கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த திருநம்பி, மனு கார்த்திகா. இவர் டெக்னோ பார்க்கில் சீனியர் ஹெச்.ஆர் எக்ஸிகியூட்டிவாகப் பணிபுரிந்து வருகிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கை சியாமா எஸ்.பிரபா. இவர் கேரள சமூக நலத்துறை திருநங்கைகள் செல் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். இவர்கள் இருவருடைய திருமணம் திருவனந்தபுரம் இடப்பள்ளி அழகாபுரி ஆடிட்டோரியத்தில் காதலர் தினமான நேற்று நடைபெற்றது. மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் சுற்றமும் நட்பும் புடைசூழ நடந்தது திருமணம். இது கேரளத்தின் முதல் திருநர் திருமணம் என்பதால் கவனம்பெற்றுள்ளது. எம்.எட் படித்திருக்கும் சியாமாவுக்கு, பிஹெச்.டி படித்து ஆசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை. அந்த கனவுகளுக்கிடையே மனுவை கரம்பிடித்துள்ளார் சியாமா.

இந்தத் திருமணம் குறித்து மணப்பெண் சியாமா கூறுகையில், ``நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கம்யூனிட்டி மீட்டிங் போன்ற இடங்களில் சந்தித்திருக்கிறோம். அப்போது நாங்கள் சர்ஜரி செய்துகொள்ளவில்லை. சாதாரணமாகப் பேசிக்கொள்வோம் அவ்வளவுதான். 2017-ல் என் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக மனு ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் விருப்பத்தைக் கூறினார். நான் வாழ்க்கையை சீரியஸாகப் பார்க்கிறேன், தமாசாகக் காதலிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, காதலித்தால் திருமணம் செய்ய வேண்டும் என்று பதில் கூறினேன்.
பின்னர் நாங்கள் காதலிக்கத்தொடங்கினோம். எங்களுக்கு காதல் ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலானாலும், வீட்டினரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய வேண்டும் எனக் காத்திருந்தோம். அதனால்தான் திருமணத்துக்கு காலதாமதம் ஆனது. காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இந்த நாளை நாங்கள் தேர்வு செய்யவில்லை. எங்கள் வீட்டினர் தேர்வு செய்த நாள் இது. எல்லோரது பங்களிப்புடன் இந்தத் திருமணம் நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கல்யாணத்தை சட்டப்படி பதிவு செய்ய உள்ளோம். எங்களுக்கு திருநர் அரசு அடையாள அட்டைகள் உள்ளன. எனவே, சட்டப்படி திருமணத்தைப் பதிவு செய்ய கோர்ட்டை நாடும் நிலை ஏற்பட்டாலும் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

இதுபற்றி மணமகன் மனு கூறும்போது, ``என் விருப்பத்தைக் கூறியதும், காதலித்தால் திருமணம் செய்ய வேண்டும் என்று சியாமா சொன்னதால் அவர் மீதான மதிப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாது யோசிக்க டைம் வேண்டும் என சியாமா கேட்டார். அந்த நேரத்தில் அவருக்கு, அவரின் நண்பர் மூலம் வாட்ச் கிஃப்ட்டாகக் கொடுத்தனுப்பினேன். முடிவை அறிவிக்கக் காலதாமதம் ஆகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே அதைப் பரிசாக அனுப்பியதாக சியாமாவிடம் போனில் சொன்னேன். அவர் சம்மதத்தைத் தெரிவித்த பிறகும் அதிக நேரம் போனில் பேசுவது, ஊர்சுற்றுவது என எதுவும் செய்யவில்லை. மிகவும் தாமதமாகத்தான் நண்பர்களிடம் எங்கள் காதல் பற்றிச் சொன்னோம். நாங்கள் காதலிப்பதாகச் சொன்னதும் எங்கள் கம்யூனிட்டியில் உள்ளவர்களே அதிசயித்துப்போனார்கள்.
இவ்வளவு ஆண்டுகள் திருமணத்துக்காகக் காத்திருந்தோம். காத்திருந்தது நல்ல முடிவு என இப்போது தோன்றுகிறது. அனைவரின் ஆதரவோடு திருமணம் நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
``நாங்கள் எங்களுக்கு என ஒரு வீட்டைக் கட்டி, சட்டப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கப்போகிறோம்" என்கிறார்கள் காதல் தம்பதி.