கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

நீர் வழி
பிரீமியம் ஸ்டோரி
News
நீர் வழி

இப்போது சுற்றுலாவுக்காக இந்த நீர்வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டவுளின் தேசம் கேரளத்தின் அழகியலே உள்ளங்கையில் ரேகைபோல மா`நில’ப் பரப்பில் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நீர்நிலைகள் தான்!

இப்படி நீக்கமற நிறைந்திருக்கும் நீர்நிலைகளை அழிக்காமல் பாதுகாத்து வந்த கேரளம், தற்போது நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கேரளத்தில் ஒன்பது மாவட்டங்களை இணைக்கும் இந்தியாவின் முதல் நீர்வழிப்பாதைதான் அது.

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

கேரளத்தில் மொத்தம் 620 கிலோ மீட்டர் நீளமுடைய தேசிய நீர்வழிப்பாதைத் திட்டத்தின் முதல் தடத்தை கடந்த பிப்ரவரி 15-ம் தேதி திறந்துவைத்த முதல்வர் பினராயி விஜயன், முதற்கட்டமாக 320 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நீர்வழிப்பாதையைத் திறந்து வைத்து அதில் சோலார் படகில் பயணித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது கொச்சியில் மெட்ரோ ரயில் தடங்களை இணைக்கும் `வாட்டர் மெட்ரோ’ என்ற பேட்டரி படகுப் போக்குவரத்துக்கான மையத்தையும் திறந்து வைத்திருக்கிறார். ஏற்கெனவே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குப் படகுப் போக்குவரத்தை மாநில அரசு செயல்படுத்திவருகிறது. இப்போது மாநில நீர்வழிப் போக்குவரத்துடன், தேசிய நீர்வழிப்பாதை, வாட்டர் மெட்ரோ ஆகிய திட்டங்கள் என நீர்நிலைகளைப் பயன்படுத்தி மூன்று போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறது கேரள அரசு.

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

அதென்ன தேசிய நீர்வழிப்பாதை? கேரள நீர்வழி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (Kerala Waterways and Infrastructure Ltd -KWIL) தலைமைப் பொறியாளர் சுரேஷ்குமாரிடம் பேசினேன்.

“பெரிய படகுகள் மூலம் நிலப்பரப்பு தூரத்தை நீர்வழியில் கடந்து செல்ல உருவாக்கப்பட்டுள்ள நீர்வழிதான் தேசிய நீர்வழிப்பாதை. தெற்கே திருவனந்தபுரத்தின் கோவளத்தில் தொடங்கி வடக்கே காசர்கோடு மாவட்டத்தின் `பேக்கல் போர்ட்’ வரை 620 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நீர்வழித்தடம் அமைய உள்ளது. கேரளத்தில் அடுத்தடுத்து இரண்டு காயல்கள் உள்ளன. (காயல் - கடலிலிருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர் பாயும் ஆற்றுப்பகுதி) அதைத் தொடர்ந்து கால்வாய்களும் உள்ளன. மொத்தமுள்ள 620 கிலோ மீட்டரில் 50 கிலோ மீட்டர் பகுதியில்தான் கால்வாய் இல்லாமல் நிலப்பரப்பாக உள்ளது. கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள அந்த 50 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கால்வாய் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது.

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2025 வரை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏற்கெனவே இருக்கும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தி பெரிய படகுப் போக்குவரத்துக்காகத் தயார்படுத்தியுள்ளோம். அந்த 320 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நீர்வழிப்பாதையைத்தான் முதல்வர் திறந்துவைத்திருக்கிறார். 2022-ல் இரண்டாவது கட்டப் பணிகள் நிறைவடையும். அடுத்ததாக மூன்றாம் கட்டப் பணிகள் நடக்கும்.

மொத்தம் 3,000 கோடி ரூபாய் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணி 280 கோடி ரூபாயில் நடைபெற்றுள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாநிலம் முழுவதும் தினமும் லாரியில் பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டுவருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அவை இனி படகில் கொண்டுசெல்லப்படும். அதுமட்டுமல்லாது வல்லார்பாடம் துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்களை எடுத்துச் செல்லவும் தேசிய நீர்வழிப்பாதை பயன்படும்.

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

இப்போது சுற்றுலாவுக்காக இந்த நீர்வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பயணிகள் படகு சேவை தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன” என்றார்.

அரசுப் படகுப் போக்குவரத்து

கேரளத்தின் ஐந்து பகுதிகளில் மாநில அரசு படகுப் போக்குவரத்து நடத்திவருகிறது. கேரளா ஸ்டேட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் டிராபிக் சூப்பிரண்டண்ட் சுஜித் மோகன், “கேரளத்தில் ஆறு மாவட்டங்களுக்கிடையே நீர்வழிப்பாதைகளில் இப்போது படகுப் போக்குவரத்து நடந்துவருகிறது. கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நீர்வழிப் போக்குவரத்து உள்ளது. கண்ணூர் - காசர்கோடு, கோட்டயம் - ஆலப்புழா எனப் பக்கத்தில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் விதமாகவும் படகுப் போக்குவரத்து நடந்துவருகிறது. அதில் இந்தியாவில் முதல் சோலார் படகு வைக்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐந்து சோலார் படகுகள் தயார் செய்யும் பணி நடந்துவருகிறது” என்றார்.

நீண்டு செல்லும் நீர்வழிப்பாதை

ஆலப்புழா மாவட்டம் தவணக்கடவில் இருந்து கோட்டயம் மாவட்டம் வைக்கத்துக்கு இயக்கப்படும் இந்தியாவின் முதல் சோலார் படகு குறித்து அறிந்துகொள்ள நேரில் சென்றோம். அந்த ரூட்டில் ஏற்கெனவே ஒரு டீசல் இன்ஜின் படகு இயக்கப்படுகிறது. அத்துடன் ஆதித்யா என்ற சோலார் படகும் இயக்கப்படுகிறது. விசாலமாகவும் அழகாகவும் இருக்கிறது சோலார் படகு. சோலார் படகைப் பராமரிக்கும் டெக்னீஷியன் அனந்து கிருஷ்ணா, “இது இந்தியாவின் முதல் சோலார் படகு. ஒருநாளில் 11 முறை சென்றுவருகிறோம். மழைக்காலங்களில் சோலார் மூலம் சார்ஜ் ஆகாது என்பதால் கேரள இ.பி-யில் இருந்து மின் இணைப்பு மூலம் சார்ஜ் செய்கிறோம். அதற்கான தொகை வாட்டர் டிரான்ஸ்போர்ட் மூலம் செலுத்தப்படுகிறது. இந்தப் படகால் ஆண்டுக்கு 35,000 லிட்டர் டீசல் சேமிக்கப்படுகிறது. பண மதிப்பீட்டில் சுமார் 22 லட்சம் ரூபாய் சேமிக்கப்படுகிறது. ஒரு முறை 75 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது இந்தப் படகு. கொச்சியைச் சேர்ந்த நவகதி என்ற நிறுவனம் 1.84 கோடி ரூபாயில் தயாரித்த இந்த சோலார் படகில் கண்காணிப்பு கேமரா, டிஜிட்டல் டி.வி ஆகியவை உள்ளன. `கற்றாமர’ என்ற தொழில்நுட்பத்தின் படி இரண்டு படகுகளின் மீது இருப்பது போன்று படகு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின் கொண்டு இயங்குவதால் சொகுசாக இயங்குகிறது” என்றார்.

நீர்நிலைகளைப் பாதுகாத்து, இயற்கைக்கு வெல்கம் சொல்லி மகிழ்ச்சியான ‘நீர்வழி’ போக்குவரத்தை உருவாக்கியதில் கேரளம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது.

சுரேஷ்குமார், சுஜித் மோகன், அனந்து கிருஷ்ணா
சுரேஷ்குமார், சுஜித் மோகன், அனந்து கிருஷ்ணா

கொச்சி வாட்டர் மெட்ரோ

கொ
ச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டம் மூலம் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பத்துத் தீவுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். மெட்ரோ ரயில் நிலையத்தில் பஸ், ஆட்டோ, கார் ஆகியவற்றுடன் படகுப் போக்குவரத்தையும் இணைக்க 747 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதலில் வைற்றிலா மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் படகுத் தளம் திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போன்று முழுவதும் குளிரூட்டப்பட்ட 78 படகுகள் இயக்கப்பட உள்ளன. 50 பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் மற்றும் 100 பயணிகளை ஏற்றிச்செல்லும் பெரிய வகைப் படகுகளும் இயக்கப்படவுள்ளன. அதற்காக 38 படகு இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மற்ற படகு இறங்கும் தளங்கள் விரைவில் பணிமுடித்து, திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், படகுகள் இயக்குவதற்கான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவில் முடிக்கப்படவுள்ளது.

இனி ரயிலுக்கு நோ..!

ரு டன் சரக்கை லாரியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் செல்ல ரூ.2.80 செலவாகிறது. அதே சரக்கை ஒரு கிலோ மீட்டர் ரயில் கொண்டு செல்ல 82 பைசா செலவாகிறது. ஆனால் படகில் எடுத்துச் செல்ல 65 பைசா மட்டுமே ஆகிறது என அதிகாரிகள் கணக்கு சொல்கிறார்கள். அதே சமயம் லாரிகளுக்கு வேலை குறைவதால் சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். சரக்குப்போக்குவரத்துக்கு டீசல் படகுகளும், பயணிகளுக்காக சோலார் படகுகளும் பயன்படுத்தப்படவுள்ளன.