Published:Updated:

''பேருந்துக்குள் ஏதோ பிரச்னை!''- தக்க சமயத்தில் உதவிய போலீஸ், காப்பாற்றப்பட்ட பயணி

எம்.குமரேசன்

பேருந்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பைலட் வாகனத்தை பேருந்துக்கு முன்னால் ஓட்டிச்சென்றனர்.

பெண் பயணிக்கு உதவிய போலீஸ்
பெண் பயணிக்கு உதவிய போலீஸ்

அரசுப் பேருந்து கண்டக்டர்கள் என்றாலே பயணிகளிடத்தில் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். டிக்கெட் எடுத்துவிட்டு மீதி சில்லறையைக் கேட்டால்கூட, 'எங்கே திட்டிவிடுவார்களோ ' என்கிற ஒருவித தயக்கம் பயணிகளிடத்தில் இருக்கும். இப்போது காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. டிரைவர், கண்டக்டர்கள் மத்தியில் மிகுந்த மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் கொடுக்கும் கண்டக்டர்கள், பள்ளிக் குழந்தைகளை அக்கறையுடன் ஏற்றிச் செல்பவர்கள், முதியவர்களைக் கனிவுடன் நடத்தும் கண்டக்டர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். கேரளாவில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று கண்டக்டர்கள், டிரைவர்கள், போலீஸார் மீது மிகுந்த மரியாதையை உருவாக்கியுள்ளது.

பேருந்துக்கு முன் செல்லும் பைலட் வாகனம்
பேருந்துக்கு முன் செல்லும் பைலட் வாகனம்

கேரள அரசு பஸ் ஒன்று, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. பலராமபுரம் என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருக்கும்போது, பெண் பயணி ஒருவர் நெஞ்சு வலியால் துடித்தார். மூச்சுவிட முடியாமல் அந்தப் பயணி துடிக்க, அருகிலிருந்த பயணி, கண்டக்டர் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, பேருந்தை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்தனர். டிரைவர் ராஜேஷ், அதிவேகத்தில் பஸ்ஸை மருத்துவமனை நோக்கி ஓட்டிச் சென்றார். ஆம்புலன்ஸ் போல தொடர்ந்து, ஹார்ன் அடித்தவாரே பேருந்தை அவர் ஓட்டிச்சென்றார். காரக்கமண்டபம் என்ற இடத்தில் போலீஸ் செக் போஸ்ட்டை பஸ் கடந்தபோது, பேருந்துக்குள் ஏதோ பிரச்னை என்பதை அங்கிருந்த போலீஸார் உணர்ந்துகொண்டனர்.

போலீஸ் உதவியால் காப்பாற்றப்பட்ட பெண் பயணி
போலீஸ் உதவியால் காப்பாற்றப்பட்ட பெண் பயணி

உடனடியாக பேருந்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பைலட் வாகனத்தை பேருந்துக்கு முன்னால் ஓட்டிச்சென்றனர். இதனால், பேருந்து வேகமாக செல்ல முடிந்தது. 4 கிலோ மீட்டர் சென்ற பிறகு, தனியார் மருத்துவமனை ஒன்று தென்பட்டது. பேருந்து மருத்துவமனையை சென்றடைந்ததும், ஸ்ட்ரெச்சருக்கு கூட காத்திராமல், போலீஸார் ஒருவரே அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குள் தூக்கிச்சென்றார்.

தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், நெஞ்சுவலியால் துடித்த பெண் பயணி உயிர் பிழைத்து கொண்டார். இதனால், சக பயணிகள் பெருமூச்சுவிட்டனர். பிரச்னையை புரிந்து கொண்டு பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பேருந்து டிரைவர், கண்டக்டருக்கு உதவியாக இருந்தனர். இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாக எடுத்து கேரள போலீஸ் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இணையத்தில் வீடியோ பரவி வருகிறது. கண்டக்டர், டிரைவர், போலீஸாருக்கு பல முனைகளில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.