Published:Updated:

நெல்லை: பணிச்சுமை, அதிகாரிகள் டார்ச்சர்?! - பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

நெல்லையில் பணிச்சுமை காரணமாகவும், உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதால் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகர காவல்துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவருபவர், மகேஸ்வரி. அவரின் கணவர் நுண்ணறிவுப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை உட்கொண்டதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல்துறை
காவல்துறை

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பணியில் வேகமாகவும் திறமையாகவும் செயல்படக்கூடியவர் மகேஸ்வரி. அவர் பணியில் இருக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கவனத்துடன் செயல்படுவார். தீபாவளி போன்ற விழாக்காலங்களில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார்.

பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் காவலர்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. பாளையங்கோட்டையில் முக்கிய அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமானவை இருப்பதால் ஆள் பற்றாக்குறை காரணமாக காவல்துறையினர் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கிறார்கள்.

``20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு!" - வரவேற்பைப் பெறும் மதுரை கமிஷனரின் முயற்சி

அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக போலீஸார் சோர்வடைந்தும், மன உளைச்சலுடனும் பணியாற்றிவருகிறார்கள். அதனால் ஏற்கெனவே நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றும் சப் இன்ஸ்ப்கெடர் அருணாசலம் என்பவர் மன அழுத்தம் குறித்து ஆடியோ வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பின்னர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அக்டோபர் 27-ம் தேதி மன அழுத்தம் காரணமாக விஷமருந்தி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள். மற்றொரு சப் இன்ஸ்பெக்டரும் தற்கொலைக்கு முயன்றார். இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காவல்துறை அதிகாரிகளின் நெருக்கடியும் காரணமாகிவிடுகிறது.

சுதந்திர தின விழா அணிவகுப்பு
சுதந்திர தின விழா அணிவகுப்பு

இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியைப் பொறுத்தவரை கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 2020-ம் ஆண்டு சுதந்திர தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க வந்தபோது திண்டுக்கல் அருகே வசித்த அவரின் தந்தை உயிரிழந்த தகவல் வந்தது. ஆனாலும்கூட, சோகத்தை மனதுக்குள் சுமந்தபடியே அணிவகுப்பைத் தலைமையேற்று நடத்தி முடித்த பிறகே விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றார்.

காவல்துறையில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் மகேஸ்வரிக்கு உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். நகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்ததன் கரணமாகவே அவர் தற்கொலை மனநிலைக்குச் சென்றிருக்கிறார்.

காவல்துறையினருக்கு அதிகாரிகளால் மனதளவில் நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
காவலர்கள்

நெல்லை மாநகரில் இருக்கும் காவல்துறையினருக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்துவதைத் தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு வார விடுமுறை கொடுக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்கள்.

இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ``இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பணியில் இருந்தபோது நகருக்குள் பாரம் ஏற்றிய லாரிகள் அதிகம் வந்திருக்கின்றன. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அவருக்குப் போக்குவரத்து பிரிவு அதிகாரி மெமோ கொடுத்திருக்கிறார்.

அணிவகுப்பில் மகேஸ்வரி
அணிவகுப்பில் மகேஸ்வரி

காவல்துறையில் தவறான செயலுக்காக மெமோ கொடுப்பது வழக்கமான நடவடிக்கைதான். ஆனால் மெமோ கொடுத்ததும் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் ஏதோ விபரீதமான செயலில் இறங்கியிருக்கிறார். இது பற்றி விசாரித்துவருகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு