Published:Updated:

“தற்கொலைக்குத் தூண்டியதா தினேஷுக்கு வந்த மர்ம போன் கால்?”

 கொடநாடு அப்டேட்...
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு அப்டேட்...

கொடநாடு அப்டேட்...

“தற்கொலைக்குத் தூண்டியதா தினேஷுக்கு வந்த மர்ம போன் கால்?”

கொடநாடு அப்டேட்...

Published:Updated:
 கொடநாடு அப்டேட்...
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு அப்டேட்...

ஆகஸ்ட் 17-ம் தேதி ஊட்டியில், கொட்டும் மழையில் தொடங்கப்பட்ட கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை, ஒரு மாதத்தைக் கடந்தும் அனல் கக்கிக்கொண்டிருக்க... கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கு, மீண்டும் தூசுதட்டப்பட்டிருப்பது கூடுதல் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு அடுத்தடுத்த பரபரப்பு திருப்பங்களாக மூன்று சம்பவங்கள் நடந்தேறின. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ், வாகன விபத்தில் சேலத்தில் உயிரிழந்தார். அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த மற்றொரு வாகன விபத்தில் மனைவி, மகளைப் பறிகொடுத்துவிட்டு படுகாயங்களுடன் உயிர்தப்பினார் சயான். மர்மத்தை விலக்கும் முக்கியச் சாட்சியாகக் காவல்துறையால் கருதப்பட்டுவந்த கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரும் இரண்டு மாதங்கள் கழித்து அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அப்போது சோலூர்மட்டம் போலீஸாரால் தற்கொலை என்று முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்குதான், மீண்டும் இப்போது விசாரிக்கப்படுகிறது.

 “தற்கொலைக்குத் தூண்டியதா தினேஷுக்கு வந்த மர்ம போன் கால்?”

கோத்தகிரி அருகிலுள்ள கெங்கரை படுகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினேஷ்குமாருக்கு, உள்ளூர் நபர் ஒருவரின் சிபாரிசு மூலம் கொடநாடு எஸ்டேட்டில் வேலை கிடைத்தது. குறுகிய காலத்திலேயே எஸ்டேட் தொழிலாளர்களின் சம்பளக் கணக்கு முதல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சிசிடி‌வி வரை இவரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்திருக்கின்றன. பெரிய இடத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்று சந்தோஷமாக வாழ்ந்துவந்த தினேஷ்குமார், திருமணம் செய்துகொள்ளும் முடிவெடுத்து தன் வீட்டின் மேல் போர்ஷனில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டிவந்தார். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க... 2017, ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு, எஸ்டேட்டுக்குள் கொள்ளைக் கும்பல் குதித்த நிமிடம் முதல், அவரின் வாழ்க்கை தடம்புரளத் தொடங்கியிருக்கிறது.

சம்பவம் வெளியில் தெரிந்த அடுத்த நிமிடமே, அனைவரின் கேள்வியும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் குறித்துத் திரும்பின. நுழைவாயிலிலிருந்த 28 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட எஸ்டேட்டில் மொத்தம் 234 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தன்று அவை இல்லாமல்போன மாயம் என்னவென்று அப்போதே கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கினார்கள் காவல்துறை அதிகாரிகள். ‘‘ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கேமராக்கள் சர்வீஸுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அதனால்தான், அன்றைய தினம் அங்கு கேமராக்கள் இல்லை’’ என்று எஸ்டேட் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், ஜூலை 3-ம் தேதி காலை, திடீரென தன் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் தினேஷ்குமார். அவரின் தற்கொலை குறித்துப் பல சந்தேகங்கள் கிளம்பினாலும், சாதாரண தற்கொலை வழக்காகவே முடித்துவைத்தது சோலூர்மட்டம் காவல் நிலையம்.

 “தற்கொலைக்குத் தூண்டியதா தினேஷுக்கு வந்த மர்ம போன் கால்?”

தினேஷ்குமாரின் தற்கொலையை விவரித்த அவரின் நண்பர் ஒருவர், ‘‘அந்தச் சமயத்துல தினேஷ் ஒரு வாரம் லீவ் போட்டிருந்தான். திரும்பவும் வேலைக்குப் போன முதல் நாளே அவன்கிட்ட போலீஸ் விசாரணை நடத்தினதா சொன்னான். சிசிடிவி பொறுப்பு அவன்கிட்ட இருந்ததால, மொத்தப் பழியும் அவன்மேல திரும்புற மாதிரி இருந்துச்சு. அதுலருந்தே யார்கிட்டயும் பேசாம, பழகாம இருந்தான். ஜூலை மாசம் 3-ம் தேதி, காலைல வேலைக்குக் கிளம்பத் தயாரா இருந்தவனுக்கு திடீர்னு ஒரு போன் கால் வந்துருக்கு. அந்த போன்ல பேசின உடனே, ரூமுக்குள்ள போயி லுங்கியை எடுத்து தூக்கு மாட்டியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அம்மா வீட்டுலயேதான் இருந்திருக்காங்க. கண் இமைக்கிற நேரத்துக்குள்ள நடந்த இந்தத் தற்கொலைக்கு இப்போ வரைக்கும் சரியான காரணம் எங்க யாருக்குமே கெடைக்கலை’’ என்றார் வேதனையுடன்.

 “தற்கொலைக்குத் தூண்டியதா தினேஷுக்கு வந்த மர்ம போன் கால்?”

தினேஷின் மற்றொரு நண்பரிடம் பேசியபோது, ‘‘தற்கொலை பண்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே ரொம்ப குடிக்க ஆரம்பிச்சான். `லவ் ஃபெயிலியர் காரணமா இப்படி முடிவெடுத்துட்டான்’னு சிலரும், ‘கண் வலி தாங்க முடியாமத்தான் இப்படி செஞ்சுக்கிட்டான்’னு அவனோட பேரன்ட்ஸும் சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை அவன் இந்த மாதிரி முடிவெடுக்கிற ஆளே கிடையாது. எஸ்டேட் நிர்வாகத்துல அவனைப் பெரிய அளவுல சிக்கவெச்சு, இப்படியொரு முடிவுக்குத் தள்ளிட்டாங்க. அவனுக்கு வந்த கடைசி போன் காலைப் பார்க்கக்கூட விடாம போலீஸ் போனைப் பறிச்சுக்கிட்டாங்க’’ என்றார்.

தினேஷ்குமாரின் தந்தை போஜன், ‘‘கண்வலி இருக்குன்னுதான் சொல்லிக்கிட்டிருந்தான். கொடநாடு எஸ்டேட் சைடுல இருந்தோ, அவனோட ஃபிரண்ட்ஸ் சைடுல இருந்தோ அவனுக்கு எந்த அழுத்தமும் வரலை. எதுக்காக இப்படி செஞ்சான்னுதான் எங்களுக்குப் புரியலை. தற்கொலைக்குப் பிறகு அவனோட‌ செல்போனையும் போலீஸ்காரங்க கொண்டுபோயிட்டாங்க” என்றார்.

போஜன்
போஜன்

விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர், ‘‘தினேஷ்குமாருக்கு வந்த அந்தக் கடைசி போன் கால் யாரோடது, அதுல என்ன‌ பேசினாங்கன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கோம். எங்க கணிப்பு சரியா இருந்தா, எஸ்டேட் நிர்வாகத்துல இருக்குற முக்கியமான ஒருத்தர் கண்டிப்பா சிக்குவார்’’ என்றார்.

அடுத்தடுத்து விழுந்துகொண்டேயிருக்கும் மர்ம முடிச்சுகள் எப்போது அவிழ்க்கப்படும்?