்சுடுச்சு. நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னா என் சர்ட்டிஃபி கேட்டைக்கூட என் வீட்டுல தர மாட்டேங்குறாங்க... இந்நேரம் என் குழந்தை எங்க இருக்குதோ... யார்கிட்ட இருக்குதோ தெரியலை... நான் பெத்த குழந்தைக்கு வேற யாரோ பேரு வெச்சிருப்பாங்க...” என்றவர், அடுத்து சொன்ன விஷயம்தான் மனதை நெகிழவைத்தது.

“என் குழந்தையை தத்து எடுத்தவங்க, அவங்களுக்கு குழந்தையே பிறக்காததாலதானே தத்து எடுத்திருப்பாங்க... அவங்க குழந்தையா நெனைச்சுத்தானே வளர்த்திருப்பாங்க... கட்டியணைச்சு முத்தம் கொடுத்திருப்பாங்க. இப்ப அதைப் பிரிக்குறதால அவங்க மட்டுமில்லாம என் குழந்தையும் எவ்வளவு பாதிக்கப்படும்னு எனக்குப் புரியுது. ஆனாலும், என் குழந்தையை நான் விட்டுக்கொடுக்க முடியாது. என் குழந்தை எனக்கு வேணும். பெத்த அம்மாவோட வாழுறதுதான் குழந்தையோட உரிமை” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே!

தனிமனித உறவுகளில் ஆயிரம் சிக்கல்கள் எழலாம். அதற்காக, பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையைப் பிரித்தது மிகப்பெரிய தவறு! என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.