Published:Updated:

மலேசியா: ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்? - குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் பழங்குடி இளைஞர்

ஓவியம்
ஓவியம்

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

கோலாலம்பூர்: `ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்’ என்ற இந்தத் தலைப்பு எதைப் பற்றிப் பேசவருகிறது என்று வாசகர்களால் அனுமானிக்க முடிந்தால், மனிதாபிமானம் என்ற ஈரப்பசை அவர்களிடத்தில் இருக்கிறது என்று என் மனம் நம்புகிறது. மலேசியாவின் 18 ஆதிகுடிகளில் தெமுவான் இனக்குழுவைச் சேர்ந்த ஓவியரான ஷாக் கோயோக்கை சந்தித்துப் பேசியதிலிருந்து என் மனம் இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை தலைநகரில் மெல்ல திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், உரிமையும் உடைமையும் நசுக்கப்படும் பூர்வகுடி மக்களுக்கான குரலாக தன் ஓவியங்கள் வழி பேசிக்கொண்டிருக்கிறார் ஷாக் கோயோக்.

Pandanus பாயில் கோயோக் வரைந்த ஓவியம்
Pandanus பாயில் கோயோக் வரைந்த ஓவியம்

உலகம் முழுக்கவே ஆதிகுடிகளின் காணி நிலம், கார்ப்பரேட் முதலாளிகளின் கோரப்பசிக்கு அவர்களின் தங்கத்தட்டுகளில் உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. மலேசியாவும் இதில் விதிவிலக்கல்ல. மலேசிய ஆதிகுடி மக்களின் காணி நிலங்களும் பறிபோகும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட எங்கோ ஒரு பூர்வகுடியின் வனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இவ்விவகாரங்களை நேரடியாகப் பேசினாலும், சட்ட ரீதியாக கொண்டு சென்றாலும்கூட அவை ஓர் அனுபவமாக மாறுகிறதே தவிர பூர்வகுடிகளின் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் வலுசேர்ப்பதாக இல்லை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம், கடந்த மாதம் `செமெலாய்’ இன பூர்வகுடிகளின் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பர்ய வனத்தைச் சட்டபூர்வமாக வென்றெடுத்து அதை செம்பனைக் காடாக ஒரு தனியார் நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது.

பாரம்பர்யம், வரலாறு, பூர்வீகம் எனப் பூர்வகுடிகள் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கும் அவலங்களையும், சுயத்தை இழத்தலையும் சொல்லில் கொண்டுவருவது மிகச் சிரமமானது. அந்த வலியை ஓவியத்தில் என்றென்றைக்குமாக வரைந்துவைத்திருக்கிறார் ஷாக் கோயோக்.

2008-ம் ஆண்டு வரையத் தொடங்கியவர் இதுவரை நான்கு கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். இந்த ஓவியக் கண்காட்சியில் மிக வித்தியாசமான யுக்தியைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்திருக்கிறார் அவர். காட்டில் கிடைக்கும் pandanus எனும் ஒருவகையான தாழையில் வெய்த பாயில் சில ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவரிடம் பேசியபோது, ``பூர்வகுடிகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு தளவாடப் பொருள் என்றால் அது காட்டின் உருப்படிகளைக்கொண்டு அவர்களாலேயே செய்யப்படும் பாய்தான். அதில் நாங்கள் அமர்வோம், உறங்குவோம். எங்களின் ஒவ்வொரு வாழ்கையிலும் இந்தப் பாயின் ஸ்பரிசம் இருக்கிறது. அதைப் பூர்வகுடிகளால்தான் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இன்று பறிபோகும் வனங்களோடு, எங்களின் கைவினைப் பொருள்களும் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்ற ஐயப்பாட்டுக்கு நாங்கள் வந்துவிட்டோம். என்றென்றும் நினைவுகூரும்விதமாக, பண்டனுஸ் தாழையைக்கொண்டு என் அம்மாவையும் அக்காவையும் எங்கள் பாரம்பர்ய பாயைப் பின்னச்செய்து, அதில் பூர்வகுடிகள் சம்பந்தப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன். பூர்வகுடிகளின் வலியாகவும் குரலாகவும் அந்த ஓவியங்கள் இருக்கின்றன” என்றார்.

கோயோக்
கோயோக்

``நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சில மேம்பாட்டாளர்கள் எனது இருப்பிடத்தைச் சுற்றியுள்ள காட்டில், மரம் வெட்டும் இயந்திரங்களைக்கொண்டு மரங்களை அறுத்து, அவை அடுக்கப்பட்டு லாரிகள் சுமந்து செல்லும் அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை ஓவியத்தில் பேசுகிறேன்.

அந்நியர்களின் ஊடுருவலால் கிராம சாலைகள் எவ்வாறு சேதமடைந்தன என்பதும், அவர்களால் கிராமவாசிகள் வெளியே வருவது மிகவும் கடினமாக இருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அதையும் பேசியிருக்கிறேன்.

இளம் பூர்வகுடியை வனத்தின் பாதுகாவலர்களாக நான் பார்க்கிறேன். அந்நிய சக்திகளால் மலேயா புலிகள் வேட்டையாடப்பட்டு, இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. ஆனால், நான் பூர்வகுடியை வனத்தின் பாதுகாவலர்களாக, ஒரு புலியாகப் பார்க்கிறேன். இந்தக் கூற்றை அறியப்படுத்த எனது 'மெண்ட்ராக்’ எனும் ஓவியத்தில் ஒரு பூர்வகுடியின் குழந்தை முகத்தில் புலியை வரைந்திருக்கிறேன்.

விரைவாக நவீனமயமாக்கப்பட்ட மலேசியாவில், நான் எப்போதும் என் மக்கள் எதிர்கொள்ளும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் என் படைப்புகளின் மூலமாகப் பேச முயல்கிறேன். எங்களின் வாழ்க்கை இயற்கைச் சூழலுடன் தொடர்புகொண்டிருக்கிறது. நவீன நுகர்வோர் மற்றும் பாரம்பர்ய வாழ்க்கை முறைகளுக்கு இடையிலுள்ள பூர்வகுடிகளின் ஏற்றத்தாழ்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

தன்னைத் தானே வரைந்துகொண்ட கோயோக்
தன்னைத் தானே வரைந்துகொண்ட கோயோக்

எனது கலை, எனது மக்கள், நாங்கள் வளர்ந்த மழைக்காடுகள் இயற்கையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று ஷாக் கோயோக் பேசி முடிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் அதன் தாக்கத்தை உணர முடிந்தது.

இந்த ஓவியக் கண்காட்சியில் மொத்தம் 16 ஓவியங்கள், ஆறு பூர்வகுடி இனக்குழுவின் கதைகளைப் பேசுகின்றன. ஒரு ஓவியத்தில் தன்னையே வரைந்திருக்கிறார் கோயோக். ஆனால், அந்த ஓவியத்துக்கு அவர் வாயை வரையவில்லை. அதன் அர்த்தத்தைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. ``குரல்கள் அற்றவர்களின் வலியை வேறு எப்படி தெரியப்படுத்துவது. நான் ஒரு பூர்வகுடி. எனக்கு இயற்கையோடு வலுவான தொடர்பு உள்ளது. நான் மழைக்காலத்திலும் காட்டில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறேன். காடு எனக்கும் என் நண்பர்களுக்கும் விளையாட்டு மைதானமாக இருந்தது. இந்தப் பழைய நினைவுகள் என்னைத் தொந்தரவு செய்தபடி இருக்கின்றன” இப்படிக் கூறி என்னிடமிருந்து விடைபெற்றார் ஷாக் கோயோக்.

36 வயதான ஷாக் கோயோக், ஒரு பட்டதாரி. பூர்வகுடி மக்களுக்கான சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து யோகி!

அடுத்த கட்டுரைக்கு