Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்

ஈரோடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு

சென்னை, மதுரை, நெல்லை,கோவை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து, ` ஈரோடு 200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், ஈரோடு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்

சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற, உங்கள் பணி தொடரட்டும்’ என்றனர். அந்த வாழ்த்தும் வரவேற்பும் கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

சென்னை, மதுரை, நெல்லை,கோவை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து, ` ஈரோடு 200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

அன்பு ஈரோடு சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

1. ஈரோடு என்ற பெயர் வந்தது எப்படி?

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால், `ஈரோடை' என்று அழைத்தனர். காலப்போக்கில், `ஈரோடு' என்று அழைத்தனர். 1996ஆம் வருடம் வரை, `பெரியார் மாவட்டம்' என்றே அழைக்கப்பட்டது. பின்பு, `ஈரோடு மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

2. எங்கே அமைந்துள்ளது ஈரோடு

சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில், 400 கி.மீ தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும் அமைந்துள்ளது ஈரோடு.

3. ஈரோடு வரலாறு

முன்பு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஈரோடு இருந்தது. அன்னியர்கள் இப்பகுதியை தாக்கியதால், 400 வீடுகளும் 3000 மக்களுமே இருந்தனர். பின்பு, வளர்ச்சி அடைந்தது. 24.09.1979 அன்று, மாநில நிர்வாக சீர்த்திருத்தக் குழுவின் பரிந்துரைப்படி, ஈரோட்டை தனி மாவட்டமாக அறிவித்தனர்.

4. கொங்கு மண்டலம்

பழங்கால கொங்கு மண்டபத்தில், மேல் கொங்கு மண்டலமாக ஈரோடு விளங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் நிலமானது செம்மண், செம்மண்ணுடன் கலந்த சரளை மண், சிவப்புக்களிமண், கரிசல்மண்கொண்டதாக அமைந்துள்ளது.

5. எல்லை

வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி அமைந்துள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்

6. ஆட்சியாளர்கள்

சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்புசுல்தான் போன்றோர் இப்பகுதியை ஆட்சிசெய்தனர்.

7. தொல்லியல் ஆதாரம்

தற்போதுள்ள தாராபுரத்தில் ரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரோம பேரரசுக்கும் ஈரோடு வணிகர்களுக்கும் இடையே வணிகம் நடந்திருக்க வேண்டும்.

8. கொடுமணல் நாகரிகம்

சென்னிமலைக்கு அருகே உள்ள `கொடுமணல் நாகரிகம்', 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சென்னிமலையிலிருந்து மேற்கே சுமார் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள `கொடுமணம்' என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றி பதிற்றுப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

9. இசை கல்வெட்டு

அரசனூர் அருகே உள்ள தலவு மலை என்ற சிறுமலையில், கி.மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ள இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன.

10. அகழாய்வு சாட்சிகள்

ஈரோட்டின் சில பகுதிகளில் அகழாய்வு செய்தபோது, இரும்பாலான ஈட்டி முனைகள், வாள்கள், தாழிகள், ரோம அரசுடன் வாணிகம் செய்ததற்கான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

11. கணக்கம்பாளையம் கல்வெட்டு

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள பகவதியம்மன் கோவிலில் இந்த கல்வெட்டு உள்ளது. `ஸ்வஸ்திஶ்ரீ' எனக் கல்வெட்டு தொடங்குகிறது.

12. நம்பியூர் கோபி நினைவுக்கல்...

கோபி-அவிநாசி சாலையில், நம்பியூருக்கும் சேவூருக்கும் இடையில் அமைந்துள்ளது. வேணுகோபாலசாமி கோயில். இந்தக் கோயிலின் முன் மண்டபத்தில், வடக்கு நோக்கிய நிலையில் ஒரு நினைவுக்கல் சிற்பம் இருக்கிறது. இந்த நினைவுக்கல் சிற்பத்தில், பழங்காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

13. திப்பு சுல்தான் பயன்படுத்திய ரகசிய வழி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில், வரலாற்று ஆவணமாக கெஜவெட்டி கணவாயில் அமைந்த பாலம், பல நூற்றாண்டுகள் பழைமையானது. ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னர், திப்புசுல்தான் மாயாற்றைக் கடக்க கெஜவெட்டி கணவாய் பாலத்தைப் பயன்படுத்தி, கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு குதிரையில் பயணம் மேற்கொண்டார் என்று செவி வழிச்செய்திகள் உணர்த்துகின்றன.

14. உங்களுக்குத் தெரியுமா?

ஈரோடு மாவட்டத்தின் பரப்பளவு 5722 சதுர கி.மீ., ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 10 வட்டங்கள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 42 பேரூராட்சிகள், 225 ஊராட்சிகள், 375 வருவாய் கிராமங்கள் உள்ளன.

15. வாகனப் பதிவு

டி.என் 33 - ஈரோடு கிழக்கு, டி.என். 36 - கோபிசெட்டிபாளையம் டி.என். 56 - பெருந்துறை, டி.என் - 86 ஈரோடு மேற்கு.

16. மக்கள்தொகை

ஈரோடு மாவட்டத்தின் மக்கள்தொகை 2,251,744 பேர் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). 51 சதவிகிதம் ஆண்கள், 49 சதவிகிதம் பெண்கள். சராசரி கல்வியறிவு 76.97 சதவிகிதம். தமிழக அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களுள், ஓர் இடம் ஈரோட்டுக்கு என்று சொல்லலாம்.

17. தொலைபேசி குறியீடு

மொபைல் பயன்பாடு அதிகரித்தாலும், இன்னமும் அரசு அலுவலகங்களில் தொலைபேசி இணைப்பே முக்கிய தகவல் சாதனமாக உள்ளன. தொலைபேசி குறியீடுகள் தெரிந்துகொள்வது அவசியம்.

0424 - ஈரோடு, 04295 - சத்தியமங்கலம்,

04256 - பவானி, 04294 - பெருந்துறை,

04285 - கோபிச்செட்டிப்பாளையம்.

ஈரோடு-ஏரியல் வியூ
ஈரோடு-ஏரியல் வியூ

18. மஞ்சள் மாநகரம்

`மஞ்சள் மாநகரம்' என்று பெருமையாக அழைக்கப்படும் நகரம் ஈரோடு மாநகரம். இங்குதான், தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

19. எல்லாமே வந்தாச்சு ஈரோட்டில்!

சென்னையைப் போல நாட்டின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள், அழகு நிலையங்கள் ஆகியன அனைத்தும் ஈரோட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

20. தமிழகத்தின் நுரையீரல்

ஈரோட்டின் வளங்களைக்கொண்டு 'தமிழகத்தின் நுரையீரல்' என ஈரோடு பெருமையுடன் அழைக்கப்படுகிறது. நிலபரப்பில் மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நகரம் மற்றும் தென் இந்தியாவில் மத்தியில் அமைந்துள்ளது ஈரோடு.

21. காவிரி ஆறு

காவிரி இயற்கையாக உருவாகிய நதியே ஆயினும், சிவூகச் சோழன் எனும் பேரரசரல் குடகுமலை குடையப்பட்டு, தமிழ்நாடு வழியாகச் செல்லும்படி திசைமாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உருவாகி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தின் வழியாக ஈரோடு மாவட்டத்தில் பாய்ந்து, சில குறிப்பிட்ட பகுதிகளை வளப்படுத்தி, கரூர் வழியாக திருச்சி மாவட்டத்துக்கு செல்கிறது காவிரி. ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் காவேரி நதியில் உள்நாட்டு படகு சேவைகள் உள்ளன.

22. பவானி ஆறு

காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று பவானி ஆறு. இது, சங்க நூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது.

23. அணைக்கட்டுகள்

பவானிசாகர், கொடிவேரி, குண்டேரிப்பள்ளம் அணை, வறட்டுப்பள்ளம், ஓரத்துபள்ளம், காளியங்கராயன் அணை, பெரும்பள்ளம் அணை ஆகியவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளாகும்.

24. பவானிசாகர் அணையின் உள்ளே?

சத்தியமங்கலத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பவானி சாகர் அணை. சுமார் 7 கி.மீ மண்ணால் இந்த அணையைக் கட்டி சாதனை செய்துள்ளனர். இதன் உயரம் 105 அடிகள். காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் உள்ளே `டணாய்க்கன் கோட்டை' நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைகாலங்களில் அணையில் நீர் வற்றும்போது, அந்தக் கோட்டை கண்களுக்குப் புலப்படும்.

25. கொடிவேரி அணை

ஈரோட்டிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், கோபிசெட்டிபாளையத்திலிருந்து 12கி.மீ தொலைவிலும் உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை, நீர்த்தேக்கம் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. சுற்றுலாத்துறை, விளையாட்டுக் கருவிகள், படகு இல்லம் ஆகியவை அமைந்துள்ளன.

26. குண்டேரிப்பள்ளம் மண் அணை

கொங்கர்பாளையம் என்ற ஊரின் வடக்கே, படுக்கைக்காட்டில் கட்டப்பட்டுள்ள மண் அணை, சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து வந்து மீன்கள் வாங்கிச் செல்கிறவர்களும், மீன் கிடைக்காத ஏக்கத்தால் சோகத்தோடு பெருமூச்சு விடுபவர்களும் உண்டு. இந்த இடத்துக்கு, கோபியிலிருந்து 12ஆம் எண் நகரப் பேருந்து சென்றுவருகிறது. இங்கே, ஊர்மக்கள் சேர்ந்து மழை வேண்டி `வனபூசை' செய்வது குறிப்பிடத்தக்கது.

பவானி சாகர் அணை
பவானி சாகர் அணை

27. தென்னிந்திய திருவேணி

`தென்னிந்திய திருவேணி' என அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் கோயில்; பவானி, காவிரி மற்றும் அமுத நதி சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. ஈரோட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. தேவாரத்தில், இவ்வூரை திருநணா என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறியலாம்.

28. பெரும்பள்ளம் அணை

பெரும்பள்ளம் அணை, தூக்கநாயக்கன் பாளையத்திலிருந்து கடம்பூர் செல்லும் சாலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே எழிலுடன் அமைந்துள்ளது.

29. வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை 1980 ஜனவரி 28ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. வரட்டுப்பள்ளம் அணை, மேற்குத் தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்துவரும் மழைநீரை தேக்கிவைத்து, அந்தியூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையைப் பூர்த்திசெய்ய அமைக்கப்பட்டது.

30. ஒரத்துபாளையம் அணை

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஒரத்துபாளையம் அணை உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பெய்யும் மழை நீர், இந்த அணைக்கு வந்துசேருகிறது.

31. காளிங்கராயன் அணை

இது, காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பவானி ஆறும் காவிரி ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.

32. கனிராவுத்தர் குளம்

ஈரோட்டில், அக்ரஹாரம் மற்றும் பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம் போன்ற நகராட்சிப் பகுதிகளின் நீர் தேவைகளுக்குப் பேருதவி புரிந்துகொண்டிருந்தது, கனிராவுத்தர் குளம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு இருந்தே இந்தக் குளம் இருக்கிறது.

33. ஃபாரஸ்ட் ஏரியா

வனப்பகுதி அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 27.7 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது.

34. ட்ரெக்கிங் பிரியர்களின் சொர்க்க பூமி

சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி, `தெங்கு மரஹாடா' என்னும் அழகிய பகுதி உள்ளது. இது, நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வழியாகத்தான் செல்லமுடியும். பேருந்திலிருந்து இறங்கி, பரிசலில் அடுத்த கரையை அடைய வேண்டும்.

35. காட்டில் உள்ள விலங்குகள்

யானைகள், புலிகள், சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டு எருமை, முதலைகள், காட்டுக் கழுகு, புள்ளிமான், குரங்குகள், மைனாக்கள் மற்றும் பல வகையான பறவைகளைக் காணலாம்.

கொடுவேரி அணை
கொடுவேரி அணை

36. சந்தனக் காட்டுச் சிங்கம்

சத்தியமங்கலம் சுற்றுப்புற மலைகளில் சந்தனமரம் அதிகமாக இருந்தன. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த வரை, `வீரப்பன் காடு' என்றே அழைக்கப்பட்டது.

37. `கருப்பன் வந்தான் சாப்பிட்டுட்டு போயிட்டான்'

கடம்பூர்மலை என்பது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ளது. இம்மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இங்கே பயிரிடப்படும் பயிர்களையும், வாழும் இடங்களையும் யானைகள் சேதப்படுத்தும். இதற்காக அவர்கள் ஒப்பாரி வைப்பதும் இல்லை, இழப்பீடு கேட்பதும் இல்லை.

38. சந்தன மரக் கிடங்கு

ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில், சந்தன மரக்கிடங்கு அமைந்துள்ளது. இக்கிடங்கில், பேரிடர் காலத்தில் கீழே விழுந்த மரங்கள், பொதுமக்களால் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு, அரசு மூலம் அரசாணைகள் வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.

39. வனவிலங்கு சரணாலயம் & புலிகள் காப்பகம்

15.3.2013 முதல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `வண்ணப்பூரணி சூழல் சுற்றுலா' என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன்மூலம் புக் செய்பவர்களை, வனத்துறைக்குச் சொந்தமான வேனில் காட்டுக்குள் அழைத்துச்சென்று, காடுகளையும் அதில் வாழும் வன விலங்குகளையும் காண்பிப்பதற்காக அத்திட்டம் தொடங்கப்பட்டது. http://str-tn.org வாயிலாக முன்பதிவுசெய்யலாம்.

40. ஈரோடு வனத்துறை சாதனை

ஈரோடு மாவட்டத்தில் வனத்தை நம்பி வாழும் மக்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவியில், 22 கிராமங்களில் 100 சதவிகித வசூல் செய்து, மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடத்தை பிடித்தது.

41. யானைகளுக்கு ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டில் முதன்முறையாக, யானைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனத்துறை ஏற்பாடுசெய்துள்ளது.

42. பஞ்சகிரி

பஞ்சகிரி என்பது ஈரோடு மாவட்டத்திலுள்ள ஐந்து மலைகளைக் குறிக்கும். சங்ககிரி, நாககிரி, மங்களகிரி, வேதகிரி, பதுமகிரி ஆகிய ஐந்து மலைகளும் `பஞ்சகிரி' என அழைக்கப்படுகிறது.

43. வேதகிரி மலை

பஞ்சகிரியில் முதன்மையானதும் தலையானதும் வேதகிரி மலை ஆகும். இந்த மலை, பவானியிலிருந்து வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டையில் உள்ளது.

44. மங்களகிரி

`பெருமாள் மலை' என்று அழைக்கப்படும் இந்த மலையே, மங்களகிரி மலை ஆகும். இந்த மலையில் மங்களகிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஈரோடு நகரின் வடக்குப் புறத்தில் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது.

45. சங்ககிரி

இந்த மலையைப் பார்ப்பதற்கு சங்கு போல இருக்கும். எனவே, சங்ககிரி எனப் பெயர் வந்தது. சங்க+கிரி = சங்ககிரி.

46. நாககிரி

நாகதேவருக்கு பிரத்தியேகமான சந்நிதானம் அமைந்திருப்பதால், நாகத்தின் பெயரை உள்ளடக்கிய வகையில், நாககிரி மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை ஈரோட்டிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

47. பதுமகிரி

பவானி கூடுதுறையில், காயத்ரி மடுவுக்கு அருகே உள்ள மலை ஆகும். இம்மலை, பவானி அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

48. குறைந்தப்பட்ச மழையும் அதிகபட்ச வளங்களும்

பொதுவாக, ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டுள்ளது. அதிகபட்ச மழையானது, கோபிச்செட்டிபாளையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

49. பாளையம் என்று முடியும் ஊர்கள்

தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு ஊர்கள், பாளையம் என்று முடியும் பெயர் உடையவை என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இம்மாவட்டத்தின் 4,193 ஊர்களில், 1,717 ஊர்களுக்குப் பாளையம் என்றிருக்கும்.

50. ஈரோடு வட்டம்

இந்த வட்டத்தின் தலைமையகமாக ஈரோடு மாநகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ், ஈரோடு மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு என மூன்று உள்வட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் உள்ளன. இதிலுள்ள பெரும்பாலான பகுதிகள், தற்போதைய ஈரோடு மாநகராட்சி எல்லையின் கீழ் வருகின்றன.

51. அந்தியூர் வட்டம்

அந்தியூர் வட்டத்தின் கீழ் அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி என நான்கு உள்வட்டங்களும், 34 வருவாய் கிராமங்களும் உள்ளன. 2012 நவம்பர் 22ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் பிரிக்கப்பட்டு அந்தியூர் வட்டமாக அறிவிக்கப்பட்டது.

52. கொடுமுடி வட்டம்

கொடுமுடி வட்டம், 8 மார்ச் 2018 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. இவ்வட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்பைக்கொண்டது. கொடுமுடி, கிளாம்பாடி, சிவகிரி என மூன்று குறுவட்டங்களுடன் 36 வருவாய் கிராமங்களுடன் இருக்கிறது.

53. கோபிசெட்டிபாளையம் வட்டம்

இந்த வட்டத்தின் தலைமையகமாக கோபிசெட்டிபாளையம் நகரம் உள்ளது. கோபிசெட்டிபாளையம், காசிபாளையம், சிறுவலூர், வாணிப்புத்தூர் என நான்கு உள்வட்டங்களையும் 60 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

54. சத்தியமங்கலம் வட்டம்

இந்த வட்டத்தின் தலைமையமாக சத்தியமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, அரசூர், குத்தியாலத்தூர் என 5 உள்வட்டங்களும், 55 வருவாய் கிராமங்களும் உள்ளன.

55. தாளவாடி வட்டம்

இந்த வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் வட்டத்திலிருந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்பைக்கொண்டு தாளவாடி வட்டம், 8 நவம்பர் 2016-ல் புதிதாக உருவாக்கப்பட்டது.

ஈரோடு ஜங்ஷன்
ஈரோடு ஜங்ஷன்

56. நம்பியூர் வட்டம்

நம்பியூர் வட்டம், நம்பியூர், எலத்தூர் மற்றும் வேமாண்டம்பாளையம் என மூன்று குறுவட்டங்களையும், 33 வருவாய் கிராமங்களையும் கொண்டது. நம்பியூர் வட்டத்தில் உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நம்பியூரில் இயங்குகிறது.

57. பவானி வட்டம்

இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, பவானி, வேந்தப்பாடி என மூன்று உள்வட்டங்களும் 38 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த வட்டத்தின் தலைமையகமாக பவானி நகரம் உள்ளது.

58. பெருந்துறை வட்டம்

பெருந்துறை வட்டத்தின் கீழ், பெருந்துறை காஞ்சிக்கோவில், சென்னிமலை, திங்களூர், வெள்ளோடு என ஐந்து உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன.

59. மொடக்குறிச்சி வட்டம்

இவ்வட்டம் 8 மார்ச் 2016 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்த இவ்வட்டத்தின் வட்டாச்சியர் அலுவலகம் மொடக்குறிச்சியில் உள்ளது. மூன்று குறு வட்டங்களையும் 50 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது இந்த வட்டம்.

60. ஈரோடு மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 17ஆவது தொகுதி. இதில், ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தற்போதைய மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி.

61. ஈரோடு கிழக்கு

2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின்போது, புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. பிராமண பெரிய அக்ரஹாரம், ஈரோடு, வீரப்பன் சத்திரம் இதற்குள் வரும். இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு.

62. ஈரோடு மேற்கு

பெருந்துறை தாலுகாவில் உள்ள பல பகுதிகளும், ஈரோடு தாலுகாவில் உள்ள பல பகுதிகளும் இதில் உள்ளடங்கும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம்.

63. மொடக்குறிச்சி

அவல் பூந்துறை, மொடக்குறிச்சி, சிவகிரி கொடுமுடி போன்ற பேரூராட்சிகளும் பல ஊராட்சிகளும் இதில் அடங்கும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி.

64. பெருந்துறை

ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியில்தான் SIPCOT தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்.டி.வெங்கடாச்சலம்.

65. பவானி

பவானி, ஈரோட்டின் ஒரு தொழில் நகராட்சியாக விளங்குகிறது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பணன்.

தந்தை பெரியார் அரசு மருத்துவமனை
தந்தை பெரியார் அரசு மருத்துவமனை

66. அந்தியூர்

கோபி வட்டத்தில் உள்ள பல பகுதிகளும் அத்தாணி, அந்தியூர் போன்ற பகுதிகளும் இதில் வரும். இதன் சட்டமன்ற உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா.

67. கோபிசெட்டிபாளையம்

கோபி வட்டத்தில் உள்ள பல பகுதிகளும், சத்தி வட்டத்தில் உள்ள சில பகுதிகளும் இதில் வரும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன்.

68. பவானிசாகர்

சத்தி வட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளையும், கோபி வட்டத்தின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன்.

69. ஈரோடு மாவட்ட சந்தைகளும், கூடும் நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வார சந்தைகள் கூடுகின்றன. கிராம மக்கள் பெருமளவில் திரண்டுவந்து பொருள்களை விற்கவும் வாங்கவும் செய்கின்றனர். சில முக்கிய சந்தைகள் கூடும் நாள்கள்: நம்பியூர் - ஞாயிற்றுக்கிழமை, அந்தியூர் - திங்கள்கிழமை, சத்தியமங்கலம் - செவ்வாய்க்கிழமை, சிறுவலூர் - செவ்வாய்க்கிழமை, கவுந்தப்பாடி - புதன்கிழமை, புஞ்சைபுளியம்பட்டி - வியாழன்கிழமை, குருமந்தூர் - வெள்ளிக்கிழமை, மொடச்சூர் - சனிக்கிழமை.

70. வாரசந்தை திருவிழா காணும்

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி சந்தை, ஈரோடு மாவட்ட வார சந்தைகளில் ஸ்பெஷல். சிறுதானியங்கள் முதல் வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது. புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தின் பெயரைச் சொன்னாலே, அப்பகுதி மக்களுக்கு அங்கு நடக்கும் சந்தையின் பெயர்தான் நினைவுக்கு வரும்.

71. செவ்வாய் சந்தை என்றால் ஈரோடில்...

செவ்வாய் என்றால், அது ஈரோடாக இருக்க வேண்டும். ஈரோட்டில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நடைபெறும் சந்தை மிகவும் பிரபலம். இதுதான் தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்களை, இந்தியா முழுவதிலிருந்து வரும் ஜவுளி வியாபாரிகளுடன் இணைக்கும் இடம்.

72. அப்துல்கனி துணி சந்தை

ஈரோடு நகரில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக இச்சந்தையில் துணிகள் விற்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில், 10,000 முதல் 30,000 நபர்கள் வரையிலான மக்கள் இங்கு வந்துசெல்கின்றனர்.

73. ஈரோடு சந்திப்பு

தமிழகத்தின் முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஈரோடு தொடர்வண்டி நிலையமும் ஒன்று. இது, பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே 5 தடங்கள், 4 நடைமேடைகள், 12 இருப்புப் பாதைகள் உள்ளன.

74. சுத்தமான ரயில் நிலையம்

இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான மூன்றாவது ரயில் நிலையம், ஈரோடு ரயில் நிலையம்.

75. இருப்புப்பாதை

ஈரோடு சந்திப்புக்கு அடுத்து முக்கிய ரயில்வே நிலையங்களாக, ஊத்துக்குளி, பெருந்துறை ஊஞ்சலூர், கொடுமுடி, பாசூர், ஈங்கூர் ஆகியவை இருக்கின்றன.

76. ஈரோடு பேருந்து நிலையம்

அனைத்துப் பேருந்துகளும் வந்துசேரும் இடமாக உள்ளது. இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள உள்ள மற்ற இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன.

பவானி ஆறு
பவானி ஆறு

77. மூன்று தேசிய நெடுஞ்சாலைகள்

சேலம் மற்றும் கொச்சி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 544, ஈரோடு நகரையும் இணைக்கிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர், சித்தோடு, நசியனூர் மற்றும் பெருந்துறை போன்ற ஊர்களையும் இணைக்கிறது. NH544, NH44 தேசிய நெடுஞ்சாலையில் தோப்பூரை ஈரோடு, மேட்டூர் மற்றும் பவானி வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 381A இணைக்கும் வெள்ளக்கோவில் மீது தேசிய நெடுஞ்சாலை 81 உடன் இணைகிறது.

78. விமான நிலையம்

ஈரோடு நகருக்கு அருகில் உள்ள விமான நிலையம், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம். ஈரோடு நகரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

79. வட்டச்சாலை

ஈரோடு மாநகரின் வாகன நெரிசலை குறைப்பதற்காக, வட்டச் சாலை இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

80. ஏற்றுமதி

ஜவுளிப் பொருள்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் மற்றும் மஞ்சள் ஆகியவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

81. கைத்தறியில் கலக்கும் ஈரோடு

பெருந்துறை, ஈரோடு, தாராபுரம், பவானி ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் நடக்கிறது. டையிங் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளன. ஜமக்காளம் மற்றும் போர்வைகளுக்குப் புகழ்பெற்றது பவானி. நீர்ப் பிடிப்புப் பகுதியில் விவசாயம் செய்தும், அணைப் பகுதிகளில் மீன் பிடித்தும் வாழ்கின்றனர்.

82. பவானி ஜமக்காளம்

ஜமக்காளம் என்று அழைக்கப்படும் சிறப்பு வகை தரைவிரிப்புகளுக்கு மிகவும் பிரபலமானது. தமிழர் வீட்டு விரிப்புகளில் இது மிகவும் வண்ணமயமானது. பலவிதமான பயன்பாட்டுக்கும் உதவுகிறது.

83. டெக்ஸ் வேலி

`டெக்ஸ் வேலி' (TexValley) என்பது, ஒரு ஒருங்கிணைந்த ஜவுளி ஷாப்பிங் மால். இங்கு அனைத்து வகையான துணிமணிகள் உள்ளன. மொத்தமாக ஒருவர் துணி எடுக்க நினைத்தால், இங்கே எடுக்கலாம். அவ்வளவு விலை குறைவு.

84. சின்ன கோடம்பாக்கம்"

`சின்ன கோடம்பாக்கம்' அல்லது `மினி கோலிவுட்' என்று ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையத்தை அழைப்பர். இங்கு சினிமா படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும். `கோபிசெட்டிபுல்லான்' என்ற பழைய அறிஞர் பெயரால் அழைக்கப்பட்டு, கோபிசெட்டிபாளையம் ஆனது.

85. படப்பிடிப்பு தளம்

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில், 5000-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. கோபியில் எடுத்த முதல் தமிழ்த் திரைப்படம், சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி நடித்த `பாகப்பிரிவினை'.

டிஜிட்டல் நூலக கட்டடம்
டிஜிட்டல் நூலக கட்டடம்

86. கென்யாவின் பிரபல நிறுவனம்

கென்யாவின் பிரபல நிறுவனமான பியர்ல் பிராண்டின் பாசுமதி அரிசி விளம்பரப் படம், ஈரோடு மாவட்டத்தின் கோபி பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குக் காரணம், இங்குள்ள இயற்கைச் சூழலே.

87. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு

ஈரோடு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 35 சதவிகிதம் விவசாய நிலங்கள்தான். நெல், சோளம், எள், புகையிலை, பருத்தி, தென்னை, வாழை, போன்றவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அந்தியூர் தாலுகாவில், வெற்றிலை சாகுபடியும் செய்யப்படுகிறது.

88. பட்டுப்பூச்சிக் கூடு

கோபியில் பட்டுநூல் எடுப்பதற்காக, பட்டுப்பூச்சி கூட்டுப்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக, பட்டுப்பூச்சிகளின் உணவான முசுக்கட்டை மரம் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

89. எண்ணெய் வளம்

எண்ணெய்ச் சந்தையைப் பொறுத்த அளவில், கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்தபடியாக இங்குள்ள காங்கேயம்தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.

90. உணவுப்பொருள் தயாரிப்பு

தமிழகத்தில் உணவுப்பொருள் தயாரிப்பில் ஈரோடு முன்னிலை வகிக்கிறது. ஈரோட்டைத் தொடர்ந்து கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் அதிக அளவில் உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

91. ஊத்துக்குளி வெண்ணெய்

ஊத்துக்குளிக்கு அருகேயுள்ள கிராமத்தில், பல குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு காலத்தில், வீட்டில் மீதமாகும் பாலிலிருந்து தயாரித்த வெண்ணெய், நெய் ஆகியவற்றை வியாபாரிகளிடம் விற்று, சிறுவாடு சேர்ப்பார்கள். இப்போது, வெண்ணை தயாரிப்பது பெரும் தொழிலாகவே ஆகிவிட்டது.

92. சீதா கல்யாண மண்டபம்

கோபியில் புகழ்பெற்ற சீதா கல்யாண மண்டபம் உள்ளது. இங்கு ஒரே சமயத்தில் ஐந்து திருமணங்கள் நடத்தலாம். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, இந்த மண்டபம் அனைத்து விழாக்களுக்கும் இலவசம். இம்மண்டபத்தை 50 வருடங்களுக்கு முன்னர் தங்கமணி கவுண்டர் என்பவர் கட்டினார்.

93. அஞ்சல்துறை

ஈரோடு மாவட்டம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (கோபி மற்றும் ஈரோடு) ஈரோடு, பவானி மற்றும் கோபி ஆகிய இடங்களில் மூன்று தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 319 தபால் நிலையங்கள் உள்ளன.

94. ஈரோடு புத்தக விழா

ஈரோடு புத்தக விழா, ஆண்டுதோறும் ஈரோடு நகரில் நடத்தப்படுகிறது. இந்த விழாவை மக்கள் சிந்தனை பேரவை என்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும். கலாசார விழாவின்போது, பல்வேறு பிரபலங்கள் வந்து பேசுவார்கள்.

95. C.K.S. பயணியர் மாளிகை

இந்த பங்களாவின் கட்டுமானம் 1928ஆம் ஆண்டில் தொடங்கி 1930ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இது 10 ஏக்கரில் பரவியிருந்தது. இப்போது, 3 ஏக்கராக சுருங்கிவிட்டது. கட்டடக்கலை, பண்டைய மற்றும் நவீன வகைகளுடன் இணைத்துக் கட்டப்பட்டது.

காளைமாட்டு சிலை ரவுண்டனா
காளைமாட்டு சிலை ரவுண்டனா

96. தீரன் சின்னமலை மாளிகை

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இதற்கு தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர்.

97. வி.ஓ.சி பார்க்

1912ஆம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது, இந்தப் பூங்கா. இந்த நகரின் குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது உருவாக்கப்பட்டது. இப்பூங்காவுக்குள் 400 ஆண்டுகள் பழைமையான தர்காவும், ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளன.

98. பெரியார் நினைவாலயம்

பெரியாருக்கு 5281 சதுரமீட்டர் பரப்பளவுகொண்ட நினைவாலயம் 17.08.1975ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. பெரியாரின் உருவச்சிலை, வாழ்க்கை வரலாறு, நிழற்படங்கள் முதலியன நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

99. அரசு அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம், 1987ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வ உ சி பூங்கா வளாகத்துக்குள் அமைந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தின் வடக்கில் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தொல்லியல், மானுடவியல், தாவரவியல், கைத்தறியியல், நுண்ணுயிரியல் ஆகிய துறை சார்ந்த பொருள்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

100. தந்தை பெரியார் அரசு மருத்துவமனை

ஈரோடு நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்துக்கும் புகைவண்டி நிலையத்துக்கும் மத்தியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை, 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

101. சத்தியமங்கலம் வனப் பகுதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப் பகுதி, அடர்த்தியான பகுதி. சத்தியமங்கலம் வனப் பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகள் உள்ளன. பல வகை விலங்குகளும் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து திரும்ப செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே மஞ்சள்கொன்றை மரங்கள் பூத்துகுலுங்குவதை காணலாம்.

102. சத்தியமங்கலம்-பசுமை மண்டலம்

இதுதான் தமிழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் பசுமை நுரையீரல் என்பது பலருக்கும் தெரியாது. இந்தப் பசுமை அடைமொழிக்குக் காரணம் 1,450 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் அடர்த்தியான வனப் பகுதியே.

103. கோபி எனும் வீரபாண்டி கிராமம்

கோபி என்று செல்லமாக சுருக்கி அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், முன்னர் ஒரு முக்கிய பகுதியாக வீரபாண்டி கிராமம் என்றழைக்கப்பட்டது.

அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளில் இன்னமும் அந்தப் பெயரையே பயன்படுத்துகின்றனர்.

104. ஹசனூர்

ஹசனூர் என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை பகுதி. இங்கு யானைகள் அதிகம். இந்த மாவட்டதில் உள்ளோர், விடுமுறை நாள்களில் இங்குள்ள விடுதிகளில் தங்கி ஓய்வு எடுத்துசெல்வர்.

105. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

1996ஆம் ஆண்டு, இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. நவம்பர் மாதத்தில் தொடங்கும் பறவைகள் சீஸன், மார்ச் மாதம் வரை நீடித்திருக்கும்.

ரிங்ரோடு-ஈரோடு
ரிங்ரோடு-ஈரோடு

06. தாமரைக்கரை

அந்தியூர் மலை, ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரத்திலிருந்து 60கி.மீ தொலைவில் உள்ளது. அந்தியூரிலிருந்து ஏறத்தாழ ஒரு மணி நேரப் பயணத்தில் தாமரைக்கரை என்ற மலைக்கிராமத்தை அடையலாம். இக்கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தாமரைப்பூக்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்தப் பெயர் வந்தது.

107. நாட்டு மாடுகள் 1000

ஈரோட்டிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது புகழ்பெற்ற ஒரு கோசாலை. இங்குள்ள சாவடிபாளையம் அருகே கோசாலா 2007ஆம் தொடங்கப்பட்டது. 1000-க்கும் அதிகமான நாட்டு மாடுகள்கொண்ட மிகப்பெரிய கோசாலையாக உள்ளது.

108. காளைமாட்டு சிலை ரவுண்டனா

ஈரோட்டில் தமிழர்களின் பண்பாட்டை போற்றும் வகையில், ஒருவர் காளையை அடக்குவது போன்ற சிலை, ஈரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ளது.

109. ஈரோடு கோட்டை

ஈரோட்டில் காணப்படும் ஒரே கோட்டை, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

110. ஸ்மார்ட் சிட்டி

ஈரோடு சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன், இந்திய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் முன்முயற்சிக்கான போட்டி செயல்முறை மூலம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

111. வ.உ.சி. ஸ்டேடியம்

வ.உ.சி. பூங்காவுக்கு அருகிலுள்ள SDAT மாவட்ட விளையாட்டு வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இங்கு விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியன உள்ளன. இது, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ்வருகிறது.

112. சின்னசாமி ஸ்டேடியம்

இந்த ஸ்டேடியம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழைய பாளையம் என்ற இடத்தில் உள்ளது. இது, பேட்மிண்டன் விளையாட்டுக்கு சிறந்த ஆடுகளம்.

113. தியேட்டர்கள்

ஈரோடு மக்களின் பொழுதுபோக்குக்காக, அபிராமி, மகாராஜா, ZEON, ஜெயமாருதி ஆகிய முக்கிய தியேட்டர்கள் உள்ளன.

114. சூரியன் எஃப் எம்

தமிழ்நாட்டின் நம்பர் 1 தனியார் எஃப்.எம். சூரியன் எஃப்.எம். ஈரோட்டில் இது 91.9 அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகிறது.

115. ஈரோடு மாவட்ட கல்லூரிகள்

இரண்டு முக்கிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி. மேலும், சில பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கலைக் கல்லூரியைப் பொறுத்தவரை, கோபி கலைக்கல்லூரியும் ஈரோடு கலைக்கல்லூரியும் சிறந்த கல்வி நிறுவனங்கள். மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில்-பவானி
சங்கமேஸ்வரர் கோயில்-பவானி

116. IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி

ஈரோட்டில் இருக்கும் ஒரே மருத்துவக் கல்லூரி.தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் பார்வையில் இயங்கிவருகிறது. இது ஒரு காசநோய் சானிடோரியமாக இருந்தது. 1986ஆம் ஆண்டில், சானிடோரியத்துடன் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியை இணைத்தது.

117. 10 ரூபாய் இன்ஜினீயரிங் காலேஜ்

பெருந்துறையில் உள்ள ஐஆர்டி பொறியியல் கல்லூரியில் அன்று 10 ரூபாய் கட்டணத்தில் பொறியியல் படித்து பட்டம் பெற்றவர்தான், ஈரோடு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். அவர் வேறு யாருமில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரன்.

118. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியின் முதல் கௌரவத் தலைவர், தந்தை பெரியார். இக்கல்லூரியில், தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, விலங்கியல் துறை என 13-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டுவருகின்றன.

119. கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. இது, பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

120. பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி

இக்கல்லூரி, சத்தியமங்கலத்தில் அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டில், பண்ணாரி அம்மன் குழுமத்தால் நிறுவப்பட்டது. இந்தியாவின் தெற்குப் பகுதி உயர்கல்விக் கோட்டைகளில் ஒன்றாகும். அறிவு, குழுப்பணி, புதுமை, தைரியம், கடமை ஆகியவற்றை அர்த்தமுள்ள வாழ்க்கையின் உரமாக வழங்க BIT உதவுகிறது.

121. கொங்கு இன்ஜினீயரிங் கல்லூரி

1983ஆம் ஆண்டில், அனைத்து தரப்பு மக்களையும் சேர்ந்த ஒரு குழுவினரின் மகத்தான முயற்சிகளின் காரணமாக உருவானது.

122. கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்

13.11.1980 அன்று, ஈரோட்டில் ஒரு கால்நடை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நிறுவப்பட்டது. இது, இப்போது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக உள்ளது. 306, சத்தி சாலை, வீரப்பன் சத்திரத்தில் செயல்படுகிறது.

123. வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்

ஈரோடு மாவட்ட விவசாயிகளின் தேவைகளை உணார்ந்து, வேளாண் ஆராய்ச்சி நிலையம் 1951 ஆகஸ்ட்டில் சத்தியமங்கலத்தில் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சி, விதை உற்பத்தி, டிப்ளோமா கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மாநிலத்தின் முக்கிய மல்டிகிராப் நிலையம் இது.

124. ஈரோடு நூலகத்துறை

ஈரோடு மாவட்ட நூலகத்துறை சார்பில், 80 கிளை நூலகம், 100 கிராம நூலகங்கள் இயங்குகின்றன. தற்போது, ஈரோடு நூலகத்தில் 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். இது, அரசின் இலக்கை விஞ்சிய சாதனை.

125. கருங்கல்பாளையம் வாசகசாலை

ஈரோட்டின் ஒரு பகுதியாகிய கருங்கல்பாளையத்தில் வாசகசாலை உள்ளது. இவ்வாசக சாலையில் தமிழ், ஆங்கிலம் எனப் பல்வேறு நூல்கள் உள்ளன. தினசரி, வார, மாதப் பத்திரிகைகளும் இருக்கின்றன.

கனி மார்க்கெட்
கனி மார்க்கெட்

126. ஈரோடுக்கு எப்போ வரலாம்?

வெப்பநிலை அதிகமாக இல்லாததாலும், பயணிகளுக்கு காலநிலை மிகவும் இனிமையானதாலும், அக்டோபர் முதல் மார்ச் வரை ஈரோடு சுற்றுலாவுக்கு சிறந்த காலம்.

127. கொங்குத் தமிழ்

ஈரோடு மக்களின் கொங்குத் தமிழ் இன்னும் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக வாங்க, போங்க என்று மரியாதையைக் கடைப்பிடிக்கின்றனர்.

128. ஈரோட்டில் பேசப்படும் மொழிகள்

ஈரோட்டில் பேசப்படும் முதன்மை மொழி தமிழ். ஆங்கிலமும் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. குடியேறியவர்களின் எண்ணிக்கை மற்றும் பல காரணங்களால் இந்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பிற மொழிகளும் பேசப்படுகின்றன.

129. கலாசாரம்

ஈரோட்டின் கலாசாரம், தமிழ்நாடு முழுவதும் காணப்படும் தமிழ் கலாசாரத்தைப் போன்றதே. இந்த சமூகத்துக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள், ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படுபவை. ஈரோடு, கிளாசிக்கல் இசை மற்றும் நடனத்துக்கான புகலிடமாகும்.

ஈரோடு பேருந்து நிலையம்
ஈரோடு பேருந்து நிலையம்

130. ஒப்பாரி, தாலாட்டுப் பாடல்கள்

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் இப்பாடல்கள் உயிரோடு இருக்கின்றன. இறப்பின் ஒப்பாரி பாடல், பிறந்த குழந்தையைத் தாலாட்டும் பாடல்களை இன்றும் பாடிவருகின்றனர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள்.

131. ஈரோடு பேருந்து நிலையத்தில்

சூடான வெயில் காலம், மிதமான மழைக் காலம், குளிர் காலம் என எல்லாச் சூழலிலும் ஈரோடு பேருந்து நிலையத்தில் மண் பானை கம்பங்கூழ் விற்பனை அமோக நடைபெறும். பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள கடைகளில் ஐந்து ரூபாய் கரும்புபால் ஃபேமஸ்.

132. பாரம்பர்ய உணவுகள்

ஈரோட்டில் உணவகத்துக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் பாரம்பர்ய உணவகங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. நிலாச் சோறு, சச்சிதாநந்தினி மெஸ் ஆகியவை சில உதாரணங்கள்.

குதிரைச் சந்தை
குதிரைச் சந்தை

133. மாலை வேளையில்

எல்லா ஊர்களைப் போலவே ஈரோட்டிலும் சாலையோர கடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சுடச் சுட கிழங்கு வகை சிப்ஸ், பாணிபூரி, காரப்பொரி போன்றவைக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

134. ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு

ஈரோட்டில் இன்றும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடுகிறார்கள். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏ.எம்.வி. வீட்டுச் சாப்பாடு மெஸ் செயல்பட்டு வருகிறது. ``பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பிட வருவார்கள். இதை நாங்கள் சேவை நோக்கத்துடன் செய்கிறோம்'' என்று அந்தக் கடையின் உரிமையாளர் வெங்கடராமன் சொல்கிறார்.

135. பள்ளி பாளையம் சிக்கன்

ஈரோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் விசைத்தறி கூடங்கள் அதிகமாக உள்ளன. அதைவிட இங்கே சிறப்பு, பள்ளிபாளையம் சிக்கன். ஈரோடு சிறப்பு உணவு, பள்ளி பாளையம் சிக்கன் என்றே கூறலாம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்

136. சோன் பப்டி

சோன் பப்டி என்னும் இனிப்புப் பொருளை ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள மக்கள் குடிசைத் தொழிலாகச் செய்கின்றனர். விழா காலங்களில் இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது.

137. விழாக்கள்

ஈரோடு மாரியம்மன், பண்ணாரி அம்மன், அந்தியூர் அம்மன், பாரியூர் அம்மன் கோயில்களில், ஆண்டுதோறும், குண்டம் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

138. முக்கிய வழிபாட்டுத் தலங்கள்

பாரியூர் கொண்டத்து காளியம்மன், பண்ணாரி மாரியம்மன், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், சென்னிமலை முருகன், கோபி பச்சைமலை, பவளமலை மற்றும் சிவன்மலை கோயில்கள் ஈரோட்டில் புகழ்பெற்றவை.

பெரியார்-அண்ணா நினைவகம்
பெரியார்-அண்ணா நினைவகம்

139. குருநாதசாமி தேர்த்திருவிழா

ஆடிமாதம் நடைபெறும் விழா, குருநாதசாமி தேர்த் திருவிழா. மூன்று கற்களில் தோன்றி, இன்று மிகப்பெரிய தேர்த் திருவிழாவாக மாறிவிட்டது. இப்பகுதியில் மிகவும் சிறப்பு பெற்றது, குதிரைச்சந்தை. இச்சந்தை, திப்புசுல்தான் காலத்திலிருந்தே நடைபெற்றுவருகிறது. இதனுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது. இவ்வாண்டு திருவிழா, ஆகஸ்ட் 7 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும். விழாவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள்.

140. திண்டல் முருகன் கோயில்

திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு, கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி வழிபடுவர்.

141. பண்ணாரி அம்மன் கோயில்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா புகழ்பெற்றது.

142. சி.எஸ்.ஐ. பிரெள நினைவு சர்ச்

இந்த சர்ச், பிரெள சாலையில் அமைந்துள்ளது. தேவாலயம் 1933ஆம் ஆண்டு புனிதப்பட்டு, பல சமூக சேவைகள் செய்துவருகிறது. லண்டன் மிஷனரி சொசைட்டி மூலம் ஈரோடு வந்த ரெவ்.ஆண்டனி வாட்சன் புரோ, இந்தத் தேவாலத்தை கட்டினார்.

143. கொடுமுடி கோயில்

ஈரோட்டிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. கோயில் வளாகத்துக்குள் சிவா, விஷ்ணு, பிரம்மா சன்னதிகள் உள்ளன.

144. சத்தியமங்கலம் தவளகிரி

சத்தியமங்கலம் அருகில் உள்ளது, பிரசித்தி பெற்ற தவளகிரி முருகன் கோயில். விஜயநகர ஆட்சி காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது.

145. பாரியூர் கொண்டத்து காளியம்மன்

முழுவதும் சலவைக் கற்களால் உருவான கோயில் இது. கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ளது. இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில், தம் குடும்பச்சூழலின் ஏற்ற இறக்கத்தில், நல்ல முடிவுகளை எடுக்க பூப்போட்டு பார்க்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

146. தொண்டீஸ்வரர் கோயில்

ஈரோடு நகரத்தில் உள்ளது தொண்டீஸ்வரர் கோயில். இங்குள்ள் மூலவர், திருநாமம் ஈரோடையப்பர். இறைவி, வாரணியம்மை. 12ஆம் நூற்றாண்டில், கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது.

பன்னீர்செல்வம் பூங்கா
பன்னீர்செல்வம் பூங்கா

147. மகிமாலீஸ்வரர் கோயில்

பல்லவர் கால மகிமாலீஸ்வரர் கோயில். இது, நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையை ஒட்டியுள்ளது.

148. கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில்

ஈரோட்டில் கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கோபுரம் இல்லை. திருமால் பள்ளிகொண்ட நிலையில் வடித்துள்ளனர். பெரியார் ஈ.வே.ராவின் தாயார், இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

149. பெருமாள் மலை (ஆலயம்)

பெருமாள் மலை என்பது, பெருமாள் ஆலயம் ஒன்று, சிறு குன்றுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி. மங்களகிரி பெருமாள் கோயில் என்ற பெயரில் உள்ளது. இது, ஈரோடு நகருக்கு வடக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

150. மத்தாளக்கோம்பு - புனித நீர் ஊற்று

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பங்களாப்புதூரை அடுத்து, டி.என்.பாளையம் செல்லும் வழியில், வயல்வெளிகளுக்கு நடுவே மத்தாளக்கோம்பு விநாயகர் கோயில் உள்ளது. பவானி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள கோயில் அருகே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நீருற்று உருவானது.

151. பாலமுருகன் கோயில்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பாலமுருகன் கோயில் மிகவும் சிறப்பு பெற்றது. திருமணத் தடைகளை நீக்கும் ஆலையமாக விளங்குகிறது.

152. குருநாதர் சித்தர் திருக்கோயில்

ஈரோட்டிலிருந்து கொடுமுடி கரூர் செல்லும் வழியில், ஈரோட்டிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது கருமாண்டம்பாளையம். இந்த ஊரின் அருகே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அருள்மிகு குருநாத சித்தர் ஜீவசமாதி இருக்கிறது.

153. மகாத்மா காந்தி கோயில்

மகாத்மா காந்திக்கு கோயில் கட்டப்பட்ட ஊர், ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. 1997ஆம் ஆண்டு, கவுந்தபாடி அருகே உள்ள செந்தம்பாளையம் கிராமத்தில் கோயில் கட்டப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றது.

154. காசியிலிருந்து கோபி வந்த சிவலிங்கம்.

ஶ்ரீ விசாலாட்சி உடனுறை விஸ்வேஷ்வரர் திருக்கோயில், கோபி பஸ் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. காசியில் இருந்த லிங்க வியாபாரி ஒருவர், லிங்கத்தை விற்பதற்காக கோபி வந்தார். இரவு தூங்கிவிட்டு, காலை எழுந்து சிலையை எடுக்க முயன்றபோது, அவரால் தூக்கமுடியவில்லை, அந்த லிங்கம் அங்கேயே நிலைகொண்டது.

155. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் ஸ்தல மூலவர் புகழ்பெற்றது. சுமார் 6 அடி உயரம் உள்ள, உளி படாத சுயம்புத் திருமேனி. பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இந்தக் கோயில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

156. தம்பிகலை அய்யன் கோயில்

ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் பாதையில், தங்கமேடு என்ற இடத்தில் உள்ளது. பாம்பு சென்று மாட்டின் மடியில் பாலை குடித்ததாக வரலாறு கூறுகிறது. கொங்கு தேசத்தின் ராகு - கேது ஸ்தலம். பட்டகாரரை கடவுளாக மக்கள் வழிபடுகிறார்கள்.

சின்னமலை முருகர் கோயில்
சின்னமலை முருகர் கோயில்

157. கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில்

கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி அருகே உள்ளது. இங்கு சடையப்ப சுவாமி மற்றும் 18 சித்தர்கள், மகாமுனி விநாயகர் உள்ளிட்ட விக்ரகங்கள் உள்ளன. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

158. ஊராட்சிக்கோட்டை சொக்கநாச்சியம்மன் கோயில்

ஊராட்சிக்கோட்டை சொக்கநாச்சியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாகும். மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

159. ஷேக் அலாவுதீன் தர்க்கா

ஷேக் அலாவுதீன் தர்க்கா, ஈரோடு காவிரிக்கரையில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் கல்வெட்டும் இங்குள்ளது.

160. மலேசிய முருகன்

மலேசிய முருகன் கோயில் போன்றே ஈரோட்டில் காசிபாளையம் முருகன் கோவியில் இருக்கிறது.

161. கம்பம் விழா

சித்திரை மாதத்தில், ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் கம்பம் திருவிழா நடைபெறும். இவ்விழாவில், இளைஞர்களும் முதியோர்களும் தங்களது ஆட்டத்திறமையை வெளிகொண்டுவருகிறார்கள்.

162. புகழ்பெற்றவர்கள்

கணிதமேதை சீனிவாச இராமானுஜர், கொடிகாத்த குமரன், ஈ.வே.ராமசாமி என்னும் பெரியார், தீரன் சின்னமலை, கோபி லட்சுமண ஐயர் போன்றவர்கள் இப்பகுதியில் பிறந்தவர்கள்.

163. சீனிவாச இராமானுஜன்

கணித மேதை என்று அழைக்கப்பட்ட சீனிவாச இராமானுஜன், ஈரோட்டில் 1887 டிசம்பர் 22ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.

164. தீரன் சின்னமலை

இவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில், 17 ஏப்ரல் 1756-இல் பிறந்தார். பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து போரிட்டவர்களில்

165. திருப்பூர் குமரன்

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தினார்.

166. ஜி.எஸ். லட்சுமணன் ஐயர்

கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தின்போது, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார்.

தடுப்பணை
தடுப்பணை

167. தந்தை பெரியார் ஈவெ ராமசாமி

வசதியான குடும்பத்தில் பிறந்த ஈ.வே.ரா, தனது 26 வயதில் பொது வாழ்வுக்கு வந்தார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாக பணியாற்றினார். கேரளத்தின் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க உரிமை கோரி, தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடத்தி வெற்றிபெற்றார். 'குடி அரசு' வார இதழை நடத்தியவர். பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு எனப் பல்வேறு போராட்டாங்களை முன்னெடுத்தவர்.

168. கே.பி.சுந்தராம்பாள்

கே.பி.சுந்தராம்பாள் எனப்படுபவர், கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். தமிழிசை, நாடகம், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளில் புகழ் ஈட்டியவர் பிறந்தது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில்.

169. ப.சதாசிவம்

தற்போது, கேரள ஆளுநராகப் பணிபுரிந்துவருகிறார் இந்த முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒரே இந்தியர். ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்தவர்.

170. இரண்டு அமைச்சர்கள்

கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கே.சி. கருப்பணனும் ஈரோடு மாவட்டமே.

171. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழக அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

172. பி.கே.கோபால்

சமூக சேவகர் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு, கண்ணியம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான இணை நிறுவனர்.

மஞ்சள் சந்தை
மஞ்சள் சந்தை

173. எஸ்.கே.எம்.மயிலானந்தன்

1945ஆம் ஆண்டு, ஈரோட்டில் பிறந்தார். எஸ்.கே.எம். குழும நிறுவனங்களின் நிறுவனர். சமூக சேவையில் செய்த பங்களிப்புகளுக்காக, இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றவர்.

174. ஈரோடு மகேஷ்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர், பல துறைகளில் கலக்கிவருகிறார். தொகுப்பாளராக ஆவதற்கு முன்னர் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

175. டைமண்ட் ஜூப்ளி பள்ளி

கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ளது. இது, 1898 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான பள்ளி. Amul நிறுவனத்தை தொடங்கி, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட, வர்கீஸ் குரியன் படித்தது இந்தப் பள்ளியில் படித்தார.

176. புலவர் செ.இராசு

வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராக இருந்து, தொல்லியல் துறையில் பணியாற்றினார். கொங்கு நாடு தொடர்பான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும் எழுதியும் உள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றுள்ளார்.

177. ஈரோடு தமிழன்பன்

சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். சென்னைத் தொலைகாட்சியில் செய்திகள் வாசித்துள்ளார்.

காளிங்கராயன் கால்வாய்
காளிங்கராயன் கால்வாய்

178. `சிந்தனைச் சிற்பி' விருது

ஈரோடு எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியனுக்கு, புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் சிந்தனைச் சிற்பி விருது வழங்கப்பட்டது.

179. ஏ.வி.இளங்கோ

ஏ.வி.இளங்கோ, ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் 17 மார்ச் 1950-ல் பிறந்தார். இவர் மிகச்சிறந்த ஓவியர். 2007ஆம் ஆண்டில், சென்னையில் ஆர்ட்ஸ் பேலஸை நிறுவினார்.

180. சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் - சீனா

ஐசக் தேவக்குமார் என்ற ஈரோட்டைச் சேர்ந்த கணித ஆசிரியர், சீன அரசு, பள்ளிக்கூடம் ஒன்றில் சிறப்பாகப் பணிபுரிந்துவருகிறார். அதற்காக, சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

181. 13 வயதில் 8 புத்தகங்கள்

13 வயதில் 8 புத்தகங்களை எழுதியுள்ள, சக்தி ஶ்ரீதேவி, ஈரோட்டில் இருக்கிறார். குழந்தைகளுக்கான படைப்புகள், தத்துவ நாவல்கள், கவிதை தொகுப்பு எழுதியவர்.

182. சோதனைக் குழாய் மூலம் 26 குழந்தைகள்

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்ற 19 பெண்களுக்கு, சோதனை குழாய் மூலம் ஒரே நாளில் 26 குழந்தைகள் பிறந்துள்ளன.

கனிராவுத்தர் குளம்
கனிராவுத்தர் குளம்

183. உயிருடன் இருக்கும்போதே சிலை

உலகிலேயே மகாத்மா காந்தியடிகளுக்கு உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டது ஈரோடு மாவட்டத்தில்தான்.

184. நம்ம கோபி அறக்கட்டளை

`நம்ம கோபி அறக்கட்டளை' என்பது, கோபியில் செயல்பட்டுவரும் ஒரு தொண்டு நிறுவனம். இந்த அறக்கட்டளைக்கு, டாக்டர் அனுப் அவர்கள் தலைமை தாங்கிவருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளையும் இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது.

185. பிரான்ஸில் பறை

ஈரோட்டைச் சேர்ந்த மணிகண்டன், பிரான்ஸ் நாட்டில் வெர்சாய் நகர தமிழ் சங்கத்தின் மூலம், அங்குள்ள மாணவர்களுக்கு பறை இசைக் கலையைக் கற்றுக்கொடுக்கிறார்.

186. பெரியார் கட்டிய தண்ணீர்த் தொட்டி

ஈரோடு நகரமன்றத்தின் தலைவர்களாக இருந்த டி.சீனிவாச முதலியார் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் முயற்சியால், 1919 மே 26-ல் திறப்பு விழா கண்டது ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள அழகிய கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டி.

187. பெரியார் திடல்

பெரியாரை போற்றும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பெரியார் திடல் அமைந்துள்ளது. கோபி வட்டத்தில் இது முக்கியமான இடம். எதிர்ப்பு போராட்டங்கள், விழாக்கள் ஆகியவை இந்த இடத்தில் நடைபெறும். கோபி பேருந்து நிலையத்திலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் உள்ளது.

முருகன் கோயில்-திண்டல்
முருகன் கோயில்-திண்டல்

188. ஈரோட்டில் டெண்டுல்கர்

ஈரோட்டில் உள்ள சிக்கைய நாயக்கர் கல்லூரியில் சச்சின் டெண்டுல்கர் மார்ச் 24, 1996-ல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்த ஒரு நாள் போட்டியை, அரசுப் பள்ளிகளைப் பராமரிக்கும் செலவுக்காக, ஈரோடு அரிமா சங்கம் நடத்தியது.

189. ஈரோட்டுக்காரன்

சாலையில் கிடந்த 50,000 ரூபாயை போலீஸில் ஒப்படைத்தவர், ஈரோடு அரசுப் பள்ளி மாணவன் முகமது யாசின். அவரின் நேர்மையைப் பாராட்டும் வகையில், இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றிய செய்தி படத்துடன் இடம்பெற்றுள்ளது.

190. முதல் அரசு பள்ளி வேன்

தமிழ்நாட்டில், முதன்முறையாக அரசுப் பள்ளிக்கு இலவச வேன் விடப்பட்டது ஈரோட்டில்தான். ஈரோடு, பாசூர் அரசுப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து இரண்டு வேன்கள் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

191. நான்கு நாள்களில் 435 கி.மீ

ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், விக்னேஷ். ஈரோட்டில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். ஈரோட்டிலிருந்து கன்னியாகுமரி வரை நான்கே நாளில் 435 கி.மீ தூரத்தை சைக்கிளில் பயணித்து சாதனை படைத்தார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #12 - ஈரோடு - இன்ஃபோ புக்

192. தலைகீழாக திருக்குறள்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பள்ளியில் படிக்கும் மதுரா மற்றும் மேகவண்ணன் என்ற சுட்டிகள், 1330 குறள்களை தலைகீழாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளனர்.

193. இந்தியாவின் 61-ஆவது கிராண்ட்மாஸ்டர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் 61ஆவது கிராண்ட் மாஸ்டராக சாதனை படைத்த 16 வயது இனியன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

194. M.C.R. வேட்டிகள்

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒரு மில்லியன் நுகர்வோரின் இதயங்களை ஈர்த்த ஒரு நிறுவனம், எம்.சி.ஆர். வேட்டிகள். இந்த வேட்டித் தொழிற்சாலை, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

195. அக்னி ஸ்டீல்ஸ்

'அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம், 19 அக்டோபர் 1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது, மிகவும் பிரபலமான ஸ்டீல் நிறுவனமாக விளங்குகிறது. இதன் தொழிற்சாலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

196. URC கன்ஸ்ட்ரக் ஷன்

ஈரோட்டில் உள்ள ஒரு முன்னணி தேசியத் திட்ட மேலாண்மை மற்றும் கட்டட ஒப்பந்த நிறுவனம். இந்த கன்ஸ்ட்ரக் ஷன் 1956ஆம் ஆண்டு ஈரோட்டில் தொடங்கப்பட்டது.

197. சக்தி மசாலா

இன்று பல வீடுகளில் சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருள்களுக்கு ராணியாக இருக்கும், சக்தி மசாலா என்ற நிறுவனம் 1975ஆம் ஆண்டு ஈரோட்டில் தொடங்கப்பட்டது.

பண்ணாரி அம்மன் கோயில்
பண்ணாரி அம்மன் கோயில்

198. மில்கி மிஸ்ட்

மில்கி மிஸ்ட் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பால் நிறுவனம், 1992ஆம் ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனம் உலகளவில் தனி பெயரை பெற்றுள்ளது.

199. பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை

1986ஆம் ஆண்டில் பண்ணாரி அம்மன் சர்க்கரை நிறுவனத்தைத் தொடங்கியவர், எஸ்.வி.பாலசுப்பிரமணியம். ஈரோட்டு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இந்த ஆலை இயங்கிவருகிறது. 2003ஆம் ஆன்டிலிருந்து 4,000 டன் கரும்பை அரைக்கும் திறன்கொண்ட ஆலையாக மாறியுள்ளது.

200. சக்தி சர்க்கரை ஆலை

இந்தச் சர்க்கரை ஆலை, ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடலில் உள்ளது. 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர், என்.மகாலிங்கம்.

தொகுப்பு : கொ.த.தருண்