Published:Updated:

கொடநாடு ஆவணங்களுக்கு குறி? - அதிரடித்த விஜிலென்ஸ் ரெய்டு... ஆடிப்போன இளங்கோவன்!

புத்திரகவுண்டம்பாளையத்திலுள்ள இளங்கோவன் வீட்டுக்குக் காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனைக்கு வந்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது

பிரீமியம் ஸ்டோரி

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம்வரும் இளங்கோவனை டார்கெட் செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சமீபத்தில் நடத்தியிருக்கும் அதிரடி ரெய்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சேலம் மாவட்டம், புத்திரகவுண்டம்பாளையத்திலுள்ள இளங்கோவன் வீடு, அவருடைய மகன் பிரவீன்குமார் நடத்திவரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி, முசிறி என இளங்கோவனுக்குத் தொடர்புடைய 36 இடங்களில் அக்டோபர் 22-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டார்கள். அதில், தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆகிய பதவிகளைப் பயன்படுத்தி, எக்கச்சக்கமான சொத்துகளை இளங்கோவன் வாங்கிக் குவித்திருப்பதும், அந்தப் பணத்தையெல்லாம் ஃபைனான்ஸ், நகைக்கடை, கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, இளங்கோவன், அவருடைய மகன் பிரவீன் குமார் மீது நான்கு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

கொடநாடு ஆவணங்களுக்கு குறி? - அதிரடித்த விஜிலென்ஸ் ரெய்டு... ஆடிப்போன இளங்கோவன்!

22-ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்த ரெய்டில், 20 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளி நகைகள், 25 கோடி மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள், 45 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள், ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள், இரண்டு வால்வோ பேருந்துகள் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின. ‘‘இவையனைத்தும் இளங்கோவனுடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிக்கியவைதான். இளங்கோவன் வீட்டில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை’’ என்று சோதனை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இளங்கோவன் வீட்டிலிருந்து 30 கிலோ தங்கமும், 60 கிலோ வெள்ளியும் கைப்பற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புத்திரகவுண்டம்பாளையத்திலுள்ள இளங்கோவன் வீட்டுக்குக் காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனைக்கு வந்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. இளங்கோவனுக்கு போன் அடித்து போலீஸார் விஷயத்தைச் சொல்ல, ‘‘சென்னையில இருக்கேன். கிளம்பி வர்றேங்க’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அன்றைய தினம் சேலத்தில்தான் இளங்கோவன் இருந்தாராம். ரெய்டு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்ததோடு, அ.தி.மு.க நிர்வாகிகளை வீட்டின் முன்பு குவித்துவிட்டு, சாவகாசமாக மதியம் 12 மணியளவில் வந்துசேர்ந்திருக்கிறார். அதன் பிறகுதான் போலீஸார் சோதனையில் இறங்கினார்கள்.

கொடநாடு ஆவணங்களுக்கு குறி? - அதிரடித்த விஜிலென்ஸ் ரெய்டு... ஆடிப்போன இளங்கோவன்!

இளங்கோவன் வீட்டின் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் கூடியதோடு, லோக்கல் எம்.எல்.ஏ-க்களான சித்ரா, நல்லதம்பி, ஜெயசங்கரன் ஆகியோரும் வந்திறங்கினார்கள். முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், ரெய்டு நடந்தபோது இளங்கோவனுடைய வீட்டுக்கு வந்ததை அங்கிருந்த அ.தி.மு.க தொண்டர்களே ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். சேலம் புறநகர் மாவட்ட ஜெ பேரவைச் செயலாளராக இருக்கும் இளங்கோவனும், ஜெ பேரவை மாநிலச் செயலாளராக இருக்கும் உதயகுமாரும் கட்சி தாண்டி மிகவும் நெருக்கமாம். அதனடிப்படையில்தான் உதயகுமார் வந்ததாகச் சொல்கிறார்கள். இளங்கோவனுடன் உதயகுமார் தனியாக அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை செய்திருக்கிறார்.

புத்திரகவுண்டம்பாளையத்தில் அரண்மனைபோல மிகப் பிரமாண்டமாக இளங்கோவன் கட்டியிருக்கும் இரண்டடுக்கு மாடி வீடுதான் இந்த ரெய்டுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். சிலுவம்பாளையத்திலுள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டைவிட, இளங்கோவனுடைய இந்த வீடு, ஃபிங்கர் பிரின்ட் டிஜிட்டல் கதவுகள் எனப் படு ஹைடெக்காகக் கட்டப்பட்டிருக்கிறது. நாமக்கல்லைச் சேர்ந்த சர்ச்சைக்குப் பெயர்போன மூன்றெழுத்துக் கட்டுமான நிறுவனம்தான், இளங்கோவனுக்கு இந்த வீட்டைக் கட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் கைம்மாறாகத்தான் தமிழகத்தின் பல அரசு டெண்டர்களை அந்த நிறுவனத்துக்கு இளங்கோவன் தரப்பு ஓகே செய்துகொடுத்திருக்கிறது. இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்த அன்றைய தினத்தில், நாமக்கல்லிலுள்ள அந்தக் கட்டுமான நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

சேலத்துக்கும் ஆத்தூருக்கும் இடையிலுள்ள ஒரு சிறிய கிராமமான புத்திரகவுண்டம் பாளையத்தில், தன்னுடைய பணத்தை வைத்து பினாமிகள் மூலம் ஃபைனான்ஸ், நகைக்கடைகள் போன்றவற்றை இளங்கோவன் நடத்திவந்ததும் தெரியவந்திருக்கிறது. இளங்கோவனுக்கு வேண்டப்பட்ட 36 இடங்களில் ரெய்டு நடந்தபோதிலும், சில இடங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கோட்டைவிட்டுள்ளனர். ‘‘ஆத்தூரில் இளங்கோவனுடைய நண்பர் நடத்தும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மூன்றெழுத்து கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், தமிழகக் கவிஞர் மற்றும் வங்காளக் கவியின் பெயரைக்கொண்ட கல்வி நிறுவனங்கள், வாழப்பாடியிலுள்ள நதியின் பெயரைக்கொண்ட ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இளங்கோவனுடைய பணம் பெருமளவு புழங்குகிறது. இவையெல்லாம் எப்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது? இதிலெல்லாம் ரெய்டு நடத்தினால் இளங்கோவனுடைய நெட்வொர்க் மற்றும் குவித்துள்ள பணத்தின் உண்மையான அளவு தெரியவரும்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

கொடநாடு ஆவணங்களுக்கு குறி? - அதிரடித்த விஜிலென்ஸ் ரெய்டு... ஆடிப்போன இளங்கோவன்!

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், தன்னை டார்கெட் செய்து ரெய்டு நடவடிக்கையைக் கையிலெடுப்பார்கள் என்று இளங்கோவன் எதிர்பார்த்துத்தான் இருந்திருக்கிறார். ஆனால், ரெய்டில் இளங்கோவனுடைய சொத்து ஆவணங்களைவிட, எடப்பாடி பழனிசாமி மற்றும் கொடநாடு சம்பந்தமான வேறு ஆவணங்கள் இருக்கின்றனவா என்று குறிவைத்து போலீஸார் அலசியெடுக்க... இளங்கோவனுக்கு வியர்த்துக்கொட்டியிருக்கிறது. தற்போதைய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து எந்நேரத்திலும் இளங்கோவன் மீது கைது நடவடிக்கை பாயலாம். அத்துடன், மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்கு முன்பு இளங்கோவனை வைத்து எடப்பாடி பழனிசாமியை லாக் செய்யும் வேலைகளையும் தி.மு.க கூடிய விரைவில் கையிலெடுக்கப்போகிறது’’ என்கிறார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு