பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நோபல் நாயகன் அபிஜித்!

Abhijit Banerjee
பிரீமியம் ஸ்டோரி
News
Abhijit Banerjee

நோபல் பரிசு

லக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான போராட்டத்துக்குச் சிறப்பான முறையில் பங்களித்தமைக்காக அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டைஃப்லோ (Esther Duflo) மற்றும் மைக்கேல் கிரெமர் (Michael Kremer) ஆகியோருக்கு 2019-ம் ஆண்டின் பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நோபல் பரிசை வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அபிஜித் பானர்ஜி.

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

யார் இந்த அபிஜித்?

1961-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அபிஜித், கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றார். தாய், தந்தை இருவருமே பொருளாதாரப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்த அபிஜித், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1988-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற அபிஜித், தற்போது மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய மனைவி டைஃப்லோவுடன் இணைந்து 2003-ம் ஆண்டு ‘அப்துல் லதீஃப் ஜமீல் பாவர்ட்டி ஆக்‌ஷன் லேப்’-பை (J-PAL) உருவாக்கினார்.

நான்கு புத்தகங்கள் மற்றும் பல ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்த அபிஜித், தனது பொருளாதார ஆராய்ச்சிக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவரின் மனைவி டைஃப்லோவுடன் இணைந்து எழுதிய ‘புவர் எகானாமிக்ஸ்’ என்ற புத்தகம், உலகம் முழுக்க 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் (2011-ம் ஆண்டுக்கான) சிறந்த வணிகப் புத்தக விருதையும் வென்றிருக்கிறது.

மைக்கேல் கிரெமர்
மைக்கேல் கிரெமர்

இவரைப்போலவே, பல விருதுகளை வென்ற பொருளாதார நிபுணரான டைஃப்லோவை 2015-ம் ஆண்டு அபிஜித் மணந்துகொண்டார். `மிக இளம் வயதில் பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு’ மற்றும் `பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண்மணி’ என்ற பெருமைகளைப் பெற்றிருக்கிறார் டைஃப்லோ. நோபல் வரலாற்றில் பரிசு பெறும் தம்பதிகளில் இவர்கள் ஆறாவது ஜோடி.

தமிழகத்துடனான தொடர்பு

மனிதவள மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களைப் பொறுத்தவரை, உலக அரங்கில் தனியிடம் பிடித்திருக்கும் தமிழ்நாட்டுக்கும் அபிஜித்துக்கும் ஒரு சிறப்பான நேரடித் தொடர்பு உண்டு. தமிழக அரசின் நிர்வாக மேலாண்மையை மேம்படுத்தும் முயற்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அபிஜித், தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். அரசின் கொள்கை முன்னெடுப்பு மற்றும் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் பணிகளுக்காக கடந்த 2014-ம் ஆண்டு, தமிழக அரசுடன் அபிஜித்தின் ஜே-பால் (J-PAL) நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, புதிய கொள்கை முடிவுகளை வரைவதிலும், நடப்புத் திட்டங்களை மேற்பார்வையிடுவதிலும், தீர்வு சார்ந்த அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் தமிழக அரசுக்கு ஜே-பால் நிறுவனம் துணைபுரியும்.

Abhijit Banerjee
Abhijit Banerjee

ஆரம்பக்கல்வியில் அரசின் முனைப்பு, வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துதல், தொற்றாநோய்கள், குழந்தைகள் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல தலைப்புகளில் தமிழக அரசு சார்பில் ஆய்வுகளை நடத்தியிருக்கும் ஜே-பால் நிறுவனம், தற்போது தமிழ்நாட்டிலுள்ள முதியோர் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகள் இதர மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். மேலும், தமிழக மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு இவரைப் போன்ற பொருளாதார மேதைகளின் ஆய்வுகள் பெரிதும் பயனளிக்கும் என தாராளமாக நம்பலாம்.

இந்தியா இவரைப் பயன்படுத்திக் கொள்ளுமா?

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அபிஜித். அண்மையில், `இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாகச் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று அவர் சொன்ன கருத்து பொதுவெளியில் புதிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.

`பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதிகப்படியான சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் அவர்களை அதிகமாகச் செலவு மற்றும் முதலீடு செய்ய வைக்க முடியும்’ என்றும், `அதன் மூலம் ஏழைகள் உள்ளிட்ட இதரப் பெரும்பான்மை சமூகமும் பயன்பெறும்’ என்றும் நம்பும் ‘ட்ரிக்கிள் டவுண்’ (Trickle-down )எனப்படும் மேல்தட்டுப் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, `ஏழைகளின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நேரடி நடவடிக்கைகள் தேவை’ என்கிறார் அபிஜித்.

இந்தியாவின் மொத்த வருவாயில் பெரும் பணக்காரர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் அபிஜித், `தாராளமய பொருளாதாரக் கொள்கையால் அதிகம் பயனடைந்த பெரும் பணக்காரர்களின் மீதான வரியை அதிகப்படுத்தி, ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

`பல நாடுகள் தங்கள் வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் முன்னேற முடியாமல் போனதற்கு அவை ‘நடுத்தர வருவாய்ப் பொறியில்’ மாட்டிக்கொண்டதுதான் காரணம்’ என்று கூறும் அபிஜித், தரம் குறைந்த மனிதவளம், அடிப்படைக் கட்டுமான வசதி இல்லாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்தியாவின் வளர்ச்சியும்கூட அதேபோல மட்டுப்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறார்.

`இந்தியாவின் பெரும்பாலான வளங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆதாரங்களை முறையாகப் பங்கிட்டு, ஏழை - பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும்’ என்று சொல்லியிருக்கிறார்.

`ஆரம்பக்கல்வி, மனிதத்திறன் மேம்பாடு, உடல்நலன் பேணல் போன்ற சமூக முன்னேற்றத் திட்டங் களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்’ என்றும், `விவசாய மானியங்களைப் பணமாக பயனாளிகளுக்கு நேரடியாகத் தர வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.

`உலகமே போற்றி வியக்கும் பொருளாதார நிபுணர் இந்தியாவில் பிறந்தவர்’ என்று வெறுமனே பெருமையடித்துக்கொள்வதைவிட அவருடைய கருத்துகளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய கொள்கை மாற்றங்களை மேற்கொள்வதும் அவரது பொருளாதார அறிவை இந்தியாவின் மேம்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதுமே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். வறுமைக் குறியீட்டில் நம் நாடு 102-வது இடத்தை அடைந்து, மிக மோசமான நிலையை எட்டியிருக்கும் இந்த நேரத்தில், அபிஜித்தின் கருத்துகள் கவனமாக ஆராயப்பட வேண்டியவை.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே)