Published:Updated:

2K kids: குற்றாலக் குறவஞ்சி... மண்ணின் இலக்கியம்!

குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றாலம்

அ.மிக்கேல் ஆசிர் மலைமேரி

2K kids: குற்றாலக் குறவஞ்சி... மண்ணின் இலக்கியம்!

அ.மிக்கேல் ஆசிர் மலைமேரி

Published:Updated:
குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றாலம்

குற்றாலம் என்பதை ஒரு சுற்றுலாத் தலமாக நாம் அறிவோம். குற்றாலம், தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பதையும், அதில் மொழி நயத்துடன் கூறப்பட்டிருக்கும் அந்த நிலப் பரப்பின் பெருமைகளையும் பற்றிப் பகிர்கிறார், தென்காசியை அடுத்த வெய்க்காலிப்பட்டியில் உள்ள புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இர.ரேச்சல் மேனகா.

இர.ரேச்சல் மேனகா
இர.ரேச்சல் மேனகா

இலக்கியத்தில் இடம்!

தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்று, குற்றாலக் குறவஞ்சி. ஊரின் சிறப்பையும், அங்குள்ள தெய்வமான குற்றாலநாதரின் பெருமையையும், காதலின் களிப்பையும் மொழியழகுடன் ரசிக்கும்படி சொல்கிறது குற்றாலக் குறவஞ்சி. பள்ளி, கல்லூரிப் பருவத்தில் செய்யுள் பாடமாக நீங்கள் படித்த இந்த இலக்கியம் பற்றி, ஒரு ரீகேப் இங்கே...

ஏன் இந்தப் பெயர்?!

குற்றால மண்ணின் தலைவி வசந்தவல்லி, தலைவனான குற்றாலநாதர் மீது காதல் கொள்கிறாள். அந்தக் காதல் நிறைவேறுமா எனக் குறி சொல்லும் வேடர் குலப் பெண்ணிடம் கேட்கிறாள். தலைவி காதலின் தவிப்பையும், அவள் காதல் கொண்ட குற்றாலநாதரின் சிறப்பு பற்றியும் எடுத்துச் சொல்கிறாள் வேடர் குலப் பெண். மேலும், தலைவியின் திருமண எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லி, அவளிடம் பரிசு பெறுகிறாள். இதுவே ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலுக்கான பெயர்க் காரணம்.

துள்ளலான ஓசை நயம்!

‘குற்றாலக் குறவஞ்சி’யின் ஆசிரியர், திரிகூடராசப்பக் கவிராயர். தென்காசி மாவட்டம், மேலகரம் என்னும் ஊரைச் சேர்ந்த இவர், குற்றாலத்தின் இயற்கை எழில், அருவியின் சிறப்புகள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை பின்வரும் தலைமுறைக்கும் கடத்த, அந்தத் தகவல்களை எல்லாம் ஓர் இலக்கியமாகப் படைத்தார். குறிப்பாக, துள்ளலான ஓசை நயத்துடன் ஆசிரியர் அமைத் திருக்கும் பாடல்கள் அதன் தனிச் சிறப்புகளில் ஒன்று. உதாரணமாக...

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே


மேற்கண்ட பாடலில், குற்றால மலையில் குரங்குகள் பறித்துச் சிதறும் பழங்களை தேவர்கள் வேண்டிக் கேட்பதாகவும், சித்தர்கள் குற்றால மலையில் மூலிகைகள் வளர்ப்பதாகவும், அருவியின் தண்ணீர் அலைகளாக வான்வரை எழும்பு வதால் சூரியனாரின் தேர்ச்சக்கரங்கள் வழுக்குவதாகவும், சந்த நயத்துடன் தன் மலையின் சிறப்பைச் சொல்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர்.

2K kids: குற்றாலக் குறவஞ்சி... மண்ணின் இலக்கியம்!

மூலிகைகளும் மருத்துவமும்!

பொதுவாக, உடம்புக்கு சரியில்லாதவர்களை அருவிகளில் குளிக்க வைத்தால் குணம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்டு. காரணம், அந்த மலை முழுக்கச் செழித்திருக்கும் மூலிகைகளின் வழி பாய்ந்தோடி வரும் அருவியின் நீரில் குளிக்கும்போது, அந்த மூலிகைகளின் பலன் கிடைக்கும் என்பதே. அப்படி, கல்தாமரை, கஸ்தூரி மஞ்சள், தேவதாரு, அழுகண்ணி என்று குற்றாலத்தில் இருக்கும் பல அரிய மூலிகைகளைப் பட்டியலிட்டு, குற்றாலத்தில் நீராடுவதன் சிறப்பைச் சொல்கிறது குற்றாலக் குறவஞ்சி.’’

அடுத்த முறை குற்றாலம் செல்லும்போது குறவஞ்சி யின் ஞாபகமும் வரும் தானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism