Published:Updated:

அணுக்கழிவா, எரிபொருளா? - மீண்டும் தலைதூக்கும் கூடங்குளம் சர்ச்சை!

கூடங்குளம்
பிரீமியம் ஸ்டோரி
கூடங்குளம்

அணு உலையிலிருந்து வெளியில் வருவது கழிவல்ல; அது ஸ்பென்ட் ஃபியூவல் என்று சொல்கிறார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்

அணுக்கழிவா, எரிபொருளா? - மீண்டும் தலைதூக்கும் கூடங்குளம் சர்ச்சை!

அணு உலையிலிருந்து வெளியில் வருவது கழிவல்ல; அது ஸ்பென்ட் ஃபியூவல் என்று சொல்கிறார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்

Published:Updated:
கூடங்குளம்
பிரீமியம் ஸ்டோரி
கூடங்குளம்

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமானப் பணியுடன் சேர்த்து, அந்த உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளைச் சேமித்துவைப்பதற்கான தற்காலிக சேமிப்புக்கிடங்கை (Away from Reactor) கட்டமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது தேசிய அணுமின் சக்தி கழகம். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை 2021 டிசம்பர் மாதம் வெளியிட்ட தேசிய அணுமின் சக்தி கழகம், பிப்ரவரி 24-ம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை இணையத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான், “இந்தியாவில் அணுக்கழிவுகளைச் சேமித்துவைக்க ‘ஆழ்நிலக் கருவூலம்’ அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் தற்காலிகமாகச் சேமித்துவைக்கப் பயன்படும், சேமிப்புக்கிடங்கைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்’’ என்று தமிழக அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஆனால், “கட்சிகளும் அமைப்புகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றன” என்கிறார்கள் அணு உலை ஆதரவாளர்கள்.

மேற்கண்ட விவகாரத்தின் உண்மைநிலையை அறிய, இரு தரப்பினரிடமும் பேசினோம். நம்மிடம் பேசிய பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு முன்னாள் தலைவர் பாலு, ``கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும்போது, ‘அணுக்கழிவுகள் கூடங்குளத்தில் வைக்கப்படாது’ என்று மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்படவில்லை. ஏனெனில், அங்கு அமையவிருப்பது அணுக்கழிவு மையமே அல்ல... அது அணுக்கழிவும் அல்ல. அதற்குப் பெயர் ஸ்பென்ட் ஃபியூவல் (Spent Fuel). அதிலிருந்து புளூட்டோனியத்தைப் பிரித்து எடுத்து, மறுசுழற்சி செய்து அணு உலைகளுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். பல நாடுகளில் அப்படிப் பயன்படுத்தியும் வருகிறார்கள். யுரேனியம் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் ஸ்பென்ட் ஃபியூவலை வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். ஆனால், யுரேனியம் தட்டுப்பாடு நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் அப்படி விட முடியாது. இந்தியாவில் நிலக்கரி, எண்ணெய் ஆகிய வளங்கள் குறைவு. சோலார் மின் உற்பத்தியும் பெரிதாகக் கைகொடுக்காது. நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு அணு உலைதான். அதுவும் மின்சாரத் தேவை அதிகமுள்ள தமிழகத்தில், இந்த உலைகள் மிகவும் அவசியம்.

அணுக்கழிவா, எரிபொருளா? - மீண்டும் தலைதூக்கும் கூடங்குளம் சர்ச்சை!

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது உலைகளின் கட்டுமானப் பணியுடன் சேர்த்து, ஸ்பென்ட் ஃபியூவல் சேமித்து வைப்பதற்கான சேமிப்புக்கிடங்கை கட்டமைக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நிரந்தரமாக பத்திரப்படுத்தும் ஆழ்நிலக் கருவூலம் அவசியம்தான் என்றாலும், அதை உடனடியாக அமைக்கவேண்டிய அவசரம் இல்லை. சிலர் அதை ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சொல்லப்போனால், அங்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதுதான் நமக்கு லாபம். அதைச் சேமித்துவைக்க பல நாடுகள் திணறுவதற்கு இடப்பற்றாக்குறைதான் காரணம். ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை. இதனால் மக்களுக்கும் ஆபத்து இல்லை. இதை எதிர்ப்பவர்கள், விஞ்ஞானிகளுடன் உரையாட முன்வர வேண்டும். மாறாக, மக்களை பயமுறுத்தக் கூடாது’’ என்றார்.

இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுக்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ``அணு உலையிலிருந்து வெளியில் வருவது கழிவல்ல; அது ஸ்பென்ட் ஃபியூவல் என்று சொல்கிறார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், ப்ராசஸ் முடிந்து வெளியில் வருவது கழிவுதான். தவிர, கூடங்குளம் மாதிரியான மென்னீர் அணு உலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. அந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்துதான் பெற வேண்டும். அப்படிப் பெறுவதற்கு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும், அணுகுண்டு பரிசோதனைத் தடை ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட வேண்டும். அவற்றில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியா கையெழுத்து போடவில்லை. ஒருவேளை, அந்தத் தொழில்நுட்பம் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டாலும், மறுசுழற்சி செய்து என்ன செய்யப்போகிறார்கள்? இந்தியாவின் அணுசக்தித் திட்டமானது மக்கள் பயன்பாட்டுக்கு, ராணுவப் பயன்பாட்டுக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கூடங்குளத்திலுள்ள கழிவுகளை கல்பாக்கத்துக்கு எடுத்து வந்து பயன்படுத்த முடியாது. கல்பாக்கத்தில் கட்டிக்கொண்டிருக்கும் ஈணுலைகளில் பயன்படுத்தலாம். ஆனால், 2004-லிருந்து இப்போதுவரை அதற்கான ப்ராசஸ் இன்னும் முடியவில்லை.

பாலு, சுந்தர்ராஜன்
பாலு, சுந்தர்ராஜன்

அதனால் இந்தக் கழிவுகளை பத்திரமாகச் சேமித்துவைப்பதுதான் ஒரே வழி. ஆனால், ஆழ்நிலக் கருவூலம் அமைப்பதற்கான இடமே இந்தியாவில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அதற்குள், தற்காலிக சேமிப்புக்கிடங்கு அமைப்பதற்கான பணிகளில் ஈடுபடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். இதனால், கூடங்குளமே நிரந்தர ஆழ்நிலக் கருவூலமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. 2013-ல் உச்ச நீதிமன்றமே, ‘ஐந்தாண்டுகளுக்குள் அணுக்கழிவுகளை பத்திரமாக வைக்கும் ஆழ்நிலக் கருவூலம் ஏற்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டும் இன்னும் வேலைகள் தொடங்கப்படவில்லை. உலகின் பல நாடுகள் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றன. அந்தவகையில், கூடங்குளம் மக்களின் அச்சம் நியாயமானது. அதுவும் கடலுக்கு மிக அருகிலுள்ள இடத்தில், அதை அமைப்பது மிகவும் ஆபத்தானது. இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. இது அரசியல் பிரச்னையும் அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்னை” என்றார் அழுத்தமாக.

மக்களின் பாதுகாப்பு தொடர்புடைய இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். மக்களின் அச்சத்தைப் போக்கவேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism