Published:Updated:

முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள்!

கவனிக்க வேண்டிய 20 வகைகள்

பிரீமியம் ஸ்டோரி

ண்மைக் காலமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவதால், அது குறித்துப் பலவிதமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு பொருளாதாரத்தை மதிப்பீடு செய்ய ஜி.டி.பி என்ற ஒற்றைக் குறியீட்டை மட்டுமே வைத்துப் பார்க்காமல், பல்வேறு குறியீடுகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அந்த வகையில் முக்கியமான 20 பொருளாதாரக் குறியீடுகளை இங்கே பார்ப்போம்.

முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள்!

1. பணவீக்கம்: ஒரு பொருளாதாரத்தின் முக்கியக் குறியீடாக பார்க்கப்படுவது பணவீக்கம். கடந்த பல வருடங்களாகப் பணவீக்கம் மிகவும் சீராக இருந்துவந்திருக்கிறது. தற்போது காய்கறி விலை ஏற்றத்தால் குறிப்பாக, வெங்காய விலை உயரால் பணவீக்கம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் பணவீக்கம் 4.62% அளவில் இருந்தாலும், கடந்தகால பணவீக்க உயர்வைப் பார்க்கும்போது இப்போதைய நிலை சற்று கட்டுக்குள்தான் இருக்கிறது.

2. ரெப்போ ரேட்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் பத்திரம் சார்ந்த கடன் வட்டி விகிதம். இது, 5.15 சதவிகிதமாக இருப்பது சமீப ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான விகிதம். ரெப்போ ரேட் குறைவதால், வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் உயரவும், தொழில்துறையினரின் கடன் வாங்கும் திறன் உயரவும் வாய்ப்பிருக்கிறது.

3. வங்கி வட்டி: வங்கி வட்டி விகிதம் என்பது வங்கிகள் தங்களின் உடனடித் தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம். இது ரெப்போ ரேட் அளவைவிடக் கூடுதலாக இருக்கும். தற்போது வங்கி வட்டி விகிதம் 5.4 சதவிகிதமாக இருக்கிறது. வட்டி விகிதக் குறைப்பால் ஏற்படும் பலன் எல்லா மக்களையும் சென்றடைந்தால்தான் பொருளாதார வளர்ச்சியில் அது பிரதிபலிக்கும்.

முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள்!

4. கடன் வட்டி: பேஸ் ரேட் (Base Rate) என்பது வங்கிகள் கொடுக்கும் கடன்களின் குறைந்தபட்ச விகிதம். தற்போது இது 8.95%-9.4 சதவிகிதமாக இருக்கிறது. கடன் வட்டி விகிதம் குறையும்போது தொழில் துறையினருக்கும் நுகர்வோருக்கும் சாதகமான சூழல் ஏற்படும்.

5. சேமிப்புக் கணக்கு வட்டி: வங்கிச் சேமிப்பு வட்டி 3.25-3.5 சதவிகிதமாக இருக்கிறது. வட்டி விகிதம் மேலும் குறையும்பட்சத்தில் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

6. வைப்பு நிதி வட்டி: வட்டி விகிதம் குறைந்துவருவதால், வைப்பு நிதியங்களுக்கும் குறைவான வட்டியே கிடைத்துவருகிறது. 5 - 8 சதவிகிதம் என்ற நிலையில் வட்டி உள்ளது.

7. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current account deficit): இந்தியா எப்போதுமே இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், நம் நடப்புக் கணக்கு என்பது எப்போதும் பற்றாக்குறைதான். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சுமார் 2 சதவிகிதமாக இருப்பது நல்லது.

8. நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit): பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் முதல் பாதிப்பு நிதிப் பற்றாக்குறையில் பிரதிபலிக்கும்.

Economic indicator
Economic indicator

9. நிதிப் பற்றாக்குறை எதிர்பார்ப்பு: நிதிப் பற்றாக்குறை தொடர்பான எதிர்பார்ப்பும் ஒரு முக்கியமான பொருளாதாரக் குறியீடுதான். தற்போதைய நிலையில், நிதிப் பற்றாக்குறையில் சிக்கல் ஏற்பட்டாலும் நடப்பு நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை அளவை 3.3% என இலக்கு நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு. பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக நிதிப் பற்றாக்குறை விகிதம் சற்றே உயர்ந்தாலும், பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

10. ஜி.டி.பி: ஜி.டி.பிதான் நாட்டின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் குறியீடு. தற்போது 5% என்ற அளவில் இருந்துவரும் ஜி.டி.பி வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. ஜி.டி.பி விகிதம் குறைவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவாக எந்தப் பொருளாதாரமும் சுழற்சி முறையில்தான் செயல்படும் என்பதை நாம் உணர வேண்டும்.

அந்நியச் சந்தையில் கடந்த பல வருடங்களாக அமைதியாக இருந்த தங்கத்தின் விலை, குறுகியகாலத்தில் உச்சத்தைத் தொட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

11. பொருளாதார மதிப்பு: ஜி.டி.பி என வழங்கப்படும் பொருளாதார மதிப்பு தற்போது சுமார் மூன்று லட்சம் கோடி டாலராக இருக்கிறது. மத்திய அரசு, அடுத்த ஐந்தாண்டுகளில் நமது பொருளாதார மதிப்பு இலக்காக ஐந்து லட்சம் கோடி டாலரை நிர்ணயத்திருக்கிறது.

12. சேமிப்பு விகிதம்: நம் நாடு எப்போதுமே சேமிப்பு சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்டது . சேமிப்பது நமது மக்களின் பாரம்பர்யத்திலேயே இருக்கிறது. தற்போது நம் மக்களின் சேமிப்பு விகிதம் 30.5 சதவிகிதம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இது 36 சதவிகிதமாக இருந்தது.

முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள்!

13. தனிநபர் வருமானம்: கடந்த நிதியாண்டில் மாதம் ரூ.10,534-ஆக இருந்த நமது தனிநபர் வருமானம், இனிவரும் காலத்தில் பல மடங்கு உயர வாய்ப்பிருக்கிறது.

14. டாலர் - ரூபாய் மதிப்பு: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71-ஆக உள்ளது. நம் நாடு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், இறக்குமதிப் பொருள்களான கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை ஆகியவை ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

15. ரூபாயின் மதிப்பு (இதர நாணயங்கள்): டாலர்போல இதர முக்கிய நாணயங்களான இங்கிலாந்தின் பவுண்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ போன்ற நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சீராகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். தற்போது ஒரு யூரோவுக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 79-ஆகவும், பவுண்டுக்கு நிகரான மதிப்பு 92.5-ஆகவும் இருக்கிறது.

16. நிஃப்டி / சென்செக்ஸ்: இந்த ஆண்டு இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகளில் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. சென்செக்ஸ் மதிப்பு 2019-ம் ஆண்டில் சுமார் 15% வரை உயர்ந்திருக்கிறது.

முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள்!

17. பங்குச் சந்தைக் குறியீடுகளின் பி.இ: பங்குகளின் உண்மையான மதிப்பை அளக்க உதவுகிறது இந்தக் குறியீடு. இந்த ஆண்டில் நிஃப்டி / சென்செக்ஸ் குறியீட்டின் பி.இ மதிப்பு சற்று உயர்ந்தே காணப்படுகிறது. என்.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய இரண்டு சந்தைகளின் பி.இ சுமார் 28 என்ற அளவில் இருக்கிறது.

18. தங்கம் விலை: இந்த ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியைத் தந்தது. தற்போது தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 38,000 என்ற அளவில் இருக்கிறது. அந்நியச் சந்தையில் கடந்த பல வருடங்களாக அமைதியாக இருந்த தங்கத்தின் விலை, குறுகியகாலத்தில் உச்சத்தைத் தொட்டது. உலகச் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பல முதலீட்டளர்கள் தங்கத்தை அதிகமாக வாங்கியதால், தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும், வர்த்தகப் போர், வளைகுடா நாடுகள் பிரச்னை காரணமாக டாலரின் மதிப்பு சரிந்து, தங்கத்தின் விலையை உயர்ந்தது. இப்போது தங்கத்தின் விலை ஓரளவுக்குச் சீராக உள்ளது. சர்வதேசப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டால், இதன் விலை மேலும் குறையலாம்.

19. அந்நியச் செலாவணி: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 450 பில்லியன் டாலரைக் கடந்திருக்கிறது. நமது ரூபாயின் மதிப்பு வலுவாக இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் வரத்து அதிகமாக இருப்பதாலும் நம் அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கு வருங்காலத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

20. நிறுவன வரி: நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுகப்பட்டிருக்கிறது. நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்தகதியில் இருந்ததால், அதன் தாக்கம் நம் பொருளாதார வளர்ச்சியிலும் பிரதிபலிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு