பிரீமியம் ஸ்டோரி

ருண் ஜெட்லி தனது 66 வயதிலேயே இயற்கை எய்தியிருக்கிறார். சர்க்கரைநோய் அவரை சீக்கிரமே நம்மிடமிருந்து அழைத்துச் சென்றுவிட்டது. பொருளாதார நிலை நலியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அவர் உயிரோடு இருந்திருந்தால், அதிலிருந்து மீண்டுவருவதற்கான அருமையான வழிகளை நமக்குக் காட்டியிருப்பார்.

அருண் ஜெட்லி எப்படிப்பட்டவர், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு என்ன என இண்டஸ்ட்ரியல் இகானமிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டோம். இவர் 1973-ம் ஆண்டு முதலே மத்திய நிதி அமைச்சர்கள் பலருடனும் நெருங்கிப் பழகியவர்.

அருண் ஜெட்லி... “சகலகலா வல்லவர்!”

சகலகலா வல்லவர்

‘‘குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் சிலர் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிலர் மட்டுமே பல துறைகளில் ஜொலிப்பார்கள். இதில், அருண் இரண்டாம் வகை. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, பாதுகாப்புத் துறை, முதலீட்டைத் திரும்பப்பெறும் துறை, வர்த்தக விவகாரத் துறை, நிதித்துறை என அவர் ஏற்றுக்கொண்ட எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டவர். எனவே, அவரை சகலகலா வல்லவர் என்றே சொல்லலாம்.

அவர் மிகச் சிறந்த வழக்கறிஞரும்கூட. குஜராத்தில் கோத்ரா துயர சம்பவத்துக்குப் பிறகு நரேந்திர மோடிமீது எல்லா மீடியாக்களும் விஷத்தை உமிழ்ந்த நேரத்தில், முதலமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடலாமா என பிரதமர் வாஜ்பாயே யோசித்த காலத்தில், மோடியைத் தீவிரமாக ஆதரித்தவர் அருண். மோடி மீது அருண் காட்டிய ஆதரவுதான் மோடி குற்றமற்றவர் எனத் தீர்மானிக்க உதவியது. மட்டுமல்ல, அமித் ஷா மீது இருந்த வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை பெறவும் அருண்தான் உதவினார்.

ஜி.எஸ்.டி என்னும் மாபெரும் பங்களிப்பு

நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அருண் ஜெட்லி நிறையவே செய்திருக்கிறார். சரக்கு மற்றும் சேவை (GST) வரியை நடைமுறைக்குக் கொண்டுவந்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. ஜி.எஸ்.டி வரிமுறையைக் கொண்டு வரவேண்டும் என்று முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ்தான். அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க அதைக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த வரிமுறையில் இருக்கும் பல நல்ல விஷயங்களைச் சட்டென்று புரிந்துகொண்டு, அதை நடைமுறைப் படுத்த முடிவெடுத்தது பா.ஜ.க. அந்த வேலையை முழுவதுமாகச் செய்துமுடிக்கக்கூடிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அருண்.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

அந்தச் சமயத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.க அல்லாத கட்சி களின் ஆட்சி நடந்தது. ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவரக்கூடாது; அப்படிக் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் வருமானம் பெருமளவில் குறையும் என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்படி எதிர்த்துவந்த மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் பேசினார் அருண். ஐந்து ஆண்டுக்காலம் இந்தத் திட்டம் முழுமை யாகச் செயல்படும் வரை, மாநில அரசாங்கத்தின் வருமானம் குறைவதை மத்திய அரசாங்கம் ஈடுசெய்யும் என்று உறுதி அளித்தார் அருண். அவர் சொன்ன யோசனைகளை மாநிலப் பிரதிநிதிகள் முழுமையாக ஏற்றுக்கொண்டதால் தான் அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தது. அருண் தவிர, வேறு யாராவது இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தால், இந்தச் சட்டம் எளிதாக நடைமுறைக்கு வந்திருக்காது.

திவால் சட்டம் என்னும் அற்புதத் தீர்வு

பிசினஸ் என்பதே ரிஸ்க் நிறைந்தது. அதில் லாபம் மட்டுமே கிடைக்கும் என்று கூற முடியாது. நன்கு செயல்பட்டு லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்கூட ஏதோ ஒரு காரணத்தால் திடீரென நஷ்டம் அடைய தொடங்கிவிடும். தொழில் நிறுவனங்கள் இப்படி நஷ்டம் அடையும்போது, அந்தத் தொழில் நிறுவனத்துக்குக் கடன் அளித்த வங்கிகளும் பாதிப்படைகின்றன. வங்கி அளித்த கடன் பணம் பெருமளவில் திரும்ப வராமல் போய், ரூ.10 லட்சம் கோடி வாராக்கடனாக மாறியிருக்கிறது.

அருண் ஜெட்லி... “சகலகலா வல்லவர்!”

இப்படிக் கஷ்டத்திலிருக்கும் நிறுவனங்களின் சொத்துகளை விற்று, கடன் தந்தவர்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வழிசெய்து தந்தது திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Act). இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள். நஷ்டத்திலிருக்கும் நிறுவனங்கள் அதிலிருந்து தப்பித்து வெளியே வரவும், பெரும் முதலீடுகளைச் செய்த பல தொழில் நிறுவனங் களைச் சீரமைக்கவும் இந்தச் சட்டம் உதவியது.

அவர்போல யாரும் கிடையாது

நான் பல நிதி அமைச்சர்களை சந்தித்திருக்கி றேன். சிலர் பத்திரிகையாளர்களுடன் பெரிதாகப் பழக மாட்டார்கள். அவர்களை விமர்சிக்கிற மாதிரி கேள்வி கேட்டால், ஏதேனும் ஒரு புள்ளி விவரத்தைச் சொல்லி திசை திருப்புவார்கள். ஆனால், அருண், பத்திரிகையாளர்களுடன் அன்புடனும் மரியாதையுடனும் பழகியவர்.

2016-ல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப் பட்ட மறுநாள், பொருளாதாரப் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டம் டெல்லி யில் நடந்தது. அன்றைய தினம் இந்தியாவே குழப்பத்தின் உச்சியிலிருந்தது. பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக பல நூறு கேள்விகளைக் கேட்கத் தயாராக இருந்தனர். பத்திரிகையாளர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நறுக்குத்தெறித்த மாதிரி பதில் சொன்னார் ஜெட்லி. பணமதிப்பு நீக்கத்தால் ஏற்படப்போகும் நன்மைகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

ஆண்டுதோறும் நடைபெற்ற பொருளாதாரப் பத்திரிகை ஆசிரியர்கள் கருத்தரங்கம் ஜெட்லி தலைமையில் 2016-ல் நடந்தது. அதன்பிறகு இந்தக் கூட்டம் நடக்கவில்லை. அவர் நினைவாக அவரிடம் பயிற்சி பெற்ற இன்றைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதே என் வேண்டுகோள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு