Published:Updated:

“நான் காளி!” - பவித்ரா பகீர்...

பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
பவித்ரா

‘காளி என்னை மறைச்சுக்கோ’ன்னு கத்தினேன். உடனே நான் மாயமா மறைஞ்சுட்டேன்.

“நான் காளி!” - பவித்ரா பகீர்...

‘காளி என்னை மறைச்சுக்கோ’ன்னு கத்தினேன். உடனே நான் மாயமா மறைஞ்சுட்டேன்.

Published:Updated:
பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
பவித்ரா

“பன்னீருக்கு நான் ஆசி வழங்குனதுனாலதான் அவர் முதல்வரானார்...”, “எடப்பாடி என்னை வரவேற்காததால பதவியை இழந்தார்...”, “எடியூரப்பா அடிக்கடி வந்து ஆசி வாங்கிட்டுப் போறாரு!” - நாடு முழுக்க இருக்கும் அரசியல் பிரமுகர்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை இப்படித் தன்னிடம் ஆசி வாங்கிச் செல்வதாகச் சொல்லி திகைக்கவைக்கிறார் பெண் சாமியார் பவித்ரா!

இத்தனைக்கும் அவருக்கு ஆசிரமம் இல்லை... அட்லீஸ்ட் அலுவலகம்கூட இல்லை. அம்மையாருக்குப் பூர்வீகம் தஞ்சாவூர். வசிப்பது திண்டுக்கல். சமீபத்தில் தஞ்சாவூருக்கு வந்திருந்த பவித்ராவைச் சந்தித்தோம். ஹேர் கலரிங், நெற்றியில் நீளமாகத் தீட்டிவிடப்பட்ட குங்குமம், கழுத்தைத் தாண்டி நீளும் ஏராளமான நகைகள், சுடிதார், ஹை ஹீல்ஸ் செப்பல் என வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளித்தவரிடம், “சாமியார் மேடம், உங்ககிட்ட பேட்டி...” என்றதுமே படாரென வெடித்தார் பவித்ரா. “டோன்ட் கால் மீ சாமியார்... ஐயாம் காளி மாதா!” என்றவர், நாக்கை வெளியே நீட்டி கண்களை உருட்டி நம்மைக் கடித்துவிடுவதுபோல பயமுறுத்தினார்... சில நிமிடங்களில் அவராகவே ஆசுவாசமடைந்தவர் மெதுவாக தனது ஃப்ளாஷ் பேக்கை விவரித்தார்.

“நான் காளி!” - பவித்ரா பகீர்...

“தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கத்துல இருக்குற கரம்பயம்தான் என் பூர்வீகம். சின்ன வயசுலயே திண்டுக்கல்ல செட்டிலாகிட்டோம். சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருந்த காளி கோயில்லதான் எப்பவுமே இருப்பேன். ஒன்பதாவது படிக்குறப்ப எனக்கு திடீர்னு பேச்சு வரலை. ஆபரேஷன் செய்யறதுக்காக ஆஸ்பத்திரியில மயக்க ஊசி போட்டாங்க. எனக்கு மயக்கமே வரலை. ஷாக்கான டாக்டர், இன்னொரு டோஸ் போட்டார். அப்பவும் முழிச்சிக்கிட்டே எனக்கு நடந்த ஆபரேஷனைப் பார்த்தேன். அப்பதான் என்கிட்ட ஏதோவொரு சக்தி இருக்குறது தெரிஞ்சுது.

நான் கோயிலே கதின்னு கிடக்குறேன்னுட்டு ஒருநாள் எங்கப்பா என்னை அடிக்க வந்தார். நான் பயத்துல, ‘காளி என்னை மறைச்சுக்கோ’ன்னு கத்தினேன். உடனே நான் மாயமா மறைஞ்சுட்டேன். அதுதான் காளி மாதாவுக்கும் எனக்குமான முதல் பந்தம். பிறகு எனக்குப் பிடிவாதமா கல்யாணம் செஞ்சு வெச்சுட்டாங்க. ஆனா, ஒருநாள்கூட நான் கணவரோட வாழலை. பூ, பொட்டு, மஞ்சத்தாலினு சுமங்கலியா இருக்கணுங்கிறதுக்காகவே காளியே இந்த ஏற்பாட்டை செஞ்சுருக்காங்கனு புரிஞ்சுக்கிட்டேன்...” என்றவர், தனது வளர்ச்சி குறித்தும் விவரித்தார்...

“நான் காளி!” - பவித்ரா பகீர்...

“நான் குழந்தையா இருக்குறப்பவே அரசியல் தொடர்பு ஏற்பட்டுடுச்சு. நான் கைக்குழந்தையா இருக்குறப்ப திண்டுக்கல்லுக்கு வந்த எம்.ஜி.ஆர்தான் எனக்கு ‘பவித்ரா’ன்னு பேரே வெச்சாரு. ஜெயலலிதா ரெண்டாவது தடவையா முதல்வரானதும் போயஸ் கார்டனுக்குப் போனேன். பயங்கரக் கூட்டம்... என்னால பக்கத்துல போக முடியலை... என்னை கவனிச்ச அம்மா என்னைக் கூப்பிட்டு, ‘தங்கத் தாரகையே’னு சொல்லி என்கிட்ட ஆசி வாங்குனாங்க. அதுக்கப்புறமாத்தான் அவங்களுக்கு கட்சியில ‘தங்கத் தாரகை’ங்கிற பட்டமே கிடைச்சுது. அப்புறம் பன்னீர் சின்னாளப்பட்டியில இருக்குற என்னோட பண்ணை வீட்டுக்கு வந்து ஆசி கேட்டார். நான் ஆசியும் ஒரு ரூபா காசும் கொடுத்த சில நாள்கள்லேயே அவர் முதல்வரானார். அதுக்கு அப்புறமும் அவர் அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போறாரு.

அதேசமயம், வெளிமாநிலத்து ஆளுங்களுக்கு என் அருமை தெரிஞ்ச அளவுக்கு உள்ளூர்க்காரங்களுக்குத் தெரியலை. குஜராத், மேற்கு வங்காளம், பீகார், காஷ்மீர், டெல்லி, சத்தீஸ்கர்னு பல மாநிலங்கள்ல என்னைத் தெரிஞ்சுவெச்சுருக்காங்க. டெல்லியில ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சியில் என்னைக் காளியா தேர்ந்தெடுத்து, ‘அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சார்யா’ பட்டம் கொடுத்தாங்க.

தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, நடிகர் சோனு சூட்டெல்லாம் என்கிட்ட ஆசி வாங்கியிருக்காங்க. உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், பீகார் முதல்வர்களெல்லாம் என்கிட்ட போன்ல ஆசி வாங்கிட்டுத்தான் முக்கியமான வேலைகளைத் தொடங்குவாங்க. எடியூரப்பா தன் மகனோட அடிக்கடி திண்டுக்கல்லுக்கே வந்து ஆசி வாங்கிட்டுப் போறாரு. இப்ப கர்நாடகாவுல எனக்குக் கோயில் கட்டுற வேலைகள்கூட நடக்குது.

எனக்கு டெல்லியில பட்டம் கொடுத்தாங்கன்னு சொன்னேன்ல... அந்தப் பட்டத்தை வாங்கிட்டு ஊரு திரும்புன எனக்கு எடப்பாடி வரவேற்பு கொடுக்கலை... அதான் அவர் ஆட்சியை இழந்தார். பன்னீர் பக்கத்துல இருட்டு இருக்கு... அதை நீக்கிட்டா எல்லா பிரச்னையும் சரியாகிடும். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்னோட தீவிர பக்தர். சசிகலா கணவர் மறைந்த நடராஜனை `மச்சான்னு’தான் கூப்பிடுவேன். அவர் முடியாம இருந்தப்ப என்னைக் கூப்பிட்டிருந்தா நிச்சயம் பிழைக்க வெச்சுருப்பேன். முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காகிட்ட தெய்வ பக்தி இருக்கு. எழுதி வெச்சுக்கோங்க... அவரோ அவரோட மகனோ சீக்கிரமே என்னை வந்து சந்திப்பாங்க.

“நான் காளி!” - பவித்ரா பகீர்...

எனக்கு எங்கருந்து இவ்வளவு சக்தி வந்துச்சுன்னு சிலர் கேட்குறாங்க. அரசியல்ல செயற்குழு கூட்டம்போல, தினமும் நடுராத்திரியில ஈசன் முன்னிலையில் மயானத்துல செயற்குழுக் கூட்டம் நடக்கும். அதுல நானும் கலந்துக்குவேன். அதனாலதான் நான் காளி!” என்று முடித்தவர், “என்னை வந்து பார்த்துட்டீங்கள்ல... இனிமே நீங்க எங்கேயோ போகப் போறீங்க!” என்றபடி ஆசி வழங்கினார். நாம் எங்கும் செல்லாமல் அலுவலகத்துக்கு வந்துவிட்டோம்!