வலதுபக்க கழுத்தில் டயாலிசிஸ் செய்வ தற்கான உபகரணங்களுடன் சோர்ந்துபோய் அம்மாவின் மீது சாய்ந்துகொண்டிருந்த நிலையில்தான் சென்னைவாழ் சிறுவன் சங்கரலிங்கத்தை முதன்முறையாகப் பார்த் தோம். மற்ற குழந்தைகளைப்போல ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த சங்கரலிங்கத்தின் முகமும், வயிறும், கால்களும் திடீரென வீங்க ஆரம்பிக்கவே, அம்மா சுதா அலறித்துடித்த படி மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
‘இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. உடனடியாக டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதையும் கழுத்தில்தான் செய்ய வேண்டும்’ என்று மருத்துவர்கள் தெரிவிக்க, ‘11 வயது மகனுக்கு டயாலிசிஸா’ என உடைந்துபோயிருக்கிறார் சுதா.
சுதாவுக்கு நான்கு பிள்ளைகள். குடிக்கு அடிமையான கணவர் அதிலிருந்து மீளாமலே மாண்டுவிட்டதால், வீட்டுவேலை பார்த்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். முதலிரண்டு பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க, ஒரு மகள் அம்மாவுக்கு உதவியாக வீட்டிலிருக்கிறார். சங்கரலிங்கம் நான்காவது மகன்.
‘`பெரியவங்களாலேயே டயாலிசிஸ் வலியைத் தாங்க முடியாது. இவன் சின்னப் புள்ள. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கிட்னியை மாத்திடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. என்னோட கிட்னி என் புள்ளைக்கு சேராதுன்னு செக் பண்ணி சொல்லிட்டாங்க. எங்கம்மாவோடது சேருது. ஆனா, அவங்க உடம்புல சர்க்கரை அதிகமா இருக்கிறதால ஆபரேஷன் செய்ய முடியாதாம். புள்ள உடம்புல ரத்தமே இல்ல. மருந்து ஏத்தணும்னு டாக்டருங்க சொன்னாங்க. ஒரு ஊசி 800 ரூபாய். வாரத்துக்கு நாலு ஊசி போட வேண்டியிருக்கு. மருந்து, மாத்திரைக்கும் பணம் தேவைப்படுது. பக்கத்துலேயே இருந்து புள்ளைய பார்க்க வேண்டியிருக்கிறதால என்னால வீட்டு வேலைங்களுக்குப் போக முடியலை. எங்கம்மாதான் வீட்டு வேலைக்குப் போய் அந்தக் காசையெல்லாம் என் புள்ளை யோட மருந்து, மாத்திரைக்கு செலவு பண்ணிட்டிருக்கு. தவிர, என் தங்கச்சி, தெரிஞ்சவங்க இப்படி ஒருசிலர் பணம் கொடுத்து உதவறாங்க’’ என்று அழுதவரைத் தேற்றி, அவரையும் சிறுவன் சங்கரலிங்கத்தை யும் அழைத்துக்கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தோம்.
சிறுவனுக்கும் அவன் அம்மாவுக்கும் தைரியமூட்டியவர், சிறுவனின் கழுத்தில் செய்யப்பட்டு வருகிற டயாலிசிஸை அவன் கையில் செய்வதற்கான சிகிச்சையை மேற் கொள்ளும்படி உத்தரவிட்டார். தவிர, சிறுவனுக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கும்வரை அவனுக்குத் தேவைப்படும் அத்தனை மருத்துவ உதவிகளும் இலவசமாகச் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தவர், சிறு தொகையையும் சிறுவன் குடும்பத்துக்கு வழங்கினார். இதையடுத்து மா.சுப்ரமணியத் தின் உதவியாளர், சிறுவன் சங்கரலிங்கத்தையும் அவன் தாயார் சுதாவையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தற்போது, சிறுவன் சங்கரலிங்கமும் அவன் அம்மா சுதாவும் எப்படியிருக்கிறார்கள்?
‘`கையில டயாலிசிஸ் பண்றதுக்காக ஆபரேஷன் பண்ணியிருக்காங்க ஆன்ட்டி. கையில இருக்கிற புண்ணு ஆறுனதும் கழுத்துல இருக்கிற மெஷினை கைக்கு மாத்தறதா சொல்லியிருக்காங்க’’ என்கிறான் சங்கரலிங்கம்.
அம்மா சுதாவோ, ‘`புள்ளைய ஆஸ்பத்திரிக் குக் கூட்டிட்டுப் போகாத நாளுல கட்டட வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். என் புள்ளைக்கு சீக்கிரமா வேற கிட்னி கிடைக் கணும். அதுக்கு கடவுளையும் கவர்ன் மென்டையும்தான் நம்பியிருக்கேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
சீக்கிரமே நல்லது நடக்கும்!
இதன் முழு வடிவத்தை இந்த https://bit.ly/3Ddg1L3 லிங்க்கில் காணலாம்.