Published:Updated:

`முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால் என் உயிருக்கு ஆபத்து!'- நெல்லை டி.ஐ.ஜி-யிடம் புகாரளித்த கேரளப் பெண்

நகைகள் தேவைப்பட்டதால் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்கு, குட்கா வழக்காலும், வருமான வரித்துறை சோதனையாலும் சிக்கல் இருப்பதால் உடனடியாகக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கணவர் ராஜிவ். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஷர்மிளாவும் அவர் கணவரும் கேரள மாநிலம் திருவள்ளா, கர்நாடகாவின் பெங்களூரு ஆகிய நகரங்களில் பிரபல நிறுவனங்களின் ஆயத்த ஆடைகளுக்கான துணிக்கடைகள் கடத்தி வருகின்றனர்.

புகார் அளித்த கேரள பெண் ஷர்மிளா
புகார் அளித்த கேரள பெண் ஷர்மிளா

இந்த நிலையில் ஷர்மிளா, தங்களிடம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது விஜயபாஸ்கரும் அவர் மனைவி ரம்யாவும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நெல்லை சரக காவல்துறை டி.ஐ.ஜி-யான பிரவீன் குமார் அபினபுவிடம் புகார் அளித்திருக்கிறார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா,``கடந்த 2013-ம் ஆண்டு, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தஞ்சையில் நடந்த திருமண விழாவொன்றில் சந்தித்தேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் எங்களுடைய கடைக்கும் வீட்டுக்கும் வந்து சென்றார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர் குவாரி உட்பட 16 குவாரிகள்... கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

பின்னர் அவர் எங்களுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அந்த சமயத்தில் எனக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டதால் என்னிடம் இருந்த 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை தன்னிடம் கொடுத்து வைக்குமாறு விஜயபாஸ்கரும் அவரின் மனைவி ரம்யாவும் கேட்டுக் கொண்டதால் அவரிடம் கொடுத்து வைத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு எங்களுக்குத் தொழில் தொடங்குவதற்கு நகைகள் தேவைப்பட்டதால் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்கு, தனக்கு குட்கா வழக்கு தொடர்பாகவும், வருமான வரித்துறை சோதனையாலும் சிக்கல் இருப்பதால் உடனடியாகக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வரும் ஷர்மிளா
டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வரும் ஷர்மிளா

ஆனால் எனக்குப் பணம் உடனடியாகத் தேவைப்பட்டதால் தொடர்ந்து அவரிடம் பணத்தைக் கேட்டு வந்தேன். காலதாமதம் செய்துகொண்டே இருந்த அவர் நான் கொடுத்த நெருக்கடி காரணமாக 3 கோடி ரூபாயைச் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து சிலர் மூலம் செட்டில் செய்தார். அதன் பின்னரும் பணத்தைக் கேட்டபோது, `உன் குடும்பத்தையே கொலை செய்து கல்குவாரியில் புதைத்து, சுவடே தெரியாமல் மறைத்து விடுவேன்' என மிரட்டினார்.

நான் தொடர்ந்து, நகை அல்லது பணம் கொடுக்குமாறு கேட்டதால் விஜயபாஸ்கர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி என் மீது கரூர் காவல்நிலையத்தில் பொய் வழக்கு போட்டார். அதனால், நான் தமிழகத்துக்குள் வர முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் விஜயபாஸ்கர் மீது டி.ஜி.பி-யிடம் புகார் அளிப்பேன். தீபாவளிக்குப் பின்னர் முதல்வரையும் சந்தித்து முறையிடுவேன்.

புகார் மனுவுடன் ஷர்மிளா
புகார் மனுவுடன் ஷர்மிளா

இதற்காக நான் அடிக்கடி தமிழகத்தின் தென்காசி வழியாக வர வேண்டியதிருப்பதால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பொறுப்பு. அதனால் தமிழகத்துக்குள் வரும்போது எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நெல்லை சரக டி.ஐ.ஜி-யிடம் கோரிக்கை வைக்க வந்தேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு