Published:Updated:

கைப்பற்றப்பட்ட 6 செல்போன்கள்... கைமாறிய சிம்கார்டு, மெமரி கார்டு...

- விசாரணை வளையத்தில் சேலம் வி.வி.ஐ.பி-கள்!

பிரீமியம் ஸ்டோரி

கடந்த நான்கு ஆண்டுகளாக கனகராஜ், சயான் உள்ளிட்டவர்களை மையமாகவைத்தே நடந்துவந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை, சமீபத்தில் நடந்த இரண்டு கைதுகளால் ‘டேக் டைவர்ஷன்’ எடுத்திருக்கிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்த கனகராஜின் சகோதரர்கள் தனபால், ரமேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, ஏ 11, ஏ 12 குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் சேலம் இளங்கோவனின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. போலீஸ் விசாரணையில் தனபால், ரமேஷ் ஆகியோர் கக்கியிருக்கும் சில தகவல்களால், சேலத்தைச் சேர்ந்த வி.ஐ.பி-கள் சிலர் சிக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கைப்பற்றப்பட்ட 6 செல்போன்கள்... கைமாறிய சிம்கார்டு, மெமரி கார்டு...

பறிமுதலான ஆறு செல்போன்கள்!

பொதுவாக ஒரு வழக்கில் ஐந்து நாள்கள் போலீஸ் கஸ்டடி கிடைப்பதே பெரிது. ஆனால், தனபாலுக்கு 11 நாள்களும் ரமேஷுக்கு 10 நாள்களும் போலீஸ் கஸ்டடி கிடைத்தது‌‌. விசாரணை தொடக்கத்தில் தனபால் முன்னுக்குப் பின் முரணாகவே பதிலளித்திருக்கிறார். போலீஸ் வேறு மாதிரியாக விசாரித்த பிறகே சில அ.தி.மு.க நிர்வாகிகளின் பெயர்களைச் சொன்ன தனபால், கனகராஜின் செல்போனை எரித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து போலீஸார் இருவரையும் சேலத்துக்கு அழைத்துச் சென்று அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது ரமேஷின் வீட்டிலிருந்து ஆறு செல்போன்களையும், சில சிம் கார்டுகளையும் போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.

நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், “கொடநாடு சம்பவத்தையொட்டி, ரகசியமாகச் சிலரை அழைக்க ஒரு பட்டன் போனை கனகராஜ் வாங்கியிருக்கிறார். உயிரிழப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு வரை, பலரிடம் அதிலிருந்துதான் கனகராஜ் பேசியிருக்கிறார். அப்படி கனகராஜுடன் பேசியவர்களில் தனபாலும், அவரின் குடும்பத்தினரும் அடக்கம். அந்த பட்டன் போன் எங்கே போனது என்பதை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். கனகராஜின் ஸ்மார்ட்போனை எரித்ததாக தனபால் சொன்னாலும், அதிலிருந்த சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவை அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கைமாறியிருக்கின்றன. இதற்குப் பிரதிபலனாக, 2019-ல் தனபாலுக்குப் பெரிய வெகுமதி கிடைத்திருக்கிறது. கொடநாடு ஆவணங்கள் சென்று சேர்ந்த நபரிடம்தான் கனகராஜின் செல்போன் சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூடலூர் முதல் குனியமுத்தூர் வரையுள்ள பல அ.தி.மு.க நிர்வாகிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. அதை நோக்கியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். ரமேஷின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஆறு செல்போன்களை ஆய்வு செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். அதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்கலாம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்
எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்

ரெய்டில் சிக்கிய ஆவணம்!

கனகராஜ் விபத்து தொடர்பான விசாரணையில், இளங்கோவன் பெயர் வெளியானதாலேயே அவரது வீட்டில் ரெய்டு நடந்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கனகராஜையும் அ.தி.மு.க-வின் வி.வி.ஐ.பி ஒருவரையும் இணைக்கும் புள்ளியாக இளங்கோவன் இருந்திருக்கிறார். அவர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, ஒரு முக்கிய ஆவணம் சிக்கியிருக்கிறது. தனபால், ரமேஷைக் கைதுசெய்ய அதுவும் ஒரு காரணம் என்கிறது போலீஸ் வட்டாரம். தங்களுடைய வாக்குமூலத்தில் இளங்கோவனுடைய பெயரை தனபாலும் ரமேஷும் சொல்லாவிட்டாலும், இளங்கோவனை வளைக்கும் வேறு சில ஆவணங்களும் சிக்கியிருப்பதாக சஸ்பென்ஸ் வைக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

சேலம் இளங்கோவனின் பின்புலம் குறித்து, அ.தி.மு.க-வின் சேலம் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “ஆத்தூர் அருகே, புத்திரக்கவுண்டம் பாளையத்தில் தன் சித்தி வீட்டில் வளர்ந்த இளங்கோவனின் இளமைக்காலம் வறுமையில்தான் கடந்தது. அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றிய அவரின் உறவுமுறை அக்கா ஒருவர் இளங்கோவனுக்கு உதவ முன்வந்தார். அந்தப் பெண்ணின் கணவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் டெண்டர் எடுத்து குடிநீர்த் தொட்டிகளைக் கட்டிவந்தார். அவருடன் சேர்ந்து தொழில் பழகிய இளங்கோவன், ஒரே வருடத்தில் தனியாக டெண்டர் எடுத்து தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். டெண்டர் கமிஷனை அரசியல்வாதிகளிடம் கொண்டு சேர்க்கும் இடைத்தரகராகத்தான் இளங் கோவனின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

கைப்பற்றப்பட்ட 6 செல்போன்கள்... கைமாறிய சிம்கார்டு, மெமரி கார்டு...

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த மஞ்சினி முருகேசன் ஆகியோரிடம் இளங்கோவன் நெருக்கமானார். 2006 சட்டமன்றத் தேர்தலில், இளங்கோவனுக்கு சேலம் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அதில் இளங்கோவன் தோற்றுவிட்டார். ஆனாலும், 2016-ல் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்தது. எடப்பாடி முதல்வரானதும், அவருடனான நட்பில் இளங்கோவனுடைய வளர்ச்சி ஜெட் வேகத்தில் எகிறியது. இன்று அவர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி” என்றனர்.

கைப்பற்றப்பட்ட 6 செல்போன்கள்... கைமாறிய சிம்கார்டு, மெமரி கார்டு...

ஆப்பிரிக்காவில் 1,000 ஏக்கர் நிலம்... சிங்கப்பூரில் இறால் பண்ணை!

இளங்கோவனின் தொழில் வளர்ச்சிக்கு அவரின் மகன் பிரவீன்தான் அச்சாணி என்கிறார்கள். கடந்த 2016-ல் முசிறியில் பிரவீன் தொடங்கிய கல்லூரியில் முன்னாள் இனிஷியல் அமைச்சர் மகன் ஒருவரும் பங்குதாரர் என்கிறார்கள். சமீபத்தில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், சுமார் 70 கோடி ரூபாய்க்கு உள்நாடு, வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

இது பற்றி நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், “ஆத்தூருக்கும் பெரம்பலூருக்கும் இடையேயுள்ள ஊர் ஒன்றில் பிரமாண்டமான அரண்மனையைக் கட்டியிருக்கும் ஒரு நபர், இளங்கோவனுக்கு நெருக்கம். மலேசிய அரசு வழங்கும் விருதைப் பெற்றிருக்கும் அந்த நபர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் சுரங்கம், எரிவாயு, எண்ணெய்க் குழாய் சம்பந்தமான தொழில்களைச் செய்துவருகிறார். ஆத்தூரில் தமிழ்க்கவியின் பெயரைக்கொண்ட கல்வி நிறுவனம் ஒன்றிலும் அந்த நபர் பங்குதாரராக இருக்கிறார். அந்தக் கல்வி நிறுவனத்துடன் இளங்கோவனுக்கும் தொடர்பிருக்கிறது. அந்தப் பிரமுகர் மூலமாகத்தான் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சேலம் தரப்பினர் 1,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். மேலும், அ.தி.மு.க வி.வி.ஐ.பி-யின் பல முதலீடுகள் இவர்கள் மூலமாகவே சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இறால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முதலீடு விவகாரங்களையும் நாங்கள் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம். அந்தப் பிரமுகரையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். தனபால், ரமேஷின் வாக்குமூலமும், செல்போன் ஆதாரங்களும் ‘ஸ்ட்ராங்’ ஆகும் பட்சத்தில், இளங்கோவன் வளைக்கப்படலாம்” என்றார். இது குறித்து விளக்கம் கேட்க இளங்கோவனின் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். ஆனால், அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக வந்தது.

தனபால் - ரமேஷ்
தனபால் - ரமேஷ்

இளங்கோவன் வெறும் தூண்டில்தான். அந்தத் தூண்டிலைவைத்து அ.தி.மு.க-வின் வி.வி.ஐ.பி ஒருவரைக் குறிவைத்திருக்கிறது போலீஸ். இப்போதைக்கு அனைவரின் கண்களும் சேலத்தை நோக்கித்தான் இருக்கின்றன!

****

தினேஷ் குடும்பத்தினர் மிரட்டப்பட்டனரா?

கொடநாடு மறுவிசாரணையில், கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனுக்கும் இளங்கோவனுக்கும் இடையே தொடர்பிருப்பதும் தெரியவந்திருக்கிறதாம். அதனாலேயே, கொடநாடு விவகாரத்தில் போலீஸில் எந்தப் புகாரையும் நடராஜன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டரான தினேஷ் மரணத்தில் எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. தினேஷின் கெங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்களே, “தினேஷின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் அவர்களிடம் மறுவிசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும்” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு