பிரீமியம் ஸ்டோரி

குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விளையும் விவசாய விளைபொருள்களுக்கு, பண்பாட்டு அடையாளம் மற்றும் தரம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்தப் பூண்டு, மருத்துவ குணம் மிக்கது. காரம், உறுதித் தன்மையில் மற்ற பூண்டுகளை விடச் சிறப்பானது. தனித்தன்மை வாய்ந்தது. பத்து மாதங்கள்வரை பூண்டு பல் பிரியாமல் சேமித்து வைக்க முடியும். இத்தனை சிறப்புகளுள்ள கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு, பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு தற்போதுதான் இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது.

மலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு!

புவிசார் குறியீடு பெற பல்வேறு முயற்சிகள் எடுத்தது, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை (பயோ டெக்னாலஜி). அந்தத் துறையின் தலைவர் முனைவர். உஷா ராஜநந்தினியிடம் பேசினோம். “நூறு ஆண்டுகளுக்கு மேலாக விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கே புவிசார் குறியீடு பெற முடியும். கொடைக்கானல் மலைப் பகுதியில் இந்தப் பூண்டு பல ஆண்டுகளாக விளைகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டாலும், கொடைக்கானல் பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கும் மற்ற பகுதிகளில் விளையும் பூண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் விளையும் பூண்டு மருத்துவத்தன்மை வாய்ந்தது.

1837-ம் ஆண்டு ‘மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்ரேச்சர் அண்டு சயின்ஸ்’ என்ற ஆங்கில நூலில் வெள்ளைப்பூண்டு பற்றிய பதிவு இருக்கிறது. ஆங்கிலேய அதிகாரி மோயர், கொடைக்கானலில் மலைப்பூண்டு விவசாயத்தை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள், இதன் மருத்துவக் குணங்கள் மற்றும் சுவை ஆகியவை குறித்த 12 ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். அந்த ஆவணங்களின் அடிப்படையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்திய அளவில் 734 வகையான வெள்ளைப்பூண்டுகள் உள்ளன. அவற்றில் கொடைக்கானல் மலைப்பூண்டு முதலிடத்தில் உள்ளது. இது புவிசார் குறியீடு கொடுத்த அங்கீகாரம். இந்தக் குறியீடு, தனிப்பட்ட யாருக்கும் சொந்தமில்லை. கொடைக்கானல் மலைப்பூண்டுச் சாகுபடி செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் உரிமையானது. கொடைக்கானல் பூண்டுக்கு மவுசு இருப்பதால், மற்ற பகுதிகளிலிருந்து பூண்டைக் கொண்டுவந்து நிறத்தை மாற்றி, கொடைக்கானல் பூண்டு என விற்பனை செய்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளும் வித்தியாசம் தெரியாமல் வாங்கிச் செல்கிறார்கள். இனி, இந்தப் பகுதி விவசாயிகள் தங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் உலகம் முழுவதும் இந்தப் பூண்டை ஏற்றுமதி செய்யலாம். இந்தக் குறியீடுமூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும்” என்ற உஷா ராஜ நந்தினி, கொடைக்கானல் மலைப்பூண்டின் சிறப்புகள் குறித்துச் சொன்னார்.

உஷா ராஜநந்தினி
உஷா ராஜநந்தினி

“ஊட்டியில் விளையும் பூண்டு, கொடைக்கானலில் விளையும். ஆனால், கொடைக்கானல் மலைப்பூண்டு ஊட்டியில் விளையாது. கொடைக்கானல் மலைப்பூண்டு மிகுந்த காரத்தன்மை கொண்டது. ஒரு பல்லைக் கடித்தாலே நெஞ்செல்லாம் எரியும். கட்டி வைத்தால் ஓர் ஆண்டுவரை சேமித்து வைக்க முடியும். ஊட்டிப் பூண்டை இவ்வளவு நாள்கள் சேமித்து வைக்க முடியாது.

அந்தக் காலத்தில், கொடைக்கானல் மலைப் பூண்டைச் சேமித்து வைத்து, ‘பண்டமாற்று’ முறையில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பலவித நோய்களுக்கு மருந்தாகவும் பூண்டைப் பயன் படுத்துகிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாகக் கூட்டுப்பொருள் சேர்த்து மருந்து தயாரித்துப் பயன் படுத்துகிறார்கள். தலைவலி, வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் அனைத்துக்கும் இந்தப் பகுதி மக்களுக்குப் பூண்டுதான் மருந்து.

மலைப்பகுதி மக்கள் பூண்டு, நல்லெண்ணெய், கருப்பட்டி மூன்றையும் சேர்த்து ஒரு லேகியம் தயார் செய்து, பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுக்கிறார்கள். அதைச் சாப்பிட்டால் சாப்பிடும் உணவு உடனடியாகச் செரித்து நல்ல பசி எடுக்கும். அதனால், விரைவில் உடல் தேறிவிடும்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர். உஷா ராஜநந்தினி, செல்போன்: 94867 59495

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடைக்கானல் பூண்டை அடையாளம் காண்பது எப்படி?

கொடைக்கானல் மலைப்பூண்டு முழு வெண்மையாக இருக்காது, இளம்பழுப்பு வண்ணத்தில் இருக்கும். மகாராஷ்டிராவிலிருந்து வரும் பூண்டு முழு வெண்மையாக இருக்கும். அதை, ஒரு பல்லை முழுமையாக வெறும் வாயில் சாப்பிட முடியும். ஆனால், கொடைக்கானல் மலைப்பூண்டை அப்படிச் சாப்பிட முடியாது. ஒரு கடி கடித்தாலே காரம் மண்டையில் ஏறும். சுவைத்துப் பார்த்து வாங்கினால் ஏமாறாமல் இருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு