தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

"லேடி டாக்டர்ஸ்!" - மறைக்கப்பட்ட இந்திய பெண் மருத்துவர்களின் கதை

ஆனந்திபாய் ஜோஷி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்திபாய் ஜோஷி

பெண் மருத்துவர்களைப் பத்தின தகவல்களைத் திரட்டறது பெரிய சவாலா இருந்தது. இவங்களை பத்தின நினைவுக் குறிப்புகளும் பதிவுகளும் ரொம்ப கம்மியா இருந்தது.

‘லேடி டாக்டர்ஸ்’ - தி அன்டோல்டு ஸ்டோரீஸ் ஆஃப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் வுமன் இன் மெடிசின்... - பெருந் தொற்றுக் காலத்தில் கவனம் ஈர்க்கிறது இந்தப் புத்தகம். லண்டன்வாழ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதா ராவ் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு.

இப்போது இப்படியொரு புத்தகம் எழுதியதன் பின்னணியோடு, அதென்ன ‘லேடி டாக்டர்ஸ்... வேண்டுமென்றே வைக்கப்பட்ட தலைப்பா?’ என்ற கேள்வி யையும் சேர்த்து கவிதா ராவிடம் பேசினோம்.

``2017-ம் வருஷம் ருக்மாபாய் ரவுட்டின் 150-வது பிறந்ததினத்துக்கான டூடுல் என் கண்கள்ல பட்டது. அவங்களைப் பத்தி எனக்கு அதிகம் தெரியலை. அதனால கொஞ்சம் தகவல்கள் திரட்டினேன். அவங்களைப் போலவே ஏராளமான பெண் மருத்துவர்கள் இருந்ததும் அவங்களை பத்தி யெல்லாம் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாத தும் புரிஞ்சது. அப்போ நான், பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளர் ஆஞ்சலா சைனி எழுதின ‘இன்ஃபீரியர்’ புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அது பெண்கள், விஞ்ஞானத்துலேருந்து எப்படி மொத்தமா காணாமல் போகச் செய்யப் பட்டாங்கனு பேசும். சார்லஸ் டார்வின்கூட பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விடச் சிறியதுனு நம்பினாரே... அப்பதான் இப்படியொரு புத்தகம் எழுதறதுக்கான விதை மனசுல விழுந்தது.

‘லேடி டாக்டர்ஸ்... டாக்டர்னாலே ஆண் தான்னு நினைக்கப்பட்ட காலத்துல மருத்துவர் களா சாதிச்ச பெண்களை லேடி டாக்டர்ஸ்னு குறிப்பிடணும்னு வேணும்னுதான் அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தேன்’’ - வார்த்தை யின் வலிமை உணர்த்தினார் கவிதா.

இந்தப் புத்தகம் பேசும் ஆறு மருத்துவர்களையும் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தீங்க?

வெஸ்டர்ன் மெடிசின் படிச்ச முதல் இந்தியப் பெண் ஆனந்திபாய் ஜோஷியிலேருந்து ஆரம்பிச்சேன். அடுத்து முதல் முதல்ல டாக்டரா ப்ராக்டிஸ் பண்ணின இந்தியப் பெண் கடம்பிணி கங்குலியைத் தேர்ந்தெடுத் தேன். சாதியப் பாகுபாடு, குழந்தைத் திரு மணம், பழைமைவாத விமர்சனங்கள்னு எக்கச்சக்க சர்ச்சைகளையும் சவால்களையும் கடந்து வந்த வீரப் பெண்ணா தெரிஞ்சாங்க ருக்மாபாய் ரவுட். இந்து திருமணம் என்பது புனிதமான சடங்கா கருதப்பட்ட அந்தக் காலத்துல துணிஞ்சு கணவரை விவாகரத்து செய்து, லண்டனுக்குத் தப்பிச்சுப் போய், மருத்துவம் படிச்சாங்க. மேற்கு வங்க கிராமங்கள்ல மருத்துவரா வேலைபார்த்த அனுபவங்களை அற்புதமா பதிவு பண்ணி யிருந்த ஹைமாபடி சென், முத்துலட்சுமி ரெட்டி, மேரி பூனென் லுகோஸையும் சேர்த்துக்கிட்டேன்.

"லேடி டாக்டர்ஸ்!" - மறைக்கப்பட்ட இந்திய பெண் மருத்துவர்களின் கதை

புத்தகம் எழுதினபோது நீங்க சந்திச்ச சவால்கள் என்ன?

பெண் மருத்துவர்களைப் பத்தின தகவல்களைத் திரட்டறது பெரிய சவாலா இருந்தது. இவங்களை பத்தின நினைவுக் குறிப்புகளும் பதிவுகளும் ரொம்ப கம்மியா இருந்தது. ஏன்னா, வரலாறு எப்போதும் ஆண்களைப் பற்றி ஆண்களால எழுதப் பட்டதாகவே இருந்தது. பெருந்தொற்றுக் காலத்துல பெரும்பாலான லைப்ரரிக்கள் மூடப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மருத்து வர்களின் உறவினர்கள், நண்பர்கள்னு யார் கிட்டயாவது பேச முடியுமானு முயற்சி பண்ணினேன். முடியலை. சந்திச்ச சிலர் கிட்டயும் குறைவான நினைவுகளே இருந்தன.

ஆன்லைன்ல ரிசர்ச் செய்தும், வெளி நாடுகள்ல உள்ள என் நண்பர்கள் உதவியோடும் தகவல்களைச் சேகரிச்சு, பல சவால்களைக் கடந்து புத்தகத்தை முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடங்களாச்சு.

இந்தப் பெண்களுக்கு ஆண்களின் ஆதரவு எந்தளவுக்கு இருந்திருக்கு?

ஆனந்திபாயின் கணவர் அவங்களை வெளிநாட்டுக்குப் படிக்க அனுமதிச்சவரா இருந்தாலும் அவங்களை அடிக்கிறதும் கட்டுப் படுத்தறதுமா இருந்திருக்கார். ருக்மாபாயும் கணவரை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு நடையா நடந்திருக்காங்க. ஹைமா பட்டிக்கு ஒருமுறை குழந்தைத் திருமணம், வளர்ந்த பிறகு இன்னொரு திருமணம் நடந்திருக்கு. குழந்தை களுக்கு சாப்பாடு கொடுக்கவே போராடியிருக் காங்க. அதே நேரம் கடம்பிணி, மேரி, முத்து லட்சுமி ரெட்டி மாதிரி சிலரின் கணவர்கள் ரொம்பவே ஆதரவா இருந்ததையும் குறிப்பிட ணும்.

"லேடி டாக்டர்ஸ்!" - மறைக்கப்பட்ட இந்திய பெண் மருத்துவர்களின் கதை

மருத்துவர்களா இருந்தாலும் மக்களின் நம்பிக்கை யைப் பெறுவது இவங்களுக்கு சவாலா இருந்ததைப் புத்தகத்துல குறிப்பிட்டிருக்கீங்களே...?

ஆமாம். காரணம், அவங்க பெண்கள். சிலர் வெளிநாடுகள்ல படிச்சவங்க. கர்ப்பமா இருந்த ஓர் ஆட்டை, தன் மருத்துவமனைக்குத் தூக்கிட்டு வந்து அதுக்குப் பிரசவம் பார்த்து, தன்னால மனுஷங்களுக்கும் பிரசவம் பார்க்க முடியும்னு நிரூபிச்சுதான் மக்கள் நம்பிக் கையைப் பெற்றிருக்காங்க ருக்மாபாய்.

இவங்கள்ல பலரும் கடுமை யான பஞ்சத்தின் போதும், பெருந் தொற்றுக் காலத்திலும் மருத்துவம் பார்த்திருக்காங்க. கொரோனா காலத்துல இது நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

விஞ்ஞானத்தின் மேல நம்பிக்கை வைக்க வேண்டி யதன் அவசியத்தை இவங்க அனுபவங்கள் உணர்த்துது. மாஸ்க் அணிவது, தடுப்பூசி போட்டுக்கறது, தனிமனித இடைவெளியைப் பின்பற்று வதெல்லாம் நம்ம நன்மைக் கான விஷயங்கள். சூரத்ல பிளேக் நோய் வந்தபோது ருக்மாபாய் மக்களுக்காக வேலை பார்த்தாங்க. பஞ்சம் தலைவிரிச்சாடின காலத்துல வேலை பார்த்தவங்க ஹைமாபடி. அந்த அனுபவம் தான் அவங்களை சமூக சேவையின் பக்கம் ஈர்த்து, 300 குழந்தைகளை தத்தெடுக்க வெச்சது. திருவாங்கூர்ல அம்மைநோய் பரவினபோது தடுப்பூசியின் அவசியத்தைப் பத்தி தைரியமா குரல் கொடுத்தவங்க மேரி பூனென். அவங்க எல்லோருமே நவீன மருத்துவத்தை ஆதரிச்சவங்க.

புத்தகத்துல இடம்பெற்றவங்க மருத்துவர்கள் பெண்ணியவாதிகளா? இன்றுள்ள பெண் மருத்துவர்களின் வாழ்க்கையை எப்படி ஒப்பிடுவீங்க?

விஞ்ஞான படிப்புக்கும் சம ஊதியத்துக்கும் பெண்களும் தகுதியானவங்கனு நம்பி, மருத்துவத்துல பெண்களுக்கும் இடமிருக்குனு நிரூபிச்ச இந்த ஆறு மருத்துவர்களும் மிகப் பெரிய பெண்ணியவாதிகள்தான்.

உதாரணத்துக்கு சில விஷயங்களைச் சொல்லலாம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அப்பா நாராயணசாமி ஐயர். அவங்க அம்மா சந்திராம்மாள் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவங்க. நாராயணசாமி, மகாராஜா காலேஜ்ல ஹெட் மாஸ்டரா வேலை பார்த்தவர். அது ஆண்கள் கல்லூரி. ஆனாலும் தன் மகளையும் அதே காலேஜ்ல சேர விண்ணப்பிக்கச் சொன்னார். புதுக்கோட்டை ராஜாவும் அதுக்கு அனுமதி கொடுத்தாராம். அப்புறம் முத்துலட்சுமி ரெட்டி, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்து 1912-ம் வருஷம் மருத்துவப் படிப்பை முடிச்சாங்க. கல்யாணம் பண்றதுல அவங்களுக்குத் தயக்கம் இருந்திருக்கு. தன்னை சமமா நடத்தணும்னு வாக்குறுதி வாங்கினபிறகுதான் டாக்டர் சுந்தர ரெட்டியை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்காங்க. கணவரின் ஊக்கம் இருந்தபோதும், மருத்துவம் படிக்கிற பெண்கள் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுனு தன் சுயசரிதையில முத்துலட்சுமி ரெட்டி எழுதியிருக்காங்க. குடும்பத்தையும் வேலையையும் பேலன்ஸ் பண்ண முடியாத காரணத்தையும் குறிப்பிட்டிருக்காங்க.

1925-ம் வருஷம் முத்துலட்சுமி ரெட்டி, அரசு ஸ்காலர்ஷிப்ல யுகே போனாங்க. பிரிட்டிஷ் மருத்துவமனைகளின் செயல்பாடுகளால ரொம்பவே ஈர்க்கப்பட்டாங்க... குறிப்பா அங்கே கொடுக்கப் பட்ட புற்றுநோய் சிகிச்சைகளைப் பார்த்து. அதுதான் அவங்க பின்னாள்ல அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கறதுக்கான ஆரம்பம்.

"லேடி டாக்டர்ஸ்!" - மறைக்கப்பட்ட இந்திய பெண் மருத்துவர்களின் கதை

பெண்களுக்கேற்ற மரியாதைக்குரிய துறையா மருத்துவம் இன்னிக்கு மாறியிருக்கு. ஆனா, பெரும்பாலான பெண்களும் மகப்பேறு மருத்துவம் மாதிரியான சுலபமான பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கறாங்க. இதயநோய் துறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் எத்தனை பேர்? அது மட்டுமல்ல... பெண்கள் மூளைக்கு பதிலா பெண் என்ற விஷயத்தை தந்திரமா பயன் படுத்தறாங்கனு ஒரு கருத்தும் இங்கே இருக்கு. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை பெண்களும் ஆண்களுக்கு நிகரான திறமை சாலிகள்தான். ஆனா அவங்களுக்கான வாய்ப்புகள், கல்வினு பலதும் கிடைக்கிறதில்லை.

எல்லா பெண் மருத்துவர்களும் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கணும். எந்தப் பெண்ணும் ஒரே ராத்திரியில வெள்ளை உடை தேவதைகளா மாறிடறதில்லை. அதுக்குப் பின்னாடி அவங்களுடைய கடுமையான உழைப்பும் போராட்டமும் இருந்திருக்குனு அவங்களும் புரிஞ்சுக்கணும்.