Published:Updated:

`` `வைரஸ் வருது'ன்னு கிண்டல் பண்ணுவாங்க!" கேரளப் பெண் `கொரோனா' ஜாலி பேட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோட்டயத்தைச் சேர்ந்த கொரோனா
கோட்டயத்தைச் சேர்ந்த கொரோனா

``இத்தனை வருடங்களாக நார்மலான பெயராகயிருந்த என் பெயர், கொரோனா வைரஸ் உலகில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து ஜாலி பெயராகிவிட்டது." - கொரோனா

``கொரோனா... சீக்கிரம் இங்கே வா..." - பொதுவிடம் ஒன்றில் யாரோ யாரையோ அழைக்க, கழுத்தொடிய சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள் மக்கள். 34 வயது இல்லத்தரசி கொரோனா, கொஞ்சம் கூச்சமும் கொஞ்சம் சிரிப்புமாக அனைவரின் பார்வையையும் கடந்துசெல்கிறார். ஆம்... அவர் பெயரே கொரோனாதான்!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் வேளையில், கேரளப் பெண் கொரோனாவிடம் பேசினோம். கேரள மாநிலம், கோட்டயத்தில் வசிக்கிறார் கொரோனா.

``எங்கள் ஊரில் இப்போது என்னை `வைரஸ் வருது', `கோ கொரோனா கோ' என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்'' என்று சிரித்தபடியே ஜாலியாகப் பேசினார் கொரோனா.

``நான் பிறந்தது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கரிப்பாடு, முத்துக்குளம். கணவர் ஊர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சுங்கம்.

கணவன் குழந்தைகளுடன் கொரோனா
கணவன் குழந்தைகளுடன் கொரோனா

நான் பிறந்த மூன்றாவது மாதம் ஞானஸ்தானம் எடுக்க என் அம்மாவும் அப்பாவும் எங்கள் ஊரில் உள்ள சென் செபாஸ்டின் சர்ச்சுக்கு என்னை தூக்கிச் சென்றார்கள். அப்போது சர்ச்சில் இருந்த போதகர் எனக்கு `கொரோனா' என்று பெயர் வைத்தார். `கொரோனா' என்றால் `கிரீடம் (Crown)' என்று அர்த்தம் சொன்னார்கள்.

எனக்கு இப்போது 34 வயதாகிறது. இத்தனை வருடங்களாக நார்மலான பெயராகயிருந்த என் பெயர், கொரோனா வைரஸ் உலகில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து ஜாலி பெயராகிவிட்டது. என் கணவர், பிள்ளைகளிலிருந்து ஊர்க்காரர்கள் வரை என்னை ஒரே கேலி, கிண்டல்தான்!

என் கணவர் ஷைன் தாமஸ், மீன்பிடி தொழில் செய்கிறார். கெவின், நவீன் என இரண்டு குழந்தைகள். இப்போது வீட்டுக்குள் நான் நடமாடும்போதெல்லாம், `வைரஸ் வருது' என்கிறார் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து சிரித்தபடி. என் இளைய மகன் என்னை, `கொரோனா அம்மே' என்றே விளிக்கிறான். `வைரஸ் நிக்குது பாருங்க... எல்லாரும் பத்தடி தள்ளி நில்லுங்க' என்று ஜாலி செய்கிறார்கள் அக்கம் பக்கத்தினர். வீட்டுப் பக்கத்தில் உள்ள குழந்தைகள் என்னைக் காணும்போதெல்லாம், `கோ கொரோனா கோ' என்று பாடுகிறார்கள். அவங்க களியாக்கும்ப (கேலிபண்ண) நானும் சிரித்துக்கொண்டே போயிடுவேன்" என்றார்.

குடும்பத்தினருடன் கொரோனா
குடும்பத்தினருடன் கொரோனா

கொரோனா வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், திடீரென அவர் பெயர் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது எப்படி என்பது குறித்துக் கேட்டோம்.

``என் கணவரின் நண்பர் ஒருவர் யூடியூப் சேனல் நடத்துகிறார். செப்டர்ம்பர் 1-ம் தேதி எங்கள் வீட்டுக்கு வந்த அவர், நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு, `உங்க பெயர் கொரோனாவா?' என்று ஆச்சர்யமானார். உடனே என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டு, வீடியோ எடுத்தார். இரண்டு, மூன்று நாள்களில் அதை யூடியூபில் போட்டார். அதைப் பார்த்துவிட்டுத்தான் பத்திரிகைகளிலிருந்து பேசினார்கள். இப்போது ரேடியோ, சேனலிலிருந்து எல்லாம் வந்து பேட்டி எடுக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். என் பெயரை மலையாளத்தில் எழுதும்போது `கொரோனா' என்ற ஒலியிலோ, எழுத்திலோ எந்த வேறுபாடும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்து `K' ஆக இருக்கும். அதாவது, `Korona'. வங்கி, மருத்துவமனை என நான் வெளியிடங்களில் விண்ணப்பங்களில், ஃபைல்களில் என் பெயரை எழுதும்போது, `Corona' என்று அவர்கள் எழுதுவதை நான் `Korona' என்று மாற்றிக்கொடுப்பேன். இது கொரோனா வைரஸுக்கு முந்தைய கதை.

கொரோனா லாக்டௌனால் இப்போது நான் வீட்டைவிட்டு எங்கேயும் போகவில்லை. இனி கொரோனா முடிந்து நான் வெளியே போகும்போது, என் பெயரை விண்ணங்கள், ரெஜிஸ்டர்களில் எழுதும்போது, எல்லோரும் ஆர்வமாகி நிச்சயம் என் பெயர் கதையை கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அதனால் சந்தோஷம்தான்!"

ஜாலியாகச் சிரிக்கிறார் கொரோனா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு