Published:Updated:

`கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்'- குல்பூஷன் ஜாதவ் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

ராம் பிரசாத்

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை இன்று சந்தித்து பேசினார்.

 Kulbhushan Jadhav
Kulbhushan Jadhav

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா இன்று சந்தித்து பேசினார். குல்பூஷண் ஜாதவ் இந்திய கப்பல் படையில் கமாண்டராக பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து விலகியதாகவும் இரானில் சொந்தமாக பிசினஸ் செய்து வந்ததாக இந்தியா கூறுகிறது. இந்தியாவின் இந்த கூற்றை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. குல்பூஷன் ஜாதவ் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வில் பணியாற்றி வருவதாவும் பாகிஸ்தானில் உளவு பார்த்தாக அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

 Kulbhushan Jadhav
Kulbhushan Jadhav

பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. குல்பூஷண் ஜாதவிற்கு எதிராக போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய உளவாளியாக பாகிஸ்தான் சித்திரித்து வருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது. இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என 2019 ஜூலை மாதம் உத்தரவிட்டது. சர்வதேச ஒப்பந்தங்களின் படி அவருக்கு கிடைக்க வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா, சிறையில் இருக்கும் குல் பூஷண் ஜாதவ் இடையேயான சந்திப்பு இன்று நடந்தது. குல்பூஷணுக்கு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட அவருடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு நடப்பது இதுவே முதல் முறையாகவும். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரங்கள் நடந்தது.

 Kulbhushan Jadhav
Kulbhushan Jadhav

இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “ குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கிறது. ஜாதவ் மீது அவர்கள் சுமத்திய அந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள அவரை நிர்பந்திப்பதாக தெரிகிறது. இதன் காரணம் அவர் கடுமையான மன அழுத்ததில் இருக்கார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.