Published:Updated:

கனகராஜின் கடைசி நாள்களில் நடந்தது என்ன?

கொடநாடு எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடநாடு எஸ்டேட்

மாயமான ஆண்ட்ராய்டு போன்... ‘பட்டும் படாமல்’ பேசும் உறவுகள்...

அடர்த்தியான மூடுபனியைப்போல போர்த்தியிருக்கின்றன கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மர்மங்கள். கொடநாடு எஸ்டேட்டைத் தாண்டி நீளும் மர்மங்களைத் தேடிப்பிடித்து விடை காண முயன்றுவருகிறது ஜூ.வி டீம். அந்த வகையில் நம்மிடம் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன. “கனகராஜின் மர்ம மரணத்தை அடுத்து, போலீஸிடம் அவரின் மனைவி கலைவாணி கொடுத்த வாக்குமூலம், வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்று நமக்குத் தகவல் கிடைக்க... அது குறித்த விசாரணையில் இறங்கினோம். காவல்துறையினர், கனகராஜின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று பலரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்களையும் சேர்த்து கட்டுரையாக்கியிருக்கிறோம்...

கடந்த 2008 முதல் நான்கு ஆண்டுகள் போயஸ் கார்டனில் டிரைவராக இருந்தார் கனகராஜ். இதனால், அ.தி.மு.க வட்டாரத்திலும் கனகராஜுக்கு செல்வாக்கு இருந்திருக்கிறது. ஒருமுறை சேலத்தில் குடிபோதையில் கனகராஜ் தகராறில் ஈடுபட... அது கார்டன் வரை சென்று அவரது வேலை பறிபோனது. கார்டனிலிருந்து வெளியேறினாலும், அ.தி.மு.க நெட்வொர்க்கை கனகராஜ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அதன் மூலம் தொழிலதிபர் ஒருவருக்கும், கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்கும் ‘ஆக்டிங்’ டிரைவராகப் பணியாற்றினார்.

கனகராஜ்
கனகராஜ்

கனகராஜ் போயஸ் கார்டனில் இருந்தபோது, தி.நகரிலுள்ள ஒரு துணிக்கடையில் கலைவாணி பணியாற்றிவந்தார். ஜெயலலிதாவுக்குத் தேவையான புடவை உள்ளிட்ட பொருள்கள் அந்தக் கடையிலிருந்துதான் செல்லும். கனகராஜ்தான் அந்தக் கடைக்கு அடிக்கடி சென்று பொருள்களை வாங்கிவருவார். அப்போது கலைவாணியிடம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இரு தரப்பு குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

“என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!” - கடும் பதற்றத்தில் கனகராஜ்...

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்புதான் சிறுநீரகக்கல் பிரச்னை காரணமாக கனகராஜுக்கு சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. 22.4.2017 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கனகராஜ், சித்த மருத்துவ சிகிச்சைக்காக சேலம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். ஆனால், கனகராஜ் சென்றதோ கொடநாடு. அங்கு சம்பவம் முடிந்த பிறகே சேலம் சென்றிருக்கிறார். அதன் பிறகு 27-ம் தேதி சென்னைக்குச் சென்ற கனகராஜ் மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு காரில் மீண்டும் சேலத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, வழக்கத்துக்கு மாறாக கடும் பதற்றத்தில் இருந்த கனகராஜிடம் குடும்பத்தினர் அது பற்றி விசாரித்தபோது, ‘என்கிட்ட எதுவும் கேட்காதீங்க’ என்று பதிலளித்துள்ளார். மறுநாள் 28-ம் தேதி காலை வெளியே கிளம்பியவர் எங்கு செல்கிறார், யாரைச் சந்திக்கச் செல்கிறார் என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இரவு 8:30 மணியளவில் ‘கனகராஜ் உயிரிழந்துவிட்டார்’ என்ற தகவல் உறவினர் ரமேஷ் மூலம் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு வந்திருக்கிறது.

கனகராஜ் உயிரிழந்த பிறகு கலைவாணிக்கும், கனகராஜின் குடும்பத்தினருக்கும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவர் உயிரிழந்த 10 நாள்களுக்குள் கலைவாணியின் தாலி செயினைப் பறித்துவிட்டதாக, கனகராஜின் அண்ணன்கள் தனபால், பழனிவேல் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் கலைவாணி புகார் அளித்தார். அதேபோல நிலம் தொடர்பான விஷயத்திலும் கலைவாணிக்கும் கனகராஜின் சகோதரர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘‘கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்புவரை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், இப்போது அவருடன் சம்பிரதாயத்துக்குப் பழகியதுபோல ‘பட்டும் படாமலும்’ பதில் சொல்வதிலேயே ஏராளமான முரண்கள் இருக்கின்றன. எனவே, கனகராஜின் குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்’’ என்கிறார்கள் இந்த வழக்கை உற்று நோக்குபவர்கள்.

ரமேஷ்
ரமேஷ்

ஆண்ட்ராய்டு போன் எங்கே?

இரண்டு போன்கள், மூன்று சிம் கார்டுகளைப் பயன்படுத்திவந்தார் கனகராஜ். அதில் ஒன்று ஆண்ட்ராய்டு போன் என்று உறுதிபடச் சொல்கிறார்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள். மற்றொன்று, சாதாரண பட்டன் போன். ஆனால், விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரேயொரு பட்டன் போன் மட்டுமே கிடைத்ததாகவும், அதை கனகராஜின் குடும்பத்தினர் போலீஸாரிடம் கொடுத்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். கொடநாடு சம்பவத்தின்போது கனகராஜ் பட்டன் போனை மட்டுமே எடுத்துச் சென்றிருக்கிறார். சம்பவத்துக்குப் பிறகு அவர் மீண்டும் சென்னையிலிருந்து சேலம் சென்றபோது அவரிடம் ஸ்மார்ட்போன் இருந்திருக்கிறது. உயிரிழந்த தினம் வீட்டிலிருந்து கிளம்பியபோதுகூட கனகராஜ் கையில் அந்த போன் இருந்திருக்கிறது. ஆனால், விபத்துக்குப் பிறகு அந்த போன் போலீஸாரிடமும் சிக்கவில்லை. கனகராஜின் மனைவியிடமும் செல்லவில்லை.

கொடநாடு சம்பவத்தில் ஈடுபட சயான் தயங்கியபோது அவருக்கு நம்பிக்கையூட்ட அந்த போனிலிருந்துதான் சேலம் மாவட்டத்து வி.வி.ஐ.பி ஒருவருடன், தான் எடுத்துக்கொண்ட போட்டோவை கனகராஜ் அனுப்பி வைத்துள்ளார். ‘நான் விபத்தில் சிக்கியபோது அந்த போட்டோ இருந்த ஐபோனை போலீஸார் வாங்கிச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித் தரவில்லை’ என்று ஏற்கெனவே சயான் புகார் கூறியிருந்த நிலையில், போட்டோ அனுப்பப்பட்ட கனகராஜின் ஆண்ட்ராய்டு போனும் எங்கே சென்றது என்பது தெரியவில்லை. ஆரம்பத்தில் அந்த போன் பற்றிய விவரங்கள் கனகராஜின் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்ததாகவும், அது குறித்து கலைவாணி கேட்டபோது, ‘‘அவனே போயிட்டான்... போன் எங்கே போனால் உனக்கென்ன?’’ என்று கடுமை காட்டியதாகவும் சொல்கிறார்கள். இது பற்றி கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கேட்டால், ‘‘கனகராஜுக்கும் எனக்கும் பெரிசா பேச்சுவார்த்தையே கிடையாது. அவரோட ஆண்ட்ராய்டு போன் பத்தியும் எனக்குத் தெரியாது’’ என்றார்.

கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டாலும், கனகராஜுக்கு ஜெயலலிதா மீதான பாசம் துளியும் குறையவில்லை என்கிறார்கள். ‘‘ஜெயலலிதா அம்மாவுக்கு அப்புறம்தான் என்னோட சொந்த அம்மா...’’ என்று அடிக்கடி அவரின் மனைவியிடம் கூறியிருக்கிறார் கனகராஜ். ஜெயலலிதா உயிரிழந்தபோது மிகவும் விரக்தியடைந்தவர், ‘‘நானும் சாகப்போகிறேன்’’ என்று கலைவாணியிடம் அழுது புலம்பியிருக்கிறார். ‘‘ஜெயலலிதா மீது இவ்வளவு விசுவாசமாக இருந்தவர், நிச்சயமாக அவரது கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். பிறரின் தூண்டுதல் இல்லாமல் கனகராஜ் இதைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை. சயானை எப்படி கனகராஜ் இந்தத் திட்டத்துக்கு உள்ளே கொண்டுவந்தாரோ, அப்படி கனகராஜுக்கு மேலே ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று கலைவாணி போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

கனகராஜின் கடைசி நாள்களில் நடந்தது என்ன?
தனபால்
தனபால்

கடைசி நாள் மர்மம்!

விபத்து நடந்த அன்று ஆத்தூர், சக்தி நகர் பகுதியிலுள்ள தன் உறவினர் ரமேஷின் தங்கை குழந்தையைப் பார்க்க கனகராஜ் சென்றதாக அவரின் அண்ணன் குடும்பத்தினர் உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனால், காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அது பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை என்று கலைவாணி தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போலீஸாரிடம் ரமேஷ், ‘‘காலையிலிருந்து கனகராஜ் இங்க வரலை. என்னைக் கூப்பிடவும் இல்லை. சாயங்காலம்தான் கூப்பிட்டாரு. அப்போ நான் ‘வீட்டுல இல்லை’னு சொன்னதும் கனகராஜ் போனை கட் பண்ணிட்டாரு’’ என்று கூறியுள்ளார். அதே நேரம், இரவு 8 மணியளவில் கலைவாணியை அழைத்த கனகராஜ், “நான் ரமேஷ் கூடதான் இருக்கேன். நைட் வர மாட்டேன். காலையில வந்துடுவேன். நாளைக்கு சென்னை கிளம்பறோம்’’ என்று கூறியுள்ளார். அந்த போனை கட் செய்த சில நிமிடங்களில் கனகராஜ் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு ரமேஷ், ‘‘கனகராஜை நான் பார்க்கவே இல்லை. விபத்தில் சிக்கி அடிபட்டுக் கிடந்தபோதுதான் கனகராஜை நான் பார்த்தேன்’’ என்று கூறியுள்ளார். இப்படி கனகராஜின் கடைசி நாள் தொடர்பாக கனகராஜின் உறவினர்கள் இடையே முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பொருத்திவைத்து கேள்விகளுக்கு விடை தேடினால், வழக்கு நிச்சயமாக அடுத்த கட்டத்துக்கு நகரும்.

கனகராஜின் மரணத்துடன் சில மர்மங்களும் சேர்ந்தே மறைந்திருக்கின்றன. அவர் உயிரிழந்த தினம் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார், அவரது ஆண்ட்ராய்டு போன் எங்கே என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மர்மங்களும் விலகும்!