தென்மேற்குப் பருவ மழையால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்து வருகின்றன. வயநாடு, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தற்போது மழை சற்று தணிந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த நேரத்தில் கேரளாவின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷ்யாம் குமார் என்ற இளைஞர்.

திருவனந்தபுரம் மாவட்டம், பேயட் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாம் குமார் என்ற இளைஞர். இவர் தன் பகுதியில் உள்ள `பசுமை ஆர்மி' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவைகளைச் செய்து வருகிறார். உளவியல் முதலாம் ஆண்டு படித்துவரும் ஷ்யாம் மற்ற இளைஞர்களைப்போல இயல்பானவர் கிடையாது. இவருக்குப் பிறந்ததிலிருந்து சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்துள்ளது. அதற்காக இதுவரை 14 அறுவை சிகிச்சைளைச் செய்துள்ளார். அப்படியிருந்தும் கேரள வெள்ளத்தில் பம்பரமாய் சுற்றி வேலை செய்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவனந்தபுரத்தில் உள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கேரள அமைச்சர் தாமஸ் ஐசக், ஷ்யாமைப் பார்த்திருக்கிறார். இவரால்தான் ஷ்யாம் தற்போது வெளி உலகின் கவனத்துக்குத் தெரியவந்திருக்கிறார். ஷ்யாமுக்கு சிறுவயதிலேயே கால் சற்று மடங்கி உடைந்து இருந்துள்ளது. அதற்காக 10 வயதில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுகளைப் பொருத்தியுள்ளனர்.

இவருக்கு மூன்று கிட்னிகள் உள்ளன. இரண்டு கிட்னிகள் வலது புறத்தில், ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன. இதனால் மொத்த கிட்னியின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சைக்கிள், கால்பந்து எனச் சுற்றிவந்த அவரால் தற்போது நடப்பதே சற்று சிரமமாக உள்ளது. தற்போது 20 வயதாகும் ஷ்யாமுக்கு 3 வயது சிறுவனுக்கு இருக்கும் அளவே சிறுநீர்ப் பை உள்ளது. அதனால் விரைவில் சிறுநீர் பை நிறைந்து வெளியேறிவிடும். இதற்காக தன்னுடன் ஒரு செயற்கை சிறுநீர்ப் பையை வைத்துக்கொண்டே வலம் வருகிறார் ஷ்யாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது அவரது கிட்னி 23 சதவிகிதம் மட்டுமே வேலை செய்கிறது. அது 20 சதவிகிதமாகக் குறைந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யவேண்டியிருக்கிறது. ஒரு நாளுக்கு 30 மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அவரால் உயிர் வாழ முடியும். ஷ்யாமால் எந்தக் கடினமான வேலையையும் செய்ய முடியாது. திருவனந்தபுரம் பொருள்கள் சேகரிப்பு மையத்தில், பொருள்களைக் கட்டுவது, அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அங்கேயே இருந்துவருகிறார் ஷ்யாம். நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்கு தன் வீட்டுக்குச் செல்கிறார். அதுவும் தன் சிறுநீர்ப் பையைச் சுத்தம் செய்யச் சென்றுவிட்டு காலை 10 மணிக்கு மீண்டும் மையத்துக்கு வந்துவிடுகிறார். `இவரைப் போன்ற இளைஞர்தான் கேரளாவுக்குத் தேவை' என ஷ்யாம் பற்றி பெருமையாகப் பேசி ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார் அமைச்சர் தாமஸ்.