Published:Updated:

கொடநாடு வழக்கு... நெருங்கும் போலீஸ்... அடுத்து சிக்கப்போவது யார்?

கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

கார்டன் டிரைவராக இருந்ததால், கனகராஜுக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வட்டாரத்தில் செல்வாக்கு இருந்திருக்கிறது

கொடநாடு வழக்கு... நெருங்கும் போலீஸ்... அடுத்து சிக்கப்போவது யார்?

கார்டன் டிரைவராக இருந்ததால், கனகராஜுக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வட்டாரத்தில் செல்வாக்கு இருந்திருக்கிறது

Published:Updated:
கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

நீலகிரி மலைச்சரிவின் ஊசிக்கொண்டை வளைவுகளைப்போல அடுத்தடுத்த திருப்பங்களுடன் ஊர்ந்துகொண்டே செல்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தூசுதட்டி எடுக்கப்பட்ட இந்த வழக்கின் மறு விசாரணை தொடங்கப்பட்ட வேகத்தில் வழக்கின் ஏ-1 ஆக இருந்த கனகராஜின் சகோதரர்கள் தனபால், ரமேஷ் கைதுசெய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை, வழக்கின் மிக முக்கியத் திருப்பமாகக் கருதப்பட்ட நிலையில் மேலும் சிலர் கைதுசெய்யப்படுவார்கள், மர்ம முடிச்சுகள் அவிழும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனபாலும் ரமேஷும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து, வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்ல போலீஸாருக்கு எந்தத் தரவும் கிடைக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில்... இப்போது மீண்டும் வேகமெடுத்திருக்கிறது வழக்கு!

ஏப்ரல் 15-ம் தேதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான ஆறுக்குட்டியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது போலீஸ். தொடர்ந்து மறுநாளே அவரின் மகன் அசோக், உறவினர் பாலாஜி, உதவியாளர் நாராயணசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏப்ரல் 18 அன்று மீண்டும் அசோக், இந்த வழக்கின் மறு விசாரணைக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்த அனுபவ் ரவி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர, கொடநாடு எஸ்டேட்டில் மர வேலை செய்த சஜ்ஜீவனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதன் அடுத்தகட்டமாக அ.தி.மு.க-வின் சில முக்கியஸ்தர்களும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

இது குறித்து போலீஸார், அ.தி.மு.க-வினர், கனகராஜ் வட்டாரம் என்று பல்வேறு தரப்பிலும் பேசினோம்... “கார்டன் டிரைவராக இருந்ததால், கனகராஜுக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வட்டாரத்தில் செல்வாக்கு இருந்திருக்கிறது. கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அந்தத் தொடர்புகளை பலமாக வைத்திருந்திருக்கிறார் கனகராஜ். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, கூவத்தூர் கூத்துகள் என அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் சம்பவ இடங்களில் இருந்திருக்கிறார் கனகராஜ். கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தொழிலதிபர் அசோக்கிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அந்தத் தொடர்பு மூலம் அப்போதைய எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கும் கார் ஓட்டியிருக்கிறார். ஆறுக்குட்டி சட்டசபை உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சென்னைக்கு வரும்போது கனகராஜ்தான் டிரைவர். அதேபோல, அனுபவ் ரவி சென்னையில் இருந்தபோதும் கனகராஜ் அவருக்கு கார் ஓட்டியிருக்கிறார்.

அசோக்கின் பிசினஸ் பார்ட்னரான நவ்ஷாத் என்பவரிடம் சயான் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தப் பழக்கத்தில்தான் கனகராஜும் சயானும் நண்பர்களாகியுள்ளனர். கொடநாடு சம்பவம் நடப்பதற்குச் சில நாள்களுக்கு முன்புகூட கனகராஜ், சயான் இருவரும் கோவையில் முகாமிட்டு ஒரு வி.வி.ஐ.பி-யைச் சந்தித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. கொடநாடு சம்பவத்துக்குப் பிறகு விபத்தில் இறப்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன்புகூட கனகராஜ், அனுபவ் ரவியை போனில் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது ஆறுக்குட்டி, அனுபவ் ரவி உள்ளிட்டோர் கோவையில் ஒரு தியேட்டரில் ‘பாகுபலி 2’ படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கொடநாடு வழக்கு... நெருங்கும் போலீஸ்... அடுத்து சிக்கப்போவது யார்?

ஆறுக்குட்டி, அவரின் மகன் அசோக், உறவினர் பாலாஜி, உதவியாளர் நாராயணசாமி, அனுபவ் ரவி உள்ளிட்டோர் கனகராஜிடம் 100-க்கும் மேற்பட்ட முறை செல்போனில் பேசியுள்ளனர். அதற்கான செல்போன் தரவுகள் கிடைத்துள்ளன. கனகராஜ் உயிரிழந்த உடனே சயானும் கேரளாவில் விபத்தில் சிக்கி, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான மருத்துவக் கட்டணத்தில் ஒரு பகுதியை இவர்கள் செலுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரிடமும் அடுத்தடுத்து போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சந்தேக வளையத்தில் இருக்கும் சஜ்ஜீவனுக்கும் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் துபாய் சென்றுவிட்டார். ‘துபாயிலிரு0ந்து வந்த பிறகு விசாரணைக்கு வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

கொடநாடு வழக்கு மறு விசாரணை தொடங்கியதும் அ.தி.மு.க வி.வி.ஐ.பி-கள் பலர் பதற்றமாகியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய மாஜி ஒருவர் மற்றும் அப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ (ஆறுக்குட்டி அல்லாமல்) உள்ளிட்டோர் மறுவிசாரணைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர மறைமுகமாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே, அடுத்ததாக அந்த மாஜியிடம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதால், அ.தி.மு.க-வில் மீண்டும் பதற்றம் தொற்றியிருக்கிறது” என்று விவரித்தார்கள்.

தனபால்
தனபால்

ஆனாலும், மறு விசாரணையில் போலீஸாரின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் இந்த வழக்கை உற்று கவனித்துவருபவர்கள். இது பற்றி நம்மிடம் பேசியவர்கள், “கொடநாடு வழக்கையொட்டி சில கிளை வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அந்த வகையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் கனகராஜ் மர்ம மரணம், கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ் மர்ம தற்கொலை ஆகிய வழக்குகளிலும் மறு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கில் சந்தேகத்துக்குரிய விஷயங்களே கனகராஜ், சயான் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதுதான். சயானுக்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சயானே கூறிவருகிறார்.

சயானின் கார் விபத்துக்குள்ளானது கேரளாவில். முக்கியமாக, இந்த வழக்கின் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான். சயான் விபத்து வழக்கைக் கையாண்டது கேரள போலீஸ் என்பதால், அதை மறு விசாரணைக்கு எடுப்பதில் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், இது முக்கியமான வழக்கு என்பதால், மர்ம முடிச்சுகளை அவிழ்க்க காவல்துறை நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆனால், அந்தப் பக்கம் போலீஸ் செல்லவே இல்லை. தனபால், ரமேஷ் கைதுசெய்யப்பட்டவுடன், அவர்களிடமிருந்து செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வாக்குமூலத்திலிருந்தே அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், மேற்கொண்டு கைது நடவடிக்கைகள் இல்லை என்பதைவிட, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ரமேஷும் தனபாலும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். எனவே, கடந்தகாலத் தவறுகளைச் செய்யாமல், போலீஸ் விரைந்து விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும்” என்றனர்.

ரமேஷ்
ரமேஷ்

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ-வாக இருந்தபோது சென்னை சென்றால், கார் ஓட்ட ஆள் வேண்டுமே என்று தொழிலதிபர் அசோக் மூலம் கனகராஜை டிரைவராகச் சேர்த்துக்கொண்டேன். அவ்வப்போது குடித்துவிட்டு ஏதாவது உளறினாலும், பழக்கவழக்கத்தில் பெரிதாகச் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ரிசார்ட்டில் இருந்தபோது தவறான தகவல்களைச் சொன்னதால், கனகராஜுடன் சங்கடம் ஏற்பட்டது. அப்போதே அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு என்னை எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.

கொடநாடு வழக்கைக் கையாளும் போலீஸார் சிலரிடம் பேசினோம்... “வழக்கில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. வழக்கு விசாரணையின் போக்கை முன்கூட்டி கணித்து, குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். வேண்டுமென்றே சிலரை விட்டுப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். சயான் விபத்து கேரள காவல்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. மற்றபடி, விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் இப்போது நாங்கள் சொல்ல முடியாது” என்றனர்.

தமிழ்நாடு போலீஸுக்கு இந்த வழக்கு ஒரு சவால்தான்... பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism