Published:Updated:

கரூர்: அடைக்கப்பட்ட சாலை; திறக்காத நகராட்சி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர்கள் போராட்டம்

போராட்டத்தில் இளைஞர்கள்
போராட்டத்தில் இளைஞர்கள் ( நா.ராஜமுருகன் )

கோபமான குளித்தலைப் பகுதி இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தாத குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு குளித்தலை திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கரூர் மாவட்டம், குளித்தலை உழவர்சந்தை, ரயில்வே கேட் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள ஒரு பகுதி இடம் தனிநபர் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கிறது. நீதிமன்றம் மூலம் அவருக்கு அந்த இடம் சுவாதீனம் எடுத்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து தனக்குச் சொந்தமான அந்த இடத்தில் கம்பிவேலி போட்டு சாலையை அடைத்துவிட்டார். இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ரயில் நிலையம், நூலகம், பள்ளிகள், உழவர் சந்தை என மக்கள் சென்று வர பயன்படுத்திய முக்கிய சாலையாக இருந்தது.

அடைக்கப்பட்ட புறவழிச்சாலை
அடைக்கப்பட்ட புறவழிச்சாலை
நா.ராஜமுருகன்

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்கு இந்த வழியாக வந்து சென்றனர். மினி பேருந்துகளும் சென்று வந்தன. இந்த சாலையை மூடியதால் குளித்தலை நகரத்துக்கு செல்வதற்கு சுமார் 2 கீலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலில் குளித்தலை நகரம் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சாலையை பொது பயன்பாட்டுக்காக திறக்க வழி வகை செய்ய வலியுறுத்தி வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம், `அந்த சாலையை பொதுமக்கள் எப்போதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று உத்தரவிட்டது. அந்த தனிநபருக்கு உண்டான இழப்பீட்டுத் தொகையை நகராட்சி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், குளித்தலை நகராட்சி நிர்வாகம், இந்த பாதையை திறக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்தது.

போராட்டத்தில் இளைஞர்கள்
போராட்டத்தில் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

இதனைக் கண்டித்தும், 'உடனடியாக இந்த பாதையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தியும், குளித்தலை பகுதி, இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், நகராட்சி நிர்வாகம் சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கரூர்: `போலி ஆவணம்; எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தகுதிநீக்கம் செய்ய மனு!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

இதனால், கோபமான குளித்தலைப் பகுதி இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தாத குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, குளித்தலை காவல்துறையினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். அடைக்கப்பட்ட சாலையை உடனடியாக திறக்க வேண்டுமெனவும், இல்லையெனில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். காலையில் ஆரம்பித்த போராட்டம் மதியம் கடந்தும் தொடர்ந்தது. அங்கேயே சமைத்துகச் சாப்பிட்டனர்.

மதிய உணவு சாப்பிடும் இளைஞர்கள்
மதிய உணவு சாப்பிடும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

மாலை ஐந்தரை மணி வரை போராட்டம் தொடர்ந்தது. மற்றொருபுறம், அமைதி பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. குளித்தலை உழவர் சந்தை புறவழிச்சாலையை மீட்க நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு, குளித்தலை நகராட்சி பொறுப்பு ஆணையர் ராதா, பாதையை மீட்க கடிதம் கொடுத்தார். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திங்கள் கிழமை காலை 11 மணிக்கு, உழவர் சந்தை புறவழிச் சாலையை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதாக, குளித்தலை நகராட்சி பொறுப்பு ஆணையர், காவல்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். அதனால், காலையிலிருந்து இளைஞர்களால் நடத்தப்பட்ட காத்திருப்பு போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், நம்மிடம் பேசிய போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களில் ஒருவரான சுந்தர்,

``நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் சாலையை திங்கள் கிழமை (12/04/2021) காலை 11 மணிக்கு சாலையை திறப்பதாக உத்தரவாதம் கொடுத்ததால், நாங்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறோம்.

சுந்தர்
சுந்தர்
நா.ராஜமுருகன்

ஆனால், சொன்னபடி சாலையை திறக்காவிட்டால், மறுபடியும் திங்கள் கிழமையில் இருந்து இன்னும் தீர்க்கமாக போராட்டத்தில் குதிப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு