Published:Updated:

யார் சொல்லி ஆண்ட்ராய்டு போனை எரித்தீர்கள்? - தனபால், ரமேஷிடம் கிடுக்கிப்பிடி கேள்வி...

விசாரணை வளையத்துக்குள் வரும் வி.வி.ஐ.பி-கள்...

பிரீமியம் ஸ்டோரி

நான்கரை ஆண்டுகளாக ஒரு இன்ச்கூட நகராத கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக விபத்தில் இறந்த கனகராஜின் உடன்பிறந்த சகோதரர் தனபால், அவரின் சித்தி மகன் ரமேஷ் ஆகியோரைக் கைதுசெய்துள்ளது போலீஸ். கடந்த 26.10.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘மாயமான ஆண்ட்ராய்டு போன்... பட்டும் படாமல் பேசும் உறவுகள்... கனகராஜின் கடைசி நாள்களில் நடந்தது என்ன?’ என்கிற தலைப்பில் கனகராஜின் சகோதரர்கள் பட்டும் படாமலும் முரண்பாடுகளுடன் பேசியதைக் குறிப்பிட்டு, கனகராஜ் வைத்திருந்த ஆண்ட்ராய்டு போன் எங்கே என்றும் கேள்வி எழுப்பியிருந்தோம். இந்தநிலையில்தான் தனபாலையும் ரமேஷையும் கைதுசெய்த போலீஸார், அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுக்கும்போது நீதிமன்றத்தில், “இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்த கனராஜின் செல்போனை தீயிட்டு எரித்து அழித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடர வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். இருவரிடமும் நடத்தப்படவிருக்கும் விசாரணையைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வி.வி.ஐ.பி-கள் சிலரும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்பதே கொடநாடு வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்!

தனபால், ரமேஷ், சஜ்ஜீவன், சந்தோஷ்சாமி
தனபால், ரமேஷ், சஜ்ஜீவன், சந்தோஷ்சாமி

சேலம் மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் அக்டோபர் 21-ம் தேதி கனகராஜ் விபத்து குறித்து மறுவிசாரணை தொடங்கப் பட்டது. கனகராஜ் விபத்து சம்பவத்தில் ஏற்கெனவே சந்தேகப் பட்டியலில் இருந்த தனபால், ரமேஷ் ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டனர் போலீஸார். குறிப்பாக, “கனகராஜின் ஆண்ட்ராய்டு போனை யார் சொல்லி எரித்தீர்கள்?” என போலீஸார் குடைந்தெடுக்க, பல உண்மைகளை தனபாலும் ரமேஷும் கொட்டியுள்ளனர். இதையடுத்தே, கொடநாடு கொள்ளைச் சம்பவம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்தல், வழக்கின் சாட்சியங்களைக் கலைத்தல், கனகராஜின் உடைமைகளை உள்நோக்கத்துடன் பதுக்குதல் ஆகிய காரணங்களுக்காக நான்கு வழக்குகளைப் பதிந்துள்ளது போலீஸ்.

கோவையில் யாரைச் சந்தித்தார் தனபால்?

கொடநாடு சம்பவம் தொடர்பாகவும் சரி... கனகராஜ் விபத்து தொடர்பாகவும் சரி... தனபாலுக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பதே ஆரம்பத்திலிருந்தே போலீஸாரின் சந்தேகமாக இருந்துவந்தது. கனகராஜ் விபத்து விவகாரத்தில் முதன்முதலாக எடப்பாடியை நோக்கிக் கைகாட்டியதும் தனபால்தான். உயிரிழந்த நாள் அன்று கனகராஜ், தனபாலிடம் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் தனபாலும் வெளியில் சென்றிருக்கிறார். அன்றைய தினம் தனபால் கோவைக்குச் சென்றதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தனபால் கோவைக்குச் சென்றது ஏன் என்கிற சந்தேகம் வலுத்த நிலையில்தான், தற்போது அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளரான சஜ்ஜீவன் தரப்பு தனபாலையும் ரமேஷையும் ஜாமீனில் வெளியே கொண்டுவர திரைமறைவில் முயல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சஜ்ஜீவன் வட்டாரத்தினரின் மீதும் போலீஸாரின் கண் பதிந்திருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய விசாரணைக்குழுவின் அதிகாரிகள் சிலர், “முன்னாள் அமைச்சர் மில்லர் மூலமாகக் கட்சிக்குள் வந்த சஜ்ஜீவன், மன்னார்குடித் தரப்புடன் நெருக்கமான பிறகுதான் அவரது பிசினஸ் ராக்கெட் வேகத்தில் எகிறியது. அதேசமயம் ஜெயலலிதா, சசிகலா இருந்தபோதுகூட சஜ்ஜீவனுக்குக் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால், கொடநாடு சம்பவத்துக்குப் பிறகு எடுத்த எடுப்பிலேயே சஜ்ஜீவனுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் அவர்மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. ஏற்கெனவே, கொடநாடு வழக்கில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ்சாமி, ‘கனகராஜின் மரணம் தொடர்பாக கோவையிலிருந்து ஓர் உத்தரவு வந்தது’ என்று சொல்லியிருந்தார். அதனால் அன்றைய தினம் தனபால் சஜ்ஜீவனையும், அப்போதைய அமைச்சர் ஒருவரையும் சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் அவர்களின் பெயர் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக தனபால், ரமேஷின் ஜாமீனுக்கு முயற்சி செய்கிறார்கள்” என்றார்கள். இது குறித்து சஜ்ஜீவனிடம் கேட்டால், “ஃபர்னிச்சர் சம்பந்தமான கேள்வி இருந்தா கேளுங்க... அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது” என்று தொடர்பைத் துண்டித்தார்.

யார் சொல்லி ஆண்ட்ராய்டு போனை எரித்தீர்கள்? - தனபால், ரமேஷிடம் கிடுக்கிப்பிடி கேள்வி...

டபுள் ரோல் தனபால்!

கனகராஜின் ஆண்ட்ராய்டு போனைப் பதுக்கி, தனபால் சிலரிடம் டீல் பேசியதாக விசாரணைக்குழு சந்தேகிக்கிறது. அதேசமயம், கனகராஜ் விபத்துக்கு எடப்பாடிதான் காரணம் என்றும் தனபால் சொல்லிவந்தார். இது பற்றியும் நம்மிடம் பேசிய விசாரணைக்குழு அதிகாரிகள் சிலர், “தனபால் இருமுறை எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். ஆனாலும், தன்மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தனபால், எடப்பாடியை வெளிப்படையாக விமர்சித்துவந்திருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம்... கனகராஜ் விபத்து வழக்கிலும் தனபால்தான் புகார்தாரர். வழக்கை முடிக்க வேண்டும் என்றால் தனபாலின் கையெழுத்து அவசியம். ஒருபக்கம் வழக்கை முடிக்கக் கையெழுத்து போட்டுவிட்டு, மறுபக்கம் ‘அது விபத்தே இல்லை’ என்று தனபால் அடித்துக் கூறியது முரணாக உள்ளது. மேலும், இது தொடர்பாக வேறு யாரையும் வழக்கு தொடரவும் தனபால் அனுமதிக்கவில்லை. கனகராஜின் மனைவி கலைவாணி வழக்கு தொடரும் எண்ணத்தில் இருந்தபோது தனபால், அதைத் தடுத்திருக்கிறார். கனகராஜ் மரணம் தொடர்பாகப் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்., அவரது இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கலைவாணியிடம் கொடுக்க மறுத்துள்ளார். ஒருபக்கம் எடப்பாடியை விமர்சித்தாலும், மறுபக்கம் இந்த விஷயத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் தனபால் தடையாக இருந்திருக்கிறார்” என்றார்கள்.

கனகராஜ் சித்தி மகன் ரமேஷுக்கும், கொடநாடு சம்பவம் மற்றும் கனகராஜ் விபத்து சம்பவத்துக்குப் பிறகே ஆத்தூர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கனகராஜ் விபத்து தொடர்பாக ரமேஷ் கூறிய பல்வேறு மாறுபட்ட தகவல்கள்தான் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிறார்கள் விசாரணைக்குழுவினர். விபத்து நடந்த பிறகு, யதேச்சையாக அந்த வழியில் சென்றபோதுதான் தனக்கு விஷயமே தெரியும் என்றார் ரமேஷ். ஆனால், இறப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு வரை கனகராஜும் ரமேஷும் ஒரே காரில்தான் சென்றுள்ளனர் என்கிறார்கள் விசாரணைக் குழுவினர். அதன் பிறகு கனகராஜ் தனியாக பைக்கில் சென்றபோதுதான் விபத்து நடந்திருக்கிறது. ரமேஷ் மூலம்தான் கனகராஜின் ஆண்ட்ராய்டு போன் தனபாலுக்குச் சென்றுள்ளது என்பதுதான் போலீஸாரின் சந்தேகம். மேலும், கனகராஜும் ரமேஷும் சென்ற இண்டிகா கார் எங்கே என்பதும் ரமேஷை நோக்கி போலீஸார் வீசும் கேள்வி!

இளங்கோவன், சுதாகர்
இளங்கோவன், சுதாகர்

சேலம் இளங்கோவனுக்கு நெருக்கடி!

அக்டோபர் 21-ம் தேதி கனகராஜ் விபத்து தொடர்பாக மறுவிசாரணை தொடங்கியது. மறுநாள் அக்டோபர் 22-ம் தேதியே எடப்பாடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் சேலம் இளங்கோவன் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். அன்றைய தினமே தனபால், ரமேஷிடம் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. தனபால், ரமேஷ் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்து இளங்கோவனிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. போலீஸாரின் அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகளால் எடப்பாடி மற்றும் இளங்கோவன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டுக்குப் பிறகு எடப்பாடி - இளங்கோவன் சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகக் கட்சியினரே கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து விளக்கம் கேட்க இளங்கோவனைத் தொடர்பு கொண்டபோது அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

தனபால், ரமேஷ் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் முக்கிய நபர்கள் சிலரை நோக்கிக் கைகாட்டியிருப்பதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன. இதையடுத்து, வழக்கின் போக்கு குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரிடம் கேட்டோம்... “தனபால், ரமேஷ் இருவரும் அரசியல்ரீதியாக யார் பெயரையும் சொல்லவில்லை. அடுத்தகட்டமாக நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை வெளியே சொல்ல முடியாது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் அத்தனை பேரையும் விசாரிப்போம். இப்போதைக்கு இதை மட்டுமே சொல்ல முடியும்” என்றார்.

அநேகமாக கொடநாடு வழக்கில் தீபாவளிக்கு முன்பே பட்டாசு வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. வழக்கில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் வி.வி.ஐ.பி-களும்கூட கைது செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு