தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆற்று மணல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் விளைநிலங்கள், நீர் நிலைகளில் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிருந்து கனிமங்களையும் உணவுப் பொருள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது இந்தக் கழிவுகளைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதற்காக சோதனைச் சாவடிகளில் பெருமளவு பணம் கைமாறப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனைச் சாவடியைக் கடந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவில், மனித உடலின் பாகங்கள் உள்ளிட்டவை இருந்ததாகத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அவற்றைத் திருப்பி அனுப்பாமல் இங்கேயே புதைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாக வேதனையோடு குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நாரணாபுரம் கிராமத்துக்குள் நவம்பர் 8-ம் தேதி கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகளை அங்குள்ள ஐயப்பன் என்பவரின் தோட்டத்தில் கொட்டியுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை எனப் பல்வேறு அலுவலகங்களிலும் முறையிட்டார். ஆனாலும் எதுவும் நடக்காததால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். அதன் பின்னர், வந்த காவல்துறை அதிகாரிகள், `இந்தக் கழிவுகளை அகற்ற வேண்டியது சுற்றுச்சூழல் துறையினர்’ எனக் கூறினார்கள். அதனால் அந்தத் துறை அதிகாரிகளைச் சந்தித்து ஐயப்பன் முறையிட்டுள்ளார். அவர்களோ, `கேரளாவின் கழிவுகளை உள்ளே அனுமதித்த காவல்துறையினரே இதை எடுத்து திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துவிட்டனர்.

கழிவுகள் கொட்டப்பட்ட விவசாய நிலத்துக்கு அருகில் நீர்நிலை இருப்பதால் மழை பெய்தால் அனைத்துக் கழிவுகளும் நீருடன் கலக்கும் ஆபத்து இருந்தது. அதனால் சுற்றுப்புற விவசாயிகளும் அச்சத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், நவம்பர் 24-ம் தேதி மறுபடியும் அதே நிலத்தில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. அதனால் அதிருப்தியடைந்த நிலத்தின் உரிமையாளரான ஐயப்பன் மறுபடியும் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கழிவுகளை எரிக்க அனுமதிக்காமல், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதை உணர்ந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், கேரள மாநிலத்தில் இருந்து கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டியதாகக் கொல்லம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளரான அசீம் (23) அவருக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற வெள்ளத்துரை (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக விளை நிலங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியது, காவல்துறையினரை அசிங்கமாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவிக்கையில், ``தமிழக கேரள எல்லையில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை கழிவுகளைக் கொட்டியதற்காக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றிவந்த 38 வாகனங்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 1,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட கழிவுகளை கேரளாவில் இருந்து கொண்டுவருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சோதனைச் சாவடிகளில் நேர்மையான காவலர்களை நியமித்தால் மட்டுமே இந்தப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்க முடியும் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள். கேரளாவின் குப்பைத் தொட்டியாகத் தமிழக விளைநிலங்களும் நீர்நிலைகளும் மாறுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.