Published:Updated:

கரிகாலன், காலிங்கராயன் வரிசையில் ஒரு ஆர்தர் காட்டன்! - பென்னிகுயிக் `டிக்' ஆகும் முன்...

ஆர்தர் காட்டன்

நவீன கால வரலாற்றில், தஞ்சை நெற்களஞ்சியமாய் எழுச்சிபெற்றிட ஆர்தர் காட்டனின் முயற்சியே முக்கிய காரணம்.

கரிகாலன், காலிங்கராயன் வரிசையில் ஒரு ஆர்தர் காட்டன்! - பென்னிகுயிக் `டிக்' ஆகும் முன்...

நவீன கால வரலாற்றில், தஞ்சை நெற்களஞ்சியமாய் எழுச்சிபெற்றிட ஆர்தர் காட்டனின் முயற்சியே முக்கிய காரணம்.

Published:Updated:
ஆர்தர் காட்டன்

நீர்வழிப்பாதையை திசைதிருப்பும் முயற்சிகள் நினைத்த மாத்திரத்தில் நடந்துமுடிவதில்லை. வரலாறு நெடுக அதுகுறித்த முயற்சிகள், நிறைவேற்ற முற்படும்போது கிடைத்த அவமானங்கள் என அனுபவங்கள் சிதறிக் கிடக்கின்றன.

வரலாற்றில் கரிகாலன், காலிங்கராயன் வரிசையில் ஒரு ஆர்தர் காட்டன். இவர் பிரிட்டிஷ் பொறியாளர். தன்னுடைய 26வது வயதில் காவிரிப் பாசனப் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, ‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’யாக உயர்ந்தது சாதனை மிகு வரலாறே.

கல்லணையில் மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டிருப்பதற்கும், முக்கொம்பில் விவசாயக் கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் தற்காலிக அணை உடைந்து போவதற்கும் தீர்வுகாண முயன்ற காட்டன், ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் பழந்தமிழரின் தொழில்நுட்பத்தை அறிந்து வியக்கிறார். அந்தத் தருணம்தான் தென்னிந்தியாவின் எதிர்கால வளத்தையே தீர்மானித்தது.

ஆம். கரிகாலனுக்கு நன்றி செலுத்தி காட்டன் விரைந்து பணியாற்றத் தொடங்கினார். கொள்ளிடத்தின் குறுக்கே அவர் கட்டிய மேலணை, தஞ்சை டெல்டா பகுதி முழுக்கப் பாசன நீரைப் பகிர்ந்தளிக்க உதவி செய்தது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடிய காலங்களில் உபரி நீரைச் சேமிக்கக் கட்டப்பட்ட கீழணை மூலம் நாகை முதல் வீராணம் வரை லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன.

ஆர்தர் காட்டன்
ஆர்தர் காட்டன்

நவீன கால வரலாற்றில், தஞ்சை நெற்களஞ்சியமாய் எழுச்சிபெற்றிட ஆர்தர் காட்டனின் முயற்சியே முக்கிய காரணம். காவிரிக்கரையில் பெற்ற அனுபவம் அவருக்கு கோதாவரிக் கரையிலும் கைகொடுத்தது. கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்ட தெளலீஸ்வரம் அணை உட்பட மிகக்குறைந்த செலவில், மிகப்பெரிய அணைக்கட்டுகளை விரைவாகக் கட்டி முடித்திடும் திறன் பெற்றவராக விளங்கினார் காட்டன். இதற்காக பிரிட்டிஷ் அரசுடனே அவர் முரண்பட நேர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் ரயில்வே பாதைகளைவிட நீர்த்தேக்கங்கள் மூலம் அடையும் வேளாண் முன்னேற்றமே சிறந்தது என்று வாதிட்டவரை பிரிட்டிஷ் அரசாங்கம் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது. அவர்மீது பணிநீக்க நடவடிக்கைகளிலும் இறங்கியது.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களுக்காக உழைத்திட்ட ஆர்தர் காட்டனின் சிந்தனையில் உதித்ததே இந்திய நதிகளை இணைக்கும் திட்டம். அதன் ஒரு பகுதிதான் பெரியாறு அணைத் திட்டம். கிடப்பில் போடப்பட்ட அந்தத் திட்டத்தை மீண்டும் தூசிதட்டி எடுத்திட ஒரு பேரழிவு தேவைப்பட்டது.

222 ஆண்டுகளுக்கு முன், வறண்டுபோன தென் தமிழகத்தில் நீர்வளம் பெருக்கிட இராமநாதபுரம் மன்னர் சேதுபதி வழி தேடுகிறார். அவருடைய அமைச்சர் முத்து இருளப்பர் தலைமையில் ஒரு குழு மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்கிறது. பெரியாற்றின் நீர்வழிப்பாதையை மாற்ற முடியும் என்ற முடிவுக்கு வருகிறது அந்தக்குழு. எனினும் இயற்கைச் சூழலும், நிதி நெருக்கடியும் கைகொடுக்கவில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்து முல்லையாற்றின் நீரை மண் அணை கட்டித் திருப்பிட நடந்த முயற்சியும் தோல்வியில் முடிகிறது. வறண்டுபோன தென் தமிழகத்தின் நீர்த்தேவை கானல் நீராய்க் காட்சியளிக்கத் தொடங்கியது... காலமோ பொறுமை காத்தது.

1876-ம் ஆண்டின் தாது வருடப் பஞ்சத்தில் சென்னை மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் மடிந்தனர். இந்தத் தாது பஞ்சத்தின் பேரழிவு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனசாட்சியை உலுக்கியது. உறங்கிக்கொண்டிருந்த, ஆர்தர் காட்டனின் கோப்பைப் புரட்டிப் பார்த்தபோது அவர் பரிந்துரைத்த பல திட்டங்களில் ஒன்றாக முல்லைப் பெரியாறு அணைத்திட்டம் காலத்தால் உறைந்துபோய் இருந்தது. அந்த அணைத் திட்டத்தை நிறை வேற்றிடச் சரியான ஒரு நபரைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரோ சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். சிறந்த ஆல் ரவுண்டரான அவர் போட்டியின் முதல் விக்கெட்டை வீழ்த்துவதில் வல்லவர். அவர் பெயர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.

- பென்னிகுயிக் மதுரை மக்களின் காவல் தெய்வமானதன் பின்னணி வரலாற்றுடன், இந்த சரித்திரத்த நினைவுகூரவைத்த ஈரோடு சம்பவம் ஒன்றையும் விவரிக்கிறார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.... அதை முழுமையாக ஆனந்த விகடன் தொடரில் வாசிக்க > மாபெரும் சபைதனில் - 33 க்ளிக் செய்க.. https://bit.ly/2zvkX1P

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV