Published:Updated:

விபத்தில் கால்கள் உடைந்த ஆடு; பைப் மூலம் சக்கர கால்கள்; குழந்தை போல் பராமரிக்கும் இளைஞர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அடிப்பட்ட குட்டி ஆடு வண்டியில்
அடிப்பட்ட குட்டி ஆடு வண்டியில்

பெரும் சிரத்தை எடுத்து கால்கள் உடைந்த ஆட்டுக்குட்டியை குழந்தையைப் போல் எண்ணி பராமரித்து வரும் இளைஞரான சைமனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் செல்லமாக வளர்த்த ஆட்டுக்குட்டிக்கு அடிப்பட்டு நடக்க முடியாமல் தவித்ததைக் கண்டு மனம் துடித்து பிளாஸ்டிக் பைப் மூலம் ஆட்டுக்காகவே ரூ. 1,000 செலவில் வண்டி ஒன்றைத் தயார் செய்து நடக்க வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த பலரும் அந்த இளைஞரைப் பாராட்டி வருகின்றனர்.

ஆட்டுக்குட்டியுடன் சைமன்
ஆட்டுக்குட்டியுடன் சைமன்

கும்பகோணம் ஆண்கள் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சைமன். பி.சி.ஏ படித்துள்ள இவர் வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய், ஆடு, மாடு, முயல் போன்றவற்றை வளர்த்து வருகிறார். உடன் பிறந்தவர்களைப் போல் அவற்றின் மீது மிகுந்த பரிவு காட்டி வேண்டியதைச் செய்து கொடுத்து வளர்ப்பதை அறிந்த பலரும் இளைஞரான சைமனை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அவர் வளர்த்த ஆட்டுக்குட்டிகளில், ஒரு குட்டியின் மேல் டூவீலர் மோதியதில் ஆட்டுக் குட்டியின் பின் கால்களின் நரம்புகள் துண்டாகிவிட்டன.

பதறித்துடித்த சைமன் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடினார். ஆட்டை பரிசோதித்த டாக்டர்கள், ``இனி ஆட்டுக் குட்டியால் எழுந்திருக்கவே முடியாது, சாகுற வரைக்கும் ஒரே இடத்துல படுத்தே கிடக்கும்" எனக் கூறியுள்ளனர். உயிராக நேசித்து வளர்த்த ஆட்டுக்குட்டியின் நிலையை எண்ணி சைமன் மனம் வெதும்பினார். எப்படியாது ஆட்டுக்குட்டியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடந்து செல்ல வைக்க வேண்டும் என நினைத்து ஆட்டுக்குட்டிக்காகவே பிளாஸ்டிக் பைப் மூலம் வண்டி ஒன்றைத் தயார் செய்துள்ளார்.

ஆட்டுக்காகத் தயாரான வண்டி
ஆட்டுக்காகத் தயாரான வண்டி

அதில் ஆட்டுக் குட்டியைத் தூக்கி வைத்தால், ஆடு முன் கால்களில் நடந்து செல்கிறது. வீட்டின் பகுதிகளில் உள்ள புல்களை மேய்கின்றது. பெரும் சிரத்தை எடுத்து கால்கள் உடைந்த ஆட்டுக்குட்டியை குழந்தையைப் போல் எண்ணி பராமரித்து வரும் இளைஞரான சைமனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சைமனிடம் பேசினோம், ``நான் சிகப்பு நதி குருதிக்கொடை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி ரத்ததானம் செய்து வருகிறேன். மேலும், தமிழ் கூடு என்ற பெயரில் மாலை நேரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த 1 முதல் 10 வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறேன். ஆடு, மாடு, நாய், முயல் போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறேன். அவற்றையும் எங்க வீட்ல உள்ள ஆளாகத்தான் பராமரிக்குறோம்.

சைமன்
சைமன்

நான் வளர்க்குற இரண்டு ஆடுகளில் குட்டி ஆடு டூவீலரில் அடிப்பட்டிருச்சு. ஆட்டுக்குட்டியின் பின்கால்களில் டூ வீலர் ஏறி இறங்கியதில் வலி தாங்க முடியாமல் ஆட்டுக்குட்டி கத்தியது. எனக்கு அழுகையும் ஆத்திரமும் வர உடனே ஆட்டுக்குட்டியை டாக்டர்கிட்ட தூக்கிட்டு ஓடினேன். ஆட்டை பார்த்த டாக்டர் ஊசி போட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்தார்.

சில நாள்களுக்குப் பிறகும் ஆடு எழுந்திரிச்சு நடக்கவே இல்லை. மீண்டும் டாக்டர்கிட்ட தூக்கிட்டுப் போனேன். அப்ப ஆட்டுக்குட்டியின் கால் எலும்பு கட் ஆகிவிட்டது இனி எழுந்து நடப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறினார். அதன் பிறகும் எப்படியாவது நடக்க வச்சுரணும் என்ற யோசனையில் ஆட்டை தூக்கிட்டு போய் நான்கு டாக்டர்கள் வரை காண்பிச்சேன் எல்லோரும் கைவிரித்துவிட்டனர்.

ஆடு
ஆடு

அருகிலிருந்தவர்கள் நடக்காத ஆட்டை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போற கசாப்பு கடைக்கு வித்துடுனு யோசனை சொன்னாங்க. பொதுவாக, நாங்க வீட்டில் வளர்க்குற பிராணிகளை விற்பனை செய்கிற பழக்கம் எங்களுக்கு இல்ல. அதோடு உயிருக்கு உயிரா வளர்த்த இந்த ஆட்டுக்குட்டியை எப்படி விற்க முடியும்? இருக்குற வர என்னோடு இருக்கட்டும் எனக் கூறிவிட்டேன்.

பின்னர் மரவேலை செய்யும் ஆசாரி மூலம் ஆட்டுக்குட்டிக்காக வண்டி ஒன்றை ரெடி செய்தேன். நான் ஆடு மேல வச்சிருந்த பாசத்த பார்த்துட்டு அவர் வண்டி செஞ்சதுக்கு காசே வாங்கிக்கல. ஆனால், வண்டி வெயிட்டாக இருந்ததால் அதை இழுத்துக்கொண்டு ஆட்டால் நடக்க முடியவில்லை. பின்னர் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பிளாஸ்டிக் பைப்பால் வண்டி செய்தால் ஈசியாக இருக்கும் என யோசனை கூறியதுடன் அவரே வண்டியும் ரெடி செய்து தந்தார்.

ஆடு
ஆடு

ரூ.1,000 செலவுல ஆட்டுக்கான வண்டி தயார் ஆனது. அவரும் கூலி எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. வாயில்லா ஜீவன்கள் மீதும் பரிவு காட்டி மனித நேயத்துடன் அவர்கள் நடந்து கொண்டது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பிறகு ஆட்டுக்குட்டியை தூக்கி சிறிய பைப் குழாய்கள் மூலம் செய்யப்பட்ட வண்டியில் முன் கால்கள் மட்டும் தரையில் படுகிற மாதிரி வைத்துவிட்டால் போதும். அது மெல்ல இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்து வீட்டை வலம் வந்தது.

எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போனது. அதுக்கு தேவையான புல் போன்ற தீவனத்தை வாங்கி ஒரு இடத்தில் வைத்தால் அது வண்டியுடன் நடந்து சென்று மேய்கிறது. குழந்தையைப்போல் வீட்டை சுற்றி வலம் வருகிறது. மேலும் கால்கள் நிரந்தரமாகக் குணமாகும் என்ற நம்பிக்கையில் தினமும் இரவு முட்டை வெள்ளை கருவை கால்களில் தடவி கட்டுப் போட்டு வருகிறேன். அதோடு இரவு தூங்கும்போது தரையில் படுக்க முடியாது என்பதால் தொட்டில் கட்டி முன் மற்றும் பின் கால்கள் தரையில் படுவது போலவும், உடம்பு பகுதி தொட்டிக்குள் இருப்பது போலவும் படுக்க வைக்கிறேன் வசதியாக இருக்க நன்றாகத் தூங்கிவிடுகிறது.

வண்டியில் ஆடு
வண்டியில் ஆடு
`மொட்டை மாடியில் குறைவான இடத்தில் 350 கோழிகள் வளர்க்கலாம்!' - கலக்கும் சென்னை இளைஞர்

விற்றால் ரூ. 2,000 கிடைக்கும் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், நான் ரூ.1,000 செலவு செஞ்சு ஆட்டுக்குட்டியை நடக்க வச்சுட்டேன். உயிரோடு, உறவோடு கலந்த எந்த உயிரையும் தவிக்க விடக்கூடாது என நினைப்பவன் நான். அதே போல் எந்தத் தருவாயிலும் என்னோட உசுரான ஆட்டுக்குட்டியை குழந்தை போல் பார்த்துக்குவேன்” எனக் கசிந்த கண்களோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு