Published:Updated:

கொள்ளிடத்தில் கவிழ்ந்த பரிசல்; அடித்துச்செல்லப்பட்ட 32 பேர்!- இரவில் நடந்த திக் திக் நிமிடங்கள்

Kollidam River
Kollidam River

அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றைக் கடக்க முயன்றபோது, சுழலில் சிக்கி பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பரிசலில் 35 பேர் பயணித்ததில் 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல்போன 3 பேரை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Vikatan

அரியலூர் மாவட்டம், மேலராமநல்லூர் கீழ ராமநல்லூர் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆறு செல்கிறது. கிராமத்தின் வடபகுதியில் மேம்பாலம் இருந்தபோதிலும், இக்கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் தஞ்சை மாவட்டத்தையே சார்ந்துள்ளனர். இதனால், கிராமத்தின் தென்பகுதியில் செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான் தஞ்சைப் பகுதிக்குள் செல்ல வேண்டும். மேலும், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்துவருகின்றனர். கூலித்தொழிலாளர்களும் அங்குதான் வேலைக்குச் சென்று வருகின்றனர்.

Kollidam River
Kollidam River

தஞ்சாவூர் செல்வதற்கு மேம்பால வசதி இல்லாததால், கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது, மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் பரிசல் மூலமாக தஞ்சைக்குச் சென்றுவருகின்றனர். இந்நிலையில், மேலராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 35 பேர் நேற்று மாலை கும்பகோணம் செல்வதற்காக ஒரு பரிசலில் ஏறி பயணம் செய்தனர். பரிசலை மனோகரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

மேலராமநல்லூரைத் தாண்டிபோது, நீரில் ஏற்பட்ட சுழலில் பரிசல் சிக்கியது. பரிசலை மனோகரன் திசைமாற்ற முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால் பரிசல் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. அதில் பயணம்செய்த 35 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள், தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்குப் போராடினர். அவர்களில் 20 பேர் நீச்சல் அடித்து ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டுக்கு வந்துசேர்ந்தனர். ஆனால், மீதமுள்ள 10 பேரை காணாததால், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Kollidam River
Kollidam River
Vikatan

சிறிது தூரத்தில் அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டு, அவர்களை மீட்கப் போராடினர். அவர்களில் 32 பேர் கரைசேர்ந்தனர். பின்னர், அங்கிருந்து தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால், கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் கலெக்டர் வினய், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 32 பேரை படகுகள் மூலம் மீட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராணி, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி, பட்டுக்குடியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் ஆகியோரைக் காணவில்லை எனத் தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள்
காணாமல் போனவர்கள்

இதுகுறித்து படகில் பயணம் செய்த சிலரிடம் பேசினோம். ”மேல ராம நல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு இரவில் திரும்பினோம். அப்போதுதான் இச்சம்பவம் நடந்தது. ஒரு படகில் 35 பேர் பயணம் செய்தோம். படகு பாரம் தாங்க முடியாமல் ஆடத்தொடங்கியது. எல்லோரும் பயத்தில் கூச்சலிட்டார்கள். அதிலேயே படகு பாதி ஆடத்தொடங்கியது.

நீரில் சுழல் ஏற்பட்டதால் அதில் சிக்கி பரிசல் கவிழ்ந்தது. இதில் 35 பேரும் தண்ணீரில் தத்தளித்தோம். அதோடு தண்ணீர் அதிவேகமாக வந்தால் யாராலும் எதிர் நீச்சல் அடிக்கமுடியவில்லை. நீச்சல் தெரிந்த ஒரு சிலர் கரையின் ஓரத்தில் உள்ள செடி, மரத்தையும் பிடித்து ஏறி தப்பித்து விட்டார்கள். தண்ணீரின் வேகம் தாங்க முடியாமல் 15 பேரையும் ஏழு கிலோமீட்டர் வரையிலும் இழுத்துச் சென்றது.

Kollidam River
Kollidam River

அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸாரின் துரித நடவடிக்கையால் கபிஸ்தலம் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டிக்கொண்டு ஆற்றின் நடுவில் வந்து எங்களை மீட்டார்கள். ஆனாலும், ராணி, பழனிசாமி, சுயம்புலிங்கம் ஆகியோரைக் காணவில்லை. நாங்களும்கூட பிழைப்போம் என்று நினைக்கவில்லை. எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த உதவியை மறக்க மாட்டோம். எங்களோடு வந்த அந்த மூன்று பேரின் நிலைமைதான் என்னவென்று தெரியவில்லை" என்று தழுதழுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு