Published:Updated:

அறுவைசிகிச்சைக்கு முன் காணாமல்போன விரல்! - கிரிக்கெட்டில் மூழ்கிய ஊழியர்களால் இன்ஜினீயருக்கு நேர்ந்த துயரம்

'விரல் தொலைந்துபோனது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும்' என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சை

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர், நிலோட்பால் சக்ரபோர்தி. கெமிக்கல் இன்ஜினீயரான இவர், நேற்று முன்தினம் தன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் சக்ரபோர்தி இருசக்கர வாகனத்தில் சிக்கியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, அவரின் இடதுகை மோதிரவிரல் பாதியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னுடன் வந்த நண்பர் ஒருவரின் உதவியுடன், சக்ரபோர்த்தி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவருடன், துண்டிக்கப்பட்ட விரலும் ஒரு தூய்மையான பிளாஸ்டிக் பையில்வைத்துக் கட்டி, கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சக்ரபோர்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், துண்டித்த விரலை அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் ஒட்டவைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், சக்ரபோர்தியின் மனைவி சயானிகா, பிளாஸ்டிக் பையில் உள்ள சிறிய விரலை மருத்துவமனை ஊழியர்களிடம் அளித்து, அறுவைசிகிச்சை வரை பாதுகாக்கும்படி தெரிவித்துள்ளார்.

விரல்
விரல்

மறுநாள் காலை 10 மணிக்கு சக்ரபோதி அறுவைசிகிச்சை அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவர் உள்ளே சென்றதும் மருத்துவர்கள் அவரின் மீதி விரலைத் தேடியுள்ளனர். மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தும் பதில் வரவில்லை. ஊழியர்கள் எங்கு தேடியும் விரல் கிடைக்கவில்லை. பின்னர், பிற்பகல் 12:30 மணிக்கு சக்ரபோர்தியின் மீதி விரல் தொலைந்துவிட்டதாகவும், அது கிடைத்தாலும் ஒட்டவைக்க முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ள சயானிகா, “ நான், என் கணவரின் விரலை ஊழியர்களிடம் அளிக்கும்போது, அவர்கள் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது நான் கேட்ட கேள்விகளுக்குக்கூட அவர்கள் சரியாகப் பதில் கூறவில்லை. கிரிக்கெட் பார்த்த கவனத்தில் அவர்கள் என் கணவர் விரலைத் தொலைத்துள்ளனர். ஊழியர்களைக் காப்பாற்ற, மருத்துவர்கள் என் கணவர் விரலை சரிசெய்யமுடியாது எனக் கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்
மருத்துவர்

“ துண்டிக்கப்பட்ட விரலை நான் பார்த்தேன். அது சீராக வெட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக, நிறைய ரத்த நாளங்களும் தசை நாண்களும் வெளியிலிருந்தன. விரலை ஒட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் அது 10 சதவிகிதம் மட்டுமே பலன் தரும் என நோயாளியின் குடும்பத்தாரிடம் முன்னரே கூறினேன். ஒருவேளை அறுவைசிகிச்சை அறைக்கு விரல் வந்துபோது நாங்கள் ஒட்டமுடியவில்லை எனக் கூறியிருந்தால், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். சக்ரபோதியின் விரல் ஆணியில் சிக்கி வெட்டப்பட்டுள்ளது. அவர் கையில் உள்ள மீதி விரல் இன்னும் துடிப்புடன் உள்ளது. அது தொடர்ந்து செயல்படும்” என மருத்துவர் கோலாஷ் கூறியுள்ளார்.