Published:Updated:

கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் மக்கள்... திணறும் காவல் துறை! #SpotVisit

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கோயம்பேடு சந்தை, இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி உள்ளது என்பதை அறிய ஸ்பாட் விசிட் அடித்தோம்.

கொரோனா நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்க நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களான காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகளுக்கும் விற்பனைக்கான கால நேரம், சமூக விலகல் எனக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, விற்பனைக்கான கால அளவு மதியம் 2 மணி வரை இருந்துவந்தது. தற்போது, அரசு அந்த கால அளவை மதியம் 1 மணி வரை குறைத்துள்ளது. இந்த நிலையில், பொது மக்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தங்களுக்குத் தேவையான பொருள்களை இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கிச்செல்கின்றனர்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

அந்தந்தப் பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில்கூட சமூக விலகல் முறையாகக் கடைபிடிக்கப்பட்டு விற்பனை நடந்துவருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும் போது, கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் எப்படி இருக்கும், அங்கு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறதா, விற்பனை எப்படி நடக்கிறது போன்றவற்றை அறிந்து கொள்ள கோயம்பேடு மார்கெட்டுக்கு ஒரு ஸ்பாட் விசிட் அடித்தோம்.

கோயம்பேடு காய்கறிச் சந்தை நாள் முழுவதும் திறந்திருந்தாலும் சந்தையின் உச்ச வியாபார நேரம் அதிகாலை 3 மணி தொடங்கி காலை 10 மணி வரைதான். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களை மொத்தமாக வாங்கிச்செல்ல வருவார்கள். இரவு பகலாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி, பூ மற்றும் பழங்கள் லாரிகளில் வந்த வண்ணமாகவே இருக்கும்.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு சந்தை, நாங்கள் சென்றிருந்தபோதும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் சென்றது அதிகாலை 4 மணி என்பதால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கூட்டம் கூட்டமாய் சந்தையை ஆக்கிரமித்திருந்தனர்.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள் மற்றும் பூ விற்பனைக்கென தனித் தனியாக மூன்று விற்பனை வளாகங்கள் உள்ளன. மூன்று நுழைவாயில்களிலும் காவல் துறை, நோய் தடுப்புப் பிரிவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சந்தைக்கு வருவோரின் வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, வருவோரின் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கின்றனர். அதேபோல், சந்தைக்கு முகக் கவசங்கள் அணியாமல் வருவோரைத் தடுத்துநிறுத்தி எச்சரித்து, அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

சந்தையில் கூட்டத்தைத் தவிர்க்க, சந்தையைச் சுற்றிலும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு மும்முரமாக காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழையும்போது முகக் கவசம் அணிந்திருந்த பலரும் காய்கறிகளை வாங்கும்போது முகக் கவசங்களைக் கழற்றிவிட்டு அஜாக்கிரதையாக உலவிக் கொண்டிருந்தனர். அதேபோல், சந்தை வியாபாரிகளும் பெரும்பாலானோர் முகக் கவசங்கள் அணியாமல்தான் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். சமூக விலகலைக் கடைபிடிக்காத கடைகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு கோயம்பேடு சந்தையின் நிலை தெரிந்தும், அவர்களால் அங்கு சமூக விலகலை சாத்தியப்படுத்த முடியவில்லை.

சந்தையின் விற்பனை நிலவரம் குறித்து அறிந்துகொள்ள சந்தையில் வியாபாரி ஒருவரிடம் பேசினோம், ``சந்தைக்கு காய்கறி வரத்து எந்தத் தடையும் இல்லாம வந்துட்டுதான் இருக்கு, அதனால காய்கறிகளோட விலையும் குறைஞ்சிருக்கு. இங்க எங்களுக்கு வியாபாரமே காலையில 4 மணியில இருந்து 10 மணி வரைக்கும்தான். ஆனா இப்போ, 1 மணி வரைக்கும் நல்லாவே நடக்குது. பொதுவா, வியாபாரிங்கதான் அதிக அளவில் வந்து வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, இந்த ஊரடங்கு அமல்படுத்தினதுல இருந்து மக்கள் நேரடியா இங்கேயே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க. ஆரம்பத்துல அதிகாரிங்க வட்டம் போட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கச் சொன்னாங்க, ஆனா நெருக்கமான கட்டமைப்பு கொண்ட இந்தச் சந்தையில சமூக விலகல் சாத்தியப்படல. மக்கள் கூட்டம் கூட்டமா வந்து குவியுறாங்க. வழக்கத்தை விடவும் இப்போ விற்பனை அதிகமாதான் நடக்குது" என்றார்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

காய்கறிச் சந்தையைத் தொடர்ந்து, அடுத்தபடியாக பழச் சந்தைக்கு நகர்ந்தோம். காய்கறிச் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டத்தில் கால் பங்கு கூட்டம்கூட இல்லாமல் பழச் சந்தை சற்றே வெறிச்சோடி காணப்பட்டது.

பழ வியாபாரிகள் தங்கள் பழங்களை விற்பனைக்கு அடுக்கி வைத்துவிட்டு வருவோர் போவோரை பார்த்துக்கொண்டிருந்தனர். பழங்களின் தேவை சாமான்ய மக்களுக்கு மிகவும் குறைவுதான். உணவகங்கள் மற்றும் பழச்சாறு கடைகளுக்குதான் பழங்களின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பழங்கள் விற்பனையாகாமல் தேங்கி, அழுகும் நிலையில் இருந்தன. விற்பனை இல்லாததால் பழ விற்பனை வளாகத்தில் பல கடைகள் மூடப்பட்டு, அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது.

கடைசியாக பூச்சந்தைக்குச் சென்றோம் அங்கு நிலைமை இன்னும் மோசம் என்றே சொல்ல வேண்டும். சந்தைக்குப் போகும் வழியிலேயே முந்தைய நாள் பூக்கள் வாடிய நிலையில் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.

விற்பனை வளாகத்தில் பூ வியாபாரிகள் தங்கள் பூக்களை விற்பனைக்குக் குவித்துவிட்டு சோகத்துடன் அமர்ந்திருந்தனர். சந்தையில் ஒரு சிலர் மட்டுமே பூ வாங்கிக்கொண்டிருந்தனர், அங்கு வியாபாரிகளிடம் பேசியதில், ``காய்கறியைப் போன்று பூ அத்தியாவசியம் இல்லை. தற்போது அனைத்துக் கோயில்களும் பூக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் இல்லாமல் போய் விட்டதாகத் தெரிவித்தனர்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

அதிகாலை 3 மணிக்கே இயங்கத் தொடங்கும் கோயம்பேடு காய்கறிச்சந்தை தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வியாபாரிகளை எதிர்கொள்கிறது. ஆனால் தற்போது, இந்த நோய் தொற்று பாதிப்பு நேரத்தில் இவ்வளவு மக்கள் அங்கு கூடுவதால், மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்னதான் அதிக அளவில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

அடுத்த கட்டுரைக்கு