Published:Updated:

பூமழை தூவ... புரோக்கர்கள் வாழ்த்த ஆர்.டி.ஓ பதவியேற்கிறார்!

முக்கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
முக்கண்ணன்

கும்பகோணம் கிறுகிறு

சுற்றிலும் ஆதரவாளர்கள் புடைசூழ நின்றிருக்கிறார் அந்த மனிதர். பரிவட்டம் கட்டி அம்மனுக்குச் சாத்துவதுபோல கழுத்துகொள்ளாத மாலைகள் அணிந்து, மந்தகாசப் புன்னகையைச் சிந்துகிறார் அவர். கோயில் குருக்கள் வேதமந்திரங்களை ஒலிக்க... சுற்றிலுமிருப்பவர்கள் பயபக்தியுடன் அவர்மீது பூக்களைச் சொரிந்து புஷ்பாஞ்சலி செய்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஏதோ ஓர் ஆன்மிக ஆசிரமத்திலோ, கோயிலிலோ சாமியார் ஒருவருக்குத்தான் இத்தனை மாலை, மரியாதை என்று நினைக்கத் தோன்றியது... ஆனால், “அவர் சாமியாரும் அல்ல... அந்த இடம் ஆசிரமும் அல்ல... கும்பகோணம் ஆர்.டி.ஓ-வாக இடமாறுதல் பெற்றுவந்த அதிகாரிக்கு, ஆர்.டி.ஓ அலுவலகத்திலேயே புரோக்கர்கள் செய்த சிறப்பு பூஜைதான் இது” என்று சொல்லி தலை கிறுகிறுக்கவைக்கிறார்கள் ஆர்.டி.ஓ அலுவலக வட்டாரத்தில்!

பூமழை தூவ... புரோக்கர்கள் வாழ்த்த ஆர்.டி.ஓ பதவியேற்கிறார்!

கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பாலாவிடம் பேசியபோது, இவர் தொடர்பான பல்வேறு தகவல்களை புட்டு புட்டு வைத்தார். ‘‘பண்ருட்டியைப் பூர்வீகமாகக்கொண்ட முக்கண்ணன், கடந்த 2014 முதல் 2017 வரை கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ-வாகப் பணியாற்றினார். ‘வசூல் ராஜா’ என்று பெயரெடுத்தவருக்கு, ‘பேப்பர்’கள் எதுவும் முக்கியமில்லை... கேட்கிற ‘நோட்டை’ தட்டிவிட்டால் எந்த வேலையாக இருந்தாலும் கனகச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடுவார். இதனால், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், புரோக்கர்கள் தோளில் கை போடாத குறையாக முக்கண்ணனுடன் வலம்வந்தார்கள். ஆனால், நோட்டு தராவிட்டால் எட்டல்ல... பதினாறு போட்டால்கூட வேலை நடக்காது. இது பற்றிய புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வரை சென்றும், எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கேயும் அவர் ‘கவனித்துவிட்டார்’ என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் முக்கண்ணனுக்கு எதிரான புகார்கள் அதிகரிக்க... அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயாரானது லஞ்ச ஒழிப்புத்துறை. இதைத் தெரிந்துகொண்ட முக்கண்ணன், அதிலிருந்து தப்பிக்க கடலூருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் விருதுநகர், சிதம்பரம் ஆகிய ஊர்களில் பணியாற்றிவிட்டு மீண்டும் கடலூர் சென்றார். ஆனால், கும்பகோணம் அளவுக்கு வசூல் மழை இல்லாததால், கோயில் நகரத்தின் மீது அவருக்குத் தீராத ஆசை இருந்தது. இந்தநிலையில்தான், இவர் கடலூரில் பணிபுரிந்தபோது இவரது வசூல் வேட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ‘புரோக்கர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதில் பெரும் சர்ச்சை வெடிக்கவே அதிலிருந்து தப்பிக்க, தனக்கு நெருக்கமான தி.மு.க வி.ஐ.பி மூலம் ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து, மீண்டும் கும்பகோணத்துக்கே வந்துவிட்டார்.

பூமழை தூவ... புரோக்கர்கள் வாழ்த்த ஆர்.டி.ஓ பதவியேற்கிறார்!

இதையடுத்து சமீபத்தில் அவர் கும்பகோணத்தில் பதவியேற்றுக்கொண்டபோது நடந்ததுதான் மேற்கண்ட `பூச்சொரிதல்’ வைபோகம். இதில் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தியவர்கள், பிரபல குருக்களை ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கே அழைத்துவந்து, பரிவட்டம் கட்டி, கோயிலில் மூலவருக்குச் சாத்தப்பட்ட மாலைகளை முக்கண்ணனுக்கு அணிவித்து, புஞ்பாஞ்சலி செய்திருக்கிறார்கள். வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள், ‘தலைவா, நீங்க வந்துட்டீங்க... இனிமே எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை’ என்று சால்வை போர்த்தி கட்டித் தழுவியிருக்கிறார்கள்.

அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய அரசு அதிகாரி முக்கண்ணன், விதிகளை மீறி புரோக்கர்களை உள்ளே அனுமதித்து, அரசு அலுவலகத்தை பூஜையறையாக மாற்றியிருக்கிறார். இந்தச் செயலே, அவர் விதிகளைத் துளியும் மதிக்க மாட்டார் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, முக்கண்ணனின் சொத்து மதிப்புகளை ஆராய வேண்டும். குறிப்பாக, அவரை கும்பகோணத்திலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

பூமழை தூவ... புரோக்கர்கள் வாழ்த்த ஆர்.டி.ஓ பதவியேற்கிறார்!

பூச்சொரிதல் வைபவம் பற்றி முக்கண்ணனிடம் கேட்டால், ‘‘நான் பதவியேற்றபோது டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், டீலர்கள் என்று பலர் மரியாதை நிமித்தமாகப் பார்க்க வந்தார்கள். அப்போது யாரோ என்மீது பூக்களைத் தூவினார்கள். அதை என்னால் தடுக்க முடியவில்லை. அதேசமயம், என்மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக, ‘பணம் கொடுத்து டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்’ என்று தவறான தகவலைப் பரப்புகிறார்கள். நான் பணியில் இருந்த ஊர்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஒரு ரெய்டுகூட நடந்ததில்லை. அந்த அளவுக்குக் கறாராக இருப்பேன். ஏற்கெனவே கும்பகோணத்தில் இருந்தபோது ஆர்.டி.ஓ அலுவலகத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். புரோக்கர்களை உள்ளேயே விட மாட்டேன். நான் மீண்டும் வந்துவிட்டதால் சம்பாதிக்க முடியாது என்று நினைத்த புரோக்கர்கள்தான் எனக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்’’ என்றார்.

திரும்பவும் அந்த வீடியோவைப் பாருங்க ஆபீஸர்... நீங்க சொல்ற ஸ்டேட்மென்ட்டை நீங்களே நம்ப மாட்டீங்க!